search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலில் திருட்டு சம்பவத்தை தடுக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி ஆலோசனை கூட்டத்தில் தகவல்
    X

    திருப்பதி கோவிலில் திருட்டு சம்பவத்தை தடுக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி ஆலோசனை கூட்டத்தில் தகவல்

    திருப்பதி கோவிலில் திருட்டு சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேவஸ்தான அதிகாரி ஆலோசனை கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது
    திருமலை:

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
    முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திருமலையில் உள்ள இலவச சத்திரங்கள், தங்கும் அறைகளில் குடிநீர் குழாய், சுடுநீர் குழாய், மின் விளக்குகள், சுவிட்சுகள், மின் விசிறிகள், சுவிட்ச் போர்டுகள் ஆகியவற்றை முறையாக பழுது நீக்க வேண்டும். குளியல் அறைகள், கழிவறைகள், வாஷ் பேசின் ஆகியவற்றை சுத்தமாக வைக்க வேண்டும். விடுதிகளில் மூட்டப்பூச்சிகள், கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. விடுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளித்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை காலம் வருவதற்குள், அந்தப் பணிகளை செய்ய வேண்டும்.

    மேலும் மெத்தைகள், போர்வைகள் ஆகியவற்றை துவைத்து பக்தர்களுக்கு சுத்தமாக வழங்க வேண்டும். செருப்பு வைக்கும் இடத்தில் போதிய இடவசதி இல்லை. தற்போது 500 ராக்குகள் கொண்ட செருப்பு வைக்கும் இடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. பணிகள் முடிந்த பிறகு பயன்பாட்டுக்கு வரும். பிரம்மோற்சவ விழா நாட்களில் ஆயிரம் ராக்குகள் வைக்கும் அளவுக்கு பெரிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. செருப்புகளை பக்தர்கள் திருடி செல்வதாக புகார்கள் வருகின்றன. செருப்புகளை பாதுகாக்கும் இடத்தில் கேமராக்களை பொருத்த வேண்டும்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் ரி-என்ட்ரி கார்டு வழங்கப்பட்டு வருகிறது. கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் ரி-என்ட்ரி கார்டு வழங்கப்பட மாட்டாது. ஏழுமலையான் கோவிலில் உள்ள நடமாடும் உண்டியலில் அடிக்கடி திருட்டுச் சம்பவம் நடந்து வருகிறது. திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதியில் உள்ள பரகாமணி சேவா குலு பகுதியில் நாணயம் எண்ணும் போது மூக்கில் தூசு சென்று சிரமத்தை ஏற்படுத்துகிறது. பரகாமணி இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்களுக்கு சத்யசாய் சேவா சங்கம், ராமகிருஷ்ண மடம் சேவா சங்கம், பிரம்மகுமாரிகள் சேவா சங்கம் ஆகியவை சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் கூடுதலாக ஏழுமலையான் வரலாற்றை பற்றி ஒளி பரப்ப வேண்டும். திருமலையில் உள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள், பூஞ்செடிகளை நட்டு பராமரிக்க வேண்டும். இன்னும் 2 மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. செடிகளை வளர்த்து கண்காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பிரம்மோற்சவ விழாவையொட்டி ஏழுமலையான், நரசிம்மசுவாமி, பத்மாவதி தாயார் ஆகியோரின் உருவப்படங்களை வரைந்து காட்சிக்கு வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×