search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல்: ஊர்க்காவல் படையினர் 2 பேர் காயம்
    X

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல்: ஊர்க்காவல் படையினர் 2 பேர் காயம்

    திருப்பதியில் கருடசேவையை பார்க்க முயன்றபோது பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 ஊர்க்காவல் படைவீரர்கள் காயம் அடைந்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின்போது முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் கருடசேவையன்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் மலைக்கு செல்வதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்ட வண்ணம் இருந்தன.

    திருமலையில் நெரிசல் ஏற்படும் என கருதப்பட்ட இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்திய வண்ணம் இருந்தனர்.

    இதனிடையே நேற்று இரவு கருடவாகன வீதி உலா தொடங்கும் முன்பு கோவில் அருகே ராம்பகிஜா என்ற கேட்டின் அருகே பக்தர்கள் கூட்டம் முண்டியடித்தது.

    அவர்கள் கேட்டை திறந்து கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது 2 பக்தர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதேபோல் சுபதம் என்ற பகுதிக்கு செல்லும் வழியில் பக்தர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை ஊர்க்காவல் படையினர் ஒழுங்குபடுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 ஊர்க்காவல் படைவீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அஸ்வினி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    Next Story
    ×