search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை சங்கர் கொலை வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    உடுமலை சங்கர் கொலை வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    உடுமலை சங்கர் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, மனுதாரரை சென்னை ஐகோர்ட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியது.
    புதுடெல்லி:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரி, திண்டுக்கல்லை சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் உடுமலைப்பேட்டை பஸ் நிலையம் அருகே சங்கர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கவுசல்யாவுக்கும் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார்.

    தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள கவுசல்யாவின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

    அதில், சங்கர் கொலை வழக்கில் தங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மறுக்கின்றனர். தங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையிலும் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே எங்கள் தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்படும் வரை வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டை நாடுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். மனுதாரர் சார்பில் வழக்கு திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது.
    Next Story
    ×