search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள அரசு ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள்: பினராய் விஜயன் அதிரடி
    X

    கேரள அரசு ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள்: பினராய் விஜயன் அதிரடி

    கேரள அரசு ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்து முதல்-மந்திரி பினராய் விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    புதிய ஆட்சி பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முதல்-மந்திரி உள்பட அனைத்து மந்திரிகளும் மக்கள் சேவையில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதல்-மந்திரியை அதிகாரிகள், பொதுமக்கள் சந்திக்க இருந்த பழைய நடைமுறை சிக்கல்கள் பல அகற்றப்பட்டுள்ளது. இது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது, இது தொடர்பான அறிவிப்பை முதல்-மந்திரி பினராய் விஜயன் வெளியிட்டார்.

    அவர் பேசியதாவது:-

    பொதுமக்களுடன் அரசு ஊழியர்கள் அன்புடனும், பண்புடனும் நடந்து கொள்ளவும், ஊழல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்கவும், புதிய விதிமுறைகளை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அரசு ஊழியர்கள் இந்த நடத்தை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    இதில் ஒன்றுதான் முழுமையான வருகை பதிவேட்டை உறுதி செய்வது ஊழியர்களின் வருகை பதிவேட்டை உறுதி செய்ய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையிலும் தொழிற் சங்கங்கள் என்ற பெயரில் இடையூறுகள் செய்யக்கூடாது. எந்த ஒரு தனிப்பட்ட குழுவுக்கோ அல்லது அரசு ஆதரவு சங்கத்திற்கோ சிறப்பு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.

    அனைத்து அரசு ஊழியர்களும் சரிசமமாக நடத்தப்படுவார்கள். அரசு ஊழியர்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கையிலும் அரசு ஈடுபடாது. அதே சமயம் அரசு ஊழியர்கள் நிர்வாக அமைப்பின் மூலம் சரியாக வழி நடத்தப்படுவார்கள். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கேரளாவை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். நிதி பற்றாக்குறையை சமாளித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அரசு ஊழியர்கள் இடமாற்ற விவகாரத்தில் கூட பொதுவான அளவுகோலை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதே தீர்ப்பதற்கும் வழிவகை காணப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×