search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய தொழில் படை பாதுகாப்பு
    X

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய தொழில் படை பாதுகாப்பு

    தீவிரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை படிப்படியாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    தீவிரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க அனைத்து விமான நிலையங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை படிப்படியாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நுழைவாயிலிலேயே பயணிகளிடம் சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். விமான நிலையத்துக்குள் வெடிகுண்டுகளை கொண்டு சென்று வெடிக்கச் செய்த இச்சம்பவம், விமான நிலைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

    இதன் அடிப்படையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க, விமான நிலைய நுழைவாயிலிலேயே பயணிகளிடம் அவ்வப்போது சோதனை நடத்தும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

    மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு, மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி ஜெயந்த் சின்கா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உள்துறை, சிவில் விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

    அதில், முழுமையாக இயங்கி வரும் 98 சிவில் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக, உள்துறை அமைச்சகம், உளவுப்பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றின் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. அக்குழு தனது ஆய்வு அறிக்கையை 20 நாட்களில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.

    இந்த ஆய்வைத் தொடர்ந்து, 98 விமான நிலையங்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை படிப்படியாக அமலுக்கு கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

    98 விமான நிலையங்களில், தற்போது, 59 விமான நிலையங்களில் மட்டுமே மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல், விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களையும், பயணிகளையும், அவர்களின் பொருட்களையும் நுழைவாயிலிலேயே திடீர் திடீரென சோதனைக்கு உட்படுத்துவது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க விடப்படுவதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    ரெயில்வே பாதுகாப்பு படை போன்று விமான நிலைய பாதுகாப்புக்கென ‘விமான போக்குவரத்து படை’ என்ற தனிப்படையை உருவாக்கலாம் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் யோசனை தெரிவித்து இருந்தது. ஆனால், அதை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது.

    விமான நிலையத்தின் சரக்கு கையாளும் பிரிவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அங்கு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விமான நிலையங்களில், கவச வாகனங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

    விமான நிலையங்கள் அருகே உள்ள உயரமான கட்டிடங்களில் இருந்து தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், அங்கெல்லாம் போலீசாரை நிறுத்துவது பற்றி மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×