search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு
    X

    மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு

    மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    புதுடெல்லி:

    மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன.

    இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

    இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15-ந்தேதி அறிவித்தது. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

    இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்றுமுன் தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மும்பையில் அவரது தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் சிலரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர். இதனால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜாகிர் நாயக் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×