search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு அமித்ஷா கண்டனம்
    X

    ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு அமித்ஷா கண்டனம்

    பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றிய ராகுல் காந்தியின் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி மக்களை சந்திக்கும் யாத்திரை நடத்தினார். நேற்று முன்தினம் அந்த யாத்திரையின் முடிவில் டெல்லி சன்சாத் மார்க்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

    தனது பேச்சில், காஷ்மீரிலும், நாட்டின் பிற நகரங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கு எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில் சதிசெய்து கொண்டிருந்த பயங்கரவாதிகளை, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்கள் நடத்தி கொன்று குவித்தது பற்றி குறிப்பிட்டார்.

    அப்போது அவர், “காஷ்மீரில் உயிர் தியாகங்களை செய்துள்ள நமது வீரர்களின் பின்னால் நீங்கள் (மோடி) ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய வீரர்கள் ரத்தம் சிந்தி, துல்லியமான தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ நமது வீரர்களின் ரத்தத்தில் கொலைக்கான தரகு பார்க்கிறீர்கள்” என கூறினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டெல்லியில் நேற்று கட்சி தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசும்போது, “ராகுல் காந்தியின் கருத்து, ராணுவத்தில் விரக்தி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கொலைக்கான தரகு என்று நீங்கள் (ராகுல் காந்தி) எதைக் குறிப்பிடுகிறீர்கள்? ராகுல் காந்தி இந்த கருத்தின்மூலம் எல்லை மீறிப்போய் விட்டார். அவர் ராணுவத்தை அவமதித்து விட்டார்” என்று கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “நாங்கள் ராணுவ வீரர்களின் பின்னால் நிற்கிறோம். அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் நமது நாட்டு வீரர்களின் துப்பாக்கி தோட்டாக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

    அத்துடன், “கொலைக்கான தரகு என்று நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை உங்கள் கட்சிக்குள் வைத்துக்கொள்ளுங்கள்” என்றும் கூறினார்.

    இதே போன்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் ராகுல் காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, “ராகுல் காந்தி நமது வீரர்கள் பற்றி சொன்ன கருத்துக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது, நாம் அனைவரும் நமது அரசியல் மாச்சரியங்களை மறந்து, ஒன்றுபட்டு ராணுவத்தின் பக்கம் நிற்க வேண்டிய பிரச்சினை ஆகும்” என குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு விளக்கம் அளித்தார்.

    அதில் அவர், “ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில், அரசியல் லாபத்துக்காக, பிரசாரத்துக்காக ராணுவத்தை பயன்படுத்துவதை நான் ஆதரிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×