search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது விலக்கு எதிரொலி: பீகாரில் உடல்நலகுறைவு ஏற்பட்டு 3 பேர் பலி
    X

    மது விலக்கு எதிரொலி: பீகாரில் உடல்நலகுறைவு ஏற்பட்டு 3 பேர் பலி

    பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் குடியை நிறுத்திய பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3 பேர் பலியாகினார்கள்.

    பாட்னா:

    பீகாரில் முதல்–மந்திரி நிதிஷ்குமார் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார். சாதாரண 'கள்' முதல் நட்சத்திர ஓட்டல்களில் “பார்” வரை அனைத்தும் தடை செய்யப்பட்டது.

    இதனால் பீகாரில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட சாதாரண விவசாயி முதல் வசதி படைத்தவர்கள் வரை அவதிப்படுகிறார்கள்.

    திடீர் என்று குடிப்பழக்கத்தை நிறுத்தியதால் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களால் வழக்கம் போல் செயல்பட முடியவில்லை. கை–கால்கள் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்தது.

    இதுபோன்ற பாதிப்புகள் பலருக்கு ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிகளிலும், போதை மறுவாழ்வு மையங்களிலும் அனுமதிக்கப்பட்டனர்.

    ஏற்கனவே அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதை மறுவாழ்வு மையங்கள் பல இடங்களில் புதிதாக தொடக்கப்பட்டன. இங்கு போதைக்கு அடிமையானவர்களுக்கும், உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே 2 பேர் பலியானார்கள். நேற்று கைமூர் மாவட்டம் அமாவ் கிராமத்தில் தல்சிங்கர்சிங் என்ற விவசாயி இறந்தார். இவர் குடிப்பழக்கத்தை நிறுத்தியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இறந்தார்.

    இறந்த தல்சிங்கரின் சகோதரர் கூறும்போது, “எனது அண்ணனுக்கு 15 ஆண்டுகளாக குடிப்பழக்கம் இருந்தது. திடீர் என்று நிறுத்தியதால் அவரால் செயல்பட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    உள்ளுர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகும் மோசமாக இருந்தது. அங்கு உரிய சிகிச்சை வசதி இல்லாததால் இறந்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே மது விலக்கை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் யார்? எதை சாப்பிட வேண்டும், எதை குடிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. இதில் தலையிட உரிமை இல்லை என்று வழக்கு தொடர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும், போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளித்த பின்பு மதுக்கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூட வேண்டும், ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக மூடியதால்தான் பாதிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தனர்.

    பீகாரில் ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்படுவதால் அரசுக்கு புதிய பிரச்சினை உருவாகி உள்ளது.

    Next Story
    ×