search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீசு
    X

    வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீசு

    செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்தவர்களுக்கு வருமான வரி இலாகா நோட்டீசு அனுப்பி உள்ளது.
    புதுடெல்லி:

    செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்தவர்களுக்கு வருமான வரி இலாகா நோட்டீசு அனுப்பி உள்ளது.

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த மதிப்பிலான பணத்தை டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டும் உள்ளது.

    ஆனால், கடந்த 10 நாட்களில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்தான் வாடிக்கையாளர்களால் தங்களது வங்கி கணக்குகளில் மிக அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமான தொகையை வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்து இருக்கின்றனர். இது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியாக இருக்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

    மேலும், ரூ.2½ லட்சத்துக் கும் அதிகமாக டெபாசிட் செய்பவர்கள் வருமான வரி இலாகாவின் அபராத நடவடிக்கையை சந்திக்கவேண்டி இருக்கும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் ஒருவரின் வங்கிக் கணக்கில் 2½ லட்சத்துக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பும் நடவடிக்கையில் வருமான வரி இலாகா இறங்கி உள்ளது.

    இதையடுத்து வருமான வரிச்சட்டம் 133(6)-ன் கீழ் அவர்களுக்கு வருமான வரி இலாகா தனது இணையதளம் மூலம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

    (இந்த சட்டத்தின்கீழ் ஒருவரை தகவல் பெறுவதற்காக வருமான வரி இலாகா நேரில் வரவழைத்து விசாரணை நடத்த இயலும்.)

    நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வசிக்கும் ஏராளமானோருக்கு இந்த நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்த நோட்டீசில் எந்த தேதியில் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டது, அதற்கான ஆதார ஆவணங்கள், புத்தக கணக்குகள் ஆகியவை குறித்தும் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

    இதுபற்றி வருமான வரி இலாகா அதிகாரிகள் கூறியதாவது:-

    பல நகரங்களில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் சந்தேகத்துக்கு இடமான மற்றும் வழக்கத்துக்கு மாறாக, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணம் அதிக அளவில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றி வங்கிகள் எங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது.

    இதுபோல், திடீரென அதிக அளவில் ஒருவரது வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டால் வருமான வரி இலாகாவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் அதுபற்றிய கணக்குகளை ஆய்வு செய்வது வழக்கம். ஏனெனில் ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதால் அது வரி ஏய்ப்பு, பணமோசடி, கருப்பு பணத்தை பதுக்குதல் ஆகியவற்றுக்கான முயற்சிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

    ஒருவர், வருமான வரி மதிப்பீட்டை செய்தவராக இருந்தால் கடந்த 2 ஆண்டுகளில் வருமான வரி இலாகாவிடம் அவர் சமர்ப்பித்த வருமான வரி கணக்கு தாக்கல்(ரிடர்ன்) நகல்களை தாக்கல் செய்யவேண்டும் எனவும் இந்த நோட்டீசில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    “முதற்கட்ட நடவடிக்கையாக ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்தவர்களுக்கு வருமானவரி இலாகா நோட்டீசு அனுப்பி இருக்கிறது. அதேபோல் வங்கிக் கணக்கில் பணம் அதிக இருப்பு வைத்திருக்காதவர்கள், கடந்த 8-ந்தேதிக்கு பிறகு திடீரென ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை அதிக அளவில் செலுத்தி இருந்தால் அவர்களது வங்கிக் கணக்குகளும் வருமான வரி இலாகாவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” என்றும் வருமான வரி இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×