search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓரின சேர்க்கையாளர் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    ஓரின சேர்க்கையாளர் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக பிரபலங்கள் சிலர் புதிதாக தாக்கல் செய்துள்ள மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி,

    ‘‘வயது வந்த இரு நபர்கள் சம்மதித்து, ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் ஆகாது’’ என டெல்லி ஐகோர்ட்டு 2009–ம் ஆண்டு ஜூலை 2–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அத்துடன் இது தொடர்பான இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 செல்லாது எனவும் அது அறிவித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் முறையிட்டனர். அந்த முறையீடுகளை நீதிபதி (தற்போது ஓய்வு) ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு விசாரித்து, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தது. மேலும், ஓரின சேர்க்கை குற்றம்தான் என்றும், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377–ஐ திருத்துவதோ அல்லது ரத்து செய்வதோ நீதிமன்ற வரம்புக்குட்பட்டது அல்ல, அது பாராளுமன்றத்தின் வேலை என்றும் கருத்து தெரிவித்தது.

    2013–ம் ஆண்டு, டிசம்பர் 11–ந்தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி மத்திய அரசு சார்பில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை விசாரிக்க முடியாது என கூறி நீதிபதி எச்.எல். தத்து (தற்போது ஓய்வு) தலைமையிலான அமர்வு 2014–ம் ஆண்டு தள்ளுபடி செய்து விட்டது.

    இதையடுத்து கடைசி வாய்ப்பாக பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, மறுஆய்வு மனு மீதான உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக 8 நிவாரண மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது, 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

    இதனிடையே, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377–ஐ ரத்து செய்யக் கோரி  சில பிரபலங்கள் சார்பில் தற்போது மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரபலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    ரிட்டு டால்மியா, ஹோட்டல் அதிபர் அமன் நாத் மற்றும் நடன கலைஞர் என்.எஸ்.ஜோகர் ஆகிய பிரபலங்கள் தாக்கல் செய்த இந்த மனுவில், ஓரினச் சேர்க்கையாளர்களை, சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளின் படி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

    விசாரணையின் போது, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தாதர் தெரிவித்தார்.

    இதனையடுத்து வழக்கை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×