search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் இளம்பெண் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
    X

    டெல்லியில் இளம்பெண் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

    டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து டெல்லி கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து டெல்லி கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    டெல்லியில் தனியார் ஐ.டி நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றியவர் ஜிகிஷா கோஷ் (28). கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி பணி முடிந்து கால் டாக்சியில் தெற்கு டெல்லியின் வசந்த் விகாரில் உள்ள தனது வீட்டருகே அதிகாலை 4 மணிக்கு வந்திறங்கினார். அதன் பிறகு, அவர் மாயமானார்.

    இந்நிலையில், அரியானா மாநிலம் சூரஜ்குந்த் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்து 3 நாட்களுக்குப் பின்னர் 21-ம் தேதியன்று ஜிகிஷாவின் பிரேதத்தை போலீசார் மீட்டெடுத்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர், இது தொடர்பாக அமித் சுக்லா, பல்ஜித் சிங் மாலிக், ரவி கபூர் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

    கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைநகர் டெல்லியை உலுக்கிய முக்கிய வழக்குகளில் ஒன்றாக விளங்கிய இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்ட 3 பேர் மீதும் கொலை, கொள்ளை குற்றச்சாட்டின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, சவுமியா விஸ்வநாதன் பத்திரிகையாளர் ஒருவர் 2008 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்த போது, இதே நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது.

    ஜிகிஷா கோஷ் கொலை வழக்கு டெல்லியில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், குற்றவாளிகள் ரவி கபூர் மற்றும் அமித் சுக்லா ஆகியோரை சாகும்வரை தூக்கிலிட்டு கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.

    இளம்பெண் ஜிகிஷா கோஷ் கொல்லப்பட்ட கொடூரமான முறையை வைத்துப் பார்க்கையில் ’அரிதிலும் அரிதான’ வழக்காக கருதி இந்த தண்டனையை அளிப்பதாக குறிப்பிட்ட டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சந்தீப் யாதவ், மற்றொரு குற்றவாளியான பல்ஜித் சிங் யாதவுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

    Next Story
    ×