search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபசால் பாதிப்பு: இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை - ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல்
  X

  ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபசால் பாதிப்பு: இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை - ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல்

  ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீங்கி, இயல்பு நிலை திரும்ப ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுப்பதாக அதன் கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறினார்.
  மும்பை:

  உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என நாட்டு மக்களுக்கு கடந்த 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெலிவிஷனில் உரை ஆற்றியபோது வெளியிட்ட அறிவிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

  இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடாக உள்ளதால், சாமானிய மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

  இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், முதன்முதலாக தனது மவுனத்தை கலைத்து, முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
  ரிசர்வ் வங்கி முயற்சி

  அப்போது அவர் கூறியதாவது:–

  ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, நாட்டில் நிலவுகிற நிலைமையை ரிசர்வ் வங்கி தினசரி கண்காணித்து வருகிறது. ரூ.100, ரூ.500 நோட்டுகள் அச்சிடும் பணியை அச்சகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

  மக்களின் உண்மையான வேதனையை தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு தேடித்தந்து, சகஜ நிலையை முடிந்த அளவுக்கு விரைவாக கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கி முயற்சி எடுத்து வருகிறது.

  பொதுமக்கள் ரொக்க பணத்துக்கு பதிலாக பற்று அட்டைகள் (டெபிட் கார்டுகள்), செல்போன் வழியிலான பண பரிவர்த்தனைகளை (டிஜிட்டல் வேலட்) பயன்படுத்த தொடங்க வேண்டும். இது பரிவர்த்தனைகளை மலிவாக்கும், எளிதாக்கும். இது காலப்போக்கில் வளர்ச்சி அடைந்த நாடுகள் போன்று, இந்தியாவும் மிகக்குறைவான ரொக்க பணத்தை பயன்படுத்துகிற பொருளாதார நிலைக்கு மாறுவதற்கு உதவும்.

  வங்கிகள், வியாபாரிகளை பெருமளவில் பி.ஓ.எஸ். கருவிகளை (பொருட்கள் வாங்கி விட்டு ரொக்கமாக பணத்தை செலுத்தாமல், மின்னணு பரிமாற்றத்தில் பணம் செலுத்த உதவும் கருவிகள்) பயன்படுத்த செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி கொண்டிருக்கிறோம். அப்போதுதான் பற்று அட்டைகள் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும்.

  தேவைகளை சந்திக்கிற அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கு, அவற்றை அச்சகங்கள் முழுத்திறனுடன் அச்சடிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
  வங்கி ஊழியர்களுக்கு நன்றி

  ஒவ்வொரு நாளும் வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி பேசுகிறது. சகஜ நிலைமை கொஞ்சம், கொஞ்சமாக திரும்பி வருவதாக வங்கிகள், எங்களிடம் சொல்கின்றன. வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் இருந்து வந்த நீண்ட வரிசைகள் குறைந்திருக்கின்றன. சந்தைகள் செயல்பட தொடங்கி உள்ளன. அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் பற்றாக்குறை என தகவல்கள் எதுவும் வரவில்லை.

  ஏ.டி.எம். எந்திரங்களை மறு சீரமைக்கும் பணியில் சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காகிதப்பணம் கையிருப்பில் உள்ளது. ஒரு சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்தும் விதத்தில், வங்கிகள் பணத்தை எடுத்து, தங்கள் கிளைகளுக்கும் ஏ.டி.எம். எந்திரங்களுக்கும் கொண்டு செல்கின்றன. வங்கி ஊழியர்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

  நிலைமையை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருப்பதும், அல்லலுற்று வருகிற நேர்மையான மக்களின் உண்மையான வேதனையைக் குறைப்பதும் முக்கியம்.

  இந்த பிரச்சினை, இந்த அளவுக்கு சென்றதில் எந்த முன் உதாரணமும் எங்களுக்கு இல்லை.

  பழைய நோட்டின் அளவு, தடிமனுடன் ஒப்பிடுகையில், இப்போது வருகிற புதிய ரூபாய் நோட்டுகள் மாறுபட்டிருப்பது ஏன் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். கள்ள நோட்டுகள் அடிக்க முடியாத அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அளவுக்கு ஒரு மாற்றத்தை நீங்கள் செய்கிறபோது, மிகச் சிறப்பான தரத்தை கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலிடம் எழுப்பிய கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

  கேள்வி:– ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து திரும்பப்பெற வேண்டிய காரணம் என்ன?

  உர்ஜித் பட்டேல் பதில்:– ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் எதற்காக செல்லாது என அறிவிக்கப்படுகின்றன என்பது குறித்த காரணங்களை பிரதமர் நாட்டுக்கு விடுத்த உரையில் தெரிவித்திருக்கிறார். வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வரவும், பொறுப்பு கூற வைக்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் கருப்பு பணத்தை ஒழிப்பேன் என அவர் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்.

  இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கவும், கணக்கில் காட்டாத கருப்பு பணம் குறித்த தகவல்களை தாமாக முன்வந்து கணக்கு அளித்து, வரி கட்ட வைக்கவும், ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரிவிதிப்பை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் வரிகளை செலுத்த வைப்பது, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது இதில் அடங்கும்.

  கணக்கில் வராத பணத்தை பதுக்குவதற்கு மக்கள் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். வரி செலுத்துவதை தவிர்க்க ரியல் எஸ்டேட்டில் பயன்படுத்துகிறார்கள்.
  நீண்ட வரிசை ஏன்?

  கேள்வி:– மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பது ஏன்? வியாபாரம் குறைந்தது ஏன்?

  பதில்:– இது வாழ்நாளில் ஒரு முறை வருவதுதான். நாட்டில் புழக்கத்தில் உள்ள 86 சதவீத ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருந்து அகற்றுவது என்பது மிகவும் அபூர்வமானது.

  ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து வாபஸ் பெறுகிறபோது, அது பற்றிய ரகசியங்களை காக்க வேண்டிது அவசியம். எனவே இப்படிப்பட்ட ஒரு பெரியதொரு நடவடிக்கைக்கு 24 மணி நேரத்தில் எல்லா வங்கிகளையும் தயார்படுத்துவது என்பது மிகக் கடினமானது.
  எப்போது சரியாகும்?

  கேள்வி:– நிலைமை எப்போது சரியாகும் என எதிர்பார்க்கிறீர்கள்?

  பதில்:– நிலைமை சீராகி வருவதாக வங்கியாளர்கள் சொல்கிறார்கள். மாநகரங்களில் ஸ்திரத்தன்மை வந்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தொலைவிடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

  வங்கியியல் நடவடிக்கையில் பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது. கடன்களும் எளிதாக கிடைக்கின்றன. நிலைமையை முடிந்த அளவுக்கு விரைவாக சரி செய்ய விரும்புகிறோம்.

  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
  Next Story
  ×