search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த சல்மான் கான்: மீண்டும் சம்மன் அனுப்பிய மகளிர் ஆணையம்
    X

    விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த சல்மான் கான்: மீண்டும் சம்மன் அனுப்பிய மகளிர் ஆணையம்

    கற்பழிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் சல்மான் கான் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு மீண்டும் மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
    அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், தான் மல்யுத்த வீரராக நடித்துள்ள சுல்தான் படம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்தார். அப்போது, சுல்தான் படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாகவும், தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் நிலைமையில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

    சல்மானின் கான் இந்த பேச்சு பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. பெண்கள் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சல்மான் கான் 7 நாட்களில் மன்னிப்பு கோர வேண்டும் என்று கெடு விதித்த மகாராஷ்டிர மகளிர் ஆணையம், இன்று (ஜூன் 29) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மனும் அனுப்பியது.

    ஆனால், மாநில மகளிர் ஆணையம் கூறியபடி அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதற்குப் பதிலாக தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பினார். அதில், ஏற்கனவே, இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் இருப்பதால் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் விசாரணைக்கு ஆஜராக முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பதிலால் திருப்தி அடையாத மாநில மகளிர் ஆணையம், ஜூலை 7-ம் தேதி ஆஜராகும்படி சல்மான் கானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த முறையும் ஆஜராகவில்லை என்றால் மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரகாத்கர் தெரிவித்தார்.
    Next Story
    ×