search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
    X

    அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

    அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பரிசீலனைக்கு ஏற்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பரிசீலனைக்கு ஏற்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    தமிழகத்தின் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஜெயராஜ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம், பரிசு பொருட்களை கொடுத்தது உறுதியானதால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அவர்களே இப்போதும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் இருவரின் வேட்புமனுக்களை பரிசீலனைக்கு ஏற்கக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சி.எஸ்.தாகுர், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர்ராவ், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார்.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், மனுதாரர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறாரா? அவருக்கு என்ன பிரச்சினை? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர் அந்த தொகுதியின் வாக்காளர் என்றும் அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா ஊழல் நடைபெற்றதாகவும் கூறினார்.

    இதற்கு நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டு என்றால் மக்களிடம் அதனை எடுத்துச் செல்லுங்கள். அல்லது தேர்தல் முடிவுகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் அதை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்காக பதிவு செய்யுங்கள். தற்போது தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால் இந்த நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
    Next Story
    ×