search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முரளி மனோகர் ஜோஷி ஜனாதிபதி பதவிக்கு போட்டி?: ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் சந்திப்பு
    X

    முரளி மனோகர் ஜோஷி ஜனாதிபதி பதவிக்கு போட்டி?: ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் சந்திப்பு

    முரளி மனோகர் ஜோஷி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
    புதுடெல்லி:

    முரளி மனோகர் ஜோஷி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற 2017-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள்.

    தற்போது பா.ஜனதாவுக்கு பாராளுமன்றத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த கட்சியைச் சேர்ந்தவரே ஜனாதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின் போது மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் மூத்த தலைவர் அத்வானிக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்படுவதாக அப்போது பேச்சு எழுந்தது. இதனால் அத்வானி பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. இதேபோல் முரளி மனோகர் ஜோஷியும் ஓரங்கட்டப்பட்டு இருந்தார்.

    அத்வானி ஜனாதிபதியாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது முரளி மனோகர் ஜோஷி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த மே மாதம் முரளி மனோகர் ஜோஷி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இவருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை நாக்பூரில் முரளி மனோகர் ஜோஷி சந்தித்துப் பேசினார். இது தவிர மும்பையில் ஆர்.எஸ்.எஸ். முன்னணி தலைவர்கள் பலரையும் அவர் சந்தித்து பேசினார்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுமையான ஆதரவைப் பெற்றவரையே பா.ஜனதா ஜனாதிபதி பதவிக்கு முன் நிறுத்தும் என்பதால் முரளி மனோகர் ஜோஷியின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது.

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு திரட்டவே ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஜோஷி சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஜனாதிபதி தேர்தலில் முரளி மனோகர் ஜோஷிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர் தேவேந்திர ஸ்வரூப் ஆதரவு தெரிவித்துள்ளார். தீன தயாள் உபாத் யாயவின் பாரம்பரியத்தில் வந்தவர் ஜோஷி என்று புகழ்ந்துள்ளார்.

    82 வயதாகும் ஜோஷி பா.ஜனதாவின் தேசிய தலைவராகவும், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.

    இதற்கிடையே ஜனாதிபதி பதவிக்கு பேசப்பட்டு வந்த அத்வானி, தற்போது முரளி மனோகர் ஜோஷி பெயர் அடிபடுவதால் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளார்.
    Next Story
    ×