search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி: மும்பை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
    X

    ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி: மும்பை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

    மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்த மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்த மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

    மும்பை ஒர்லி பகுதியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தர்கா அறக்கட்டளை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தர்கா அறக்கட்டளை சார்பிலும், பெண்கள் அமைப்பு சார்பிலும் வக்கீல்கள் ஆஜராகி தங்களது வாதத்தை எடுத்து வைத்தனர்.

    இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், “தர்காவின் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் ஆண்- பெண் இரு பாலரையும் நீங்கள் அனுமதிக்காவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், ஒருவரை அனுமதித்து மற்றொருவரை புறக்கணிப்பது தான் பிரச்சினை” என்று கருத்து தெரிவித்தனர்.

    மேலும், சபரிமலை விவகாரத்தை மேற்கோள்காட்டி, இதுபோன்ற பிரச்சினை முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இந்துக்கள் மத்தியிலும் நிலவுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இதைத்தொடர்ந்து, ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த உத்தரவுக்கு வருகிற 17-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், அன்றைய தினம் முற்போக்குத்தன்மை வாய்ந்த நிலைப்பாட்டை ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை எடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தெரியப்படுத்தும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.

    பின்னர், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×