search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் பேசியது என்ன?: மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் பேட்டி
    X

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் பேசியது என்ன?: மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் பேட்டி

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் பேசியது என்ன? என்பது பற்றி மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
    புதுடெல்லி:

    டெல்லி சென்ற முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சருடனான சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும் அவர்களின் துயர் துடைப்பது பற்றியும் அவரிடம் எடுத்துக்கூறினேன். மீனவர்களை சிலர் தவறாக வழிநடத்துவது பற்றியும் எடுத்துச் சொன்னேன். முதல்வரும் தமிழக மீனவர்கள் பற்றிய தன்னுடைய ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார். அவர்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    குளச்சல் துறைமுகத்துக்காக 500 ஏக்கருக்கு மேல் இடம் தேவைப்படுகிறது என்றும் மீனவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி இடம் ஒதுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறினேன். இதுகுறித்து ஆவன செய்வதாக முதல்வர் தெரிவித்தார்.

    தமிழகத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கையாக கூறினேன். இதற்கு நிலம் ஒதுக்க வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலம் கிடைக்கும் பட்சத்தில் கேரளாவுக்கு அடுத்து தமிழகத்தில் இந்த ஆராய்ச்சி மையம் அமையும் என்றும் அது ஏற்படுத்தப்பட்டால் அதிக அளவு அனைவருக்கும் பயன் அளிக்கும் என்றும் கூறினேன். இதுகுறித்து நிச்சயமாக ஆவன செய்யப்படும் என்று முதல்வர் கூறினார்.

    கிழக்கு கடற்கரை சாலை தற்போது 153 கிலோமீட்டர் தூரத்துக்கு மத்திய அரசு வசம் உள்ளது. எஞ்சியிருக்கும் சாலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஒட்டுமொத்த பகுதிகளும் மத்திய அரசின் கைவசமாகும்போது இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க வசதியாக இருக்கும் என்று கூறினேன். அதிகாரிகளிடம் இதுகுறித்து மேலும் விவரங்களை கேட்டறிந்தார். விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினார். மதுரவாயல் திட்டம் பற்றியும் சொன்னேன். மொத்தத்தில் இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

    இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    தமிழக முதல்வரின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரையிலான சரக்குப் பாதையை சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதை ஏற்கனவே நான் அவரிடம் கூறியிருந்தேன். அதை தற்போது நினைவூட்டினேன். தமிழக முதல்வர் உடனடியாக தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பிவைப்பதாகவும் இதனை விரைந்து சாத்தியப்படுத்த மத்திய அரசு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அதுமட்டுமின்றி, தற்போது குளச்சல் துறைமுகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து உள்ளதால் இதே சரக்குப்பாதையை தூத்துக்குடியில் இருந்து குளச்சல் வரை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினேன். முதல்வர் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தற்போது பிரதமரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் இந்த கோரிக்கை இடம்பெற்றுள்ளதாக முதல்வர் கூறினார்.

    சரக்கு மற்றும் சேவை வரி பற்றி எதுவும் பேசவில்லை. நிதிமந்திரி அருண் ஜெட்லி விரைவில் இதுபற்றி தமிழக முதல்வரிடம் பேசுவார் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

    இன்றைய சந்திப்பு பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையில் வருங்காலத்தில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு அமைத்துத் தரும் வகையில் அமைந்ததா? என்று கேட்டபோது, ‘நாட்டின் நலன் கருதி நாங்கள் அனைத்து கட்சியினருடனும் மிகவும் சுமுகமான உறவை பேணுவதில் அக்கறை காட்டுகிறோம். அந்த வகையில் தான் இன்றைய சந்திப்பும் அமைந்துள்ளது’ என்றார்.
    Next Story
    ×