என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியும் தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். #Modi #Mamata #WestBengalpollviolence
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
     
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 8 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.

    பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதமும், மோதல்களும் நடந்தன. மாநில காவல்துறையை வைத்து ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவினரை மிரட்டுவதாகவும், மத்திய துணை ராணுவப் படையினரை வைத்து  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை மத்தியில் ஆளும் பாஜகவினர் மிரட்டுவதாகவும் இருதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சேரம்பூர் நகரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மக்களை வாக்களிக்க விடாமல் தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், இம்மாநிலத்தில் பாஜகவினரை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.



    மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது நாடு முழுவதும் தாமரை மலரும். மம்தாவிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகுவார்கள். இன்றைய நிலவரப்படி அவரது கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் மோடி கூறினார்.

    இதற்கிடையில், மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிர்பம் பாராளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள் மத்திய  துணை ராணுவப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. #Modi #Mamata #WestBengalpollviolence
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரபிரதேசத்தில் இனி பாகுபலிகளுக்கு இடமில்லை என கூறியுள்ளார். #AmitShah #LSElections2019
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல், 3 கட்டங்களாக முடிவடந்த நிலையில், இன்று 4வது கட்டமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சித்ராகூட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    உத்தரபிரதேசம் மாநிலம் எந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது என்பதை மெகா கூட்டணியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பாகுபலிகளுக்கு அவர்கள் சீட் கொடுத்துள்ளனர்.  தற்போது உத்தரபிரதேசத்தில் யோகியின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில், எந்த பாகுபலிகளுக்கும் இடமில்லை. ஏனென்றால், பாஜக அரசு அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.



    மெகா கூட்டணியின் தலைவர் ராகுல் காந்தி தான். நாட்டில் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தால் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார். அவரது தாய் கூட ராகுல் எங்கு இருக்கிறார் என கண்டறிய இயலவில்லை.  நிரந்தரமாக மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஒருமித்த குரலாகும்.  

    இவ்வாறு அவர் பேசினார்.  #AmitShah #LSElections2019

    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். #AIADMKcandidates #TNassembly #TNassemblybypoll
    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுடன் நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தவிர காலியாக உள்ள அரவக்குறிச்சி,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய  4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் மோகன் வேட்புமனு தாக்கல்

    வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்த நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
     
    அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் மோகன் மற்றும் சூலூர் தொகுதியில் கந்தசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். #AIADMKcandidates #TNassembly #TNassemblybypoll
    9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 38.63% வாக்குகள் பதிவானது. #LSElections2019 #VoterTurnout
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 691 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் இந்த தேர்தலில் மொத்தம்  12 கோடியே 79 லட்சத்து58 ஆயிரத்து 477 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

    வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து,  பொது மக்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.



    இந்நிலையில்  பிற்பகல் 2 மணி நிலவரப்படி சராசரியாக 38.63% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:-

    பீகார் - 37.71%

    ஜம்மு காஷ்மீர்-6.66%

    ஜார்க்கண்ட்-44.90%

    மத்திய பிரதேசம்- 43.44%

    மகாராஷ்டிரா-29.93%

    ஒடிசா-35.79%

    ராஜஸ்தான்-44.62%

    உத்தரபிரதேசம்-34.42%

    மேற்கு வங்காளம்-52.37% #LSElections2019 #VoterTurnout
    9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பகல் 12 மணி நிலவரப்படி 23.48% வாக்குகள் பதிவானது. #LSElections2019 #VoterTurnout
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பொது மக்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.



    இந்நிலையில்  பகல் 12 மணி நிலவரப்படி சராசரியாக 23.48% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:-

    பீகார் - 18.26%

    ஜம்மு காஷ்மீர்-3.74%

    ஜார்க்கண்ட்-29.21%

    மத்திய பிரதேசம்- 26.62%

    மகாராஷ்டிரா-16.47%

    ஒடிசா-19.67%

    ராஜஸ்தான்-29.19%

    உத்தரபிரதேசம்-21.18%

    மேற்கு வங்காளம்-35.10%  #LSElections2019 #VoterTurnout
    பா.ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகர் சன்னி டியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SunnyDeol
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகர் சன்னி டியோல் கடந்த 23-ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி டியோல் பா.ஜனதா சார்பில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதற்காக நேற்று பிரதமர் மோடியை சந்தித்து சன்னி டியோல் நன்றி தெரிவித்தார். முன்னதாக அவர் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்தார்.

    இன்று நடிகர் சன்னி டியோல் குர்தாஸ்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் மறைந்த நடிகர் வினோத்கன்னாவின் மனைவி கவிதாகன்னா, மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் ஆகியோர் உடன் சென்றனர்.

    முன்னதாக நடிகர் சன்னி டியோல் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். அங்கு தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் செய்தார். வேட்பு மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து நாளை முதல் குர்தாஸ்பூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தை தொடங்க சன்னி டியோல் திட்டமிட்டுள்ளார்.



    குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும். பிரபல மறைந்த நடிகர் வினோத் கன்னா இந்த தொகுதியில் 1998, 1999, 2004, 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

    வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாகவும் வினோத் கன்னா இருந்தார். இதனால் இந்த தொகுதி பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக நீடிக்கிறது.

    இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் கைப்பற்றுவதற்காக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் தானே அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ளார். இதனால் அந்த தொகுதியில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரசின் தேர்தல் வியூகத்துக்கு பதிலடி கொடுப்பதற்காகவே நடிகர் சன்னி டியோலை பா.ஜனதா குர்தாஸ்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி உள்ளது. பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனான சன்னி டியோலுக்கு அந்த தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    வினோத் கன்னாவின் மனைவி கவிதா தீவிர பிரசாரம் செய்து சன்னி டியோலுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஹேமமாலினியும் சன்னி டியோலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

    4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #ADMK #DMDK #Vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.திமு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. முழு ஆதரவை அளிக்கிறது.


    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். #ADMK #DMDK #Vijayakanth

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். #Sidhu #RahulGandhi

    சண்டிகர்:

    இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசில் மந்திரியாக உள்ளார்.

    இந்த நிலையில் சித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்று பா.ஜனதா கூறுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்திய விமானபடைக்கு அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டது.


    சோனியா காந்தியிடம் இருந்து தேசப்பற்றை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு காங்கிரசை திறமையாக வழிநடத்தினார். அவரது திறமை காரணமாக தான் மத்தியில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதாவுக்கு விசுவாசமாக இருந்ததால் அவர்களை தேசியவாதி என்றும் எதிர்த்தால் தேச விரோதி என்றும் கூறுகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் நான் அரசியலை விட்டே விலக தயார். ரபேல் விமான விவகாரத்தால் மோடி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவார்

    இவ்வாறு அவர் கூறினார். #Sidhu #RahulGandhi

    23-ந்தேதிக்குப் பிறகு அரசியலில் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜியமாகி விடுவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LSPolls #MinisterJayakumar

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தான் 3 தொகுதி எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு. அந்த மாதிரியான நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. இந்த வி‌ஷயத்தில் பேரவை தலைவரின் அதிகாரத்துக்குள் யாரும் செல்ல முடியாது. அது குறித்து நானும் எந்த கருத்தும் கூற முடியாது.

    கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி ஜெயலலிதாவின் அரசை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும், இந்த கட்சியை அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க.வும், அதனுடைய ‘பி’ டீம் தினகரனும் கைகோர்த்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரங்கேற்றினார்கள். அது அனைத்தும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. வருகிற 23-ந் தேதிக்குப் பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் பூஜ்ஜியமாகி விடுவார்.

     


    ஜூன் 30-ந்தேதி நாங்கள் ஆட்சி அமைத்து விடுவோம் என்று துரை முருகன் கூறுகிறார். திண்டுக்கல் பெரியசாமி 11 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வந்ததும் ஆட்சி அமைத்து விடுவோம் என்று கூறுகிறார். இரண்டுமே நடைபெறப்போவதில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கும் போதே அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியவில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. அதனை இந்த தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம். வருகிற 23-ந்தேதி அனைவருக்கும் இது தெரியும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. - அ.ம.மு.க. இடையே தான் போட்டி என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்ட போது ஆட்டத்தில் இல்லாதவர்களை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? பந்தயத்தில் இல்லாதவர்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். உண்மையில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்றார். #LSPolls #MinisterJayakumar

    மேற்கு வங்காளத்தில் வாக்குப் பதிவு எந்திரத்தில் பா.ஜனதாவின் சின்னமான தாமரைக்கு கீழே பி.ஜே.பி. என்று ஆங்கிலத்தில் எழுத்து உள்ளது. இது சட்ட விரோதம் ஆகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. #BJP #Loksabhaelections2019

    புதுடெல்லி:

    தேர்தலில் ஓட்டுப் பதிவு எந்திரத்தில் ஒட்டப்படும் பேப்பரில் கட்சி சின்னம் இருக்கும். கட்சிகளின் பெயர்கள் இருக்காது.

    இந்த நிலையில் வாக்குப் பதிவு எந்திரத்தில் பா.ஜனதாவின் சின்னமான தாமரைக்கு கீழே பி.ஜே.பி. என்று ஆங்கிலத்தில் எழுத்து உள்ளது. இது சட்ட விரோதம் ஆகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேற்கு வங்காள மாநிலம் பார்ரக்போர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பி.ஜே.பி. என்ற பெயர் உள்ளது என்று தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தனர்.


     

    காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, அகமது பட்டேல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தினேஷ் திரிவேதி, தீரக் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அப்போது பி.ஜே.பி. என்ற எழுத்து நீக்கப்பட வேண்டும். அல்லது அனைத்து கட்சிகளின் பெயர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் அசோக் மனு சிங்வி கூறியதாவது:-

    வாக்குப்பதிவு எந்திரத்தில் பி.ஜே.பி. என்கிற எழுத்து தெளிவாக தெரிகிறது. எந்த கட்சியும் சின்னம் மற்றும் பெயரை ஒரே இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்றார்.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும் போது, “கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தை அணுகிய பா.ஜனதா தாமரை சின்னத்தின் வெளிப்புறம் மிகவும் மெல்லிய கோடால் உள்ளது. அது அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி மாற்றம் செய்யப்பட்டது. தாமரை சின்னத்தில் நீரின் பிரதிபலிப்பும் அடர்த்தியாக்கப்பட்டது. அந்த பிரதிபலிப்புதான் எப் மற்றும் பி போன்ற எழுத்துக்கள் போல தெரிகின்றன. அது பி.ஜே.பி. போன்ற எழுத்து போல் தெரியவில்லை” என்றார். #BJP #Loksabhaelections2019

    2014- பாராளுமன்ற தேர்தலின்போது தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பிரசாரம் செய்து வெற்றிபெற்ற மோடி தற்போது தனக்கு சாதியே கிடையாது என்று கூறுவதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். #bunchofidiots #memorylosses #PChidambaram #Modi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது தனக்கு சாதி அரசியலின்மீது நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், 'தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த ஒரே பிரதமரான மோடி தற்போது தனக்கு சாதியே கிடையாது என்கிறார்.


    பதவியேற்ற பிறகு, டீ விற்றவனான தன்னை இந்த நாட்டின் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்ததை எண்ணி பெருமைப்படுவதாக பலமுறை கூறிய மோடி, தற்போது நான் டீ விற்றவன் என்று ஒருபோதும் கூறியதில்லை என்கிறார்.

    நம்மைப்பற்றி பிரதமர் என்னவென்று நினைக்கிறார்? ஞாயபகமறதி கொண்ட சிறிய முட்டாள்கள் கூட்டத்தில் நம்மையும் அவர் சேர்த்து விட்டாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். #bunchofidiots #memorylosses #PChidambaram #Modi
    மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகிய 3 பேர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் தெரிவித்து உள்ளார். #SharadPawar #BJP #ParliamentElection

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 4-வது கட்ட ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று கருத்து பரவலாக பரவி வருகிறது. பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றினாலும் பெரும்பான்மை கிடைக்காது என்று ஏற்கனவே வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    தேர்தல் முடிவின்போது மாநில கட்சிகளின் பங்கேற்பு முக்கியத்துவம் பெற்று இருக்கும். மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகிய 3 பேர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரி யுமான சரத்பவார் தெரிவித்து உள்ளார்.


    மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள அவர் இதுதொடர்பாக கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான மெஜாரிட்டி கிடைக்காது. கடந்த முறையை விட பா.ஜனதா கூட்டணிக்கு 100 இடங்கள் குறைவாக கிடைக்கும்.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இந்த 3 பேருக்குத்தான் பிரதமர் ஆக அதிக தகுதி இருக்கிறது.

    இந்த 3 பேருக்கும் மாநிலங்களை ஆண்ட அனுபவம் இருப்பதால் நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும். மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு குஜராத் முதல்- மந்திரியாக இருந்தார். இதனால் மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் பிரதமருக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது எனது கருத்து.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நான் குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம் இருக்கிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்றும், அதற்கு ஆசைப்பட வில்லை என்றும் அவர் பலமுறை தெரிவித்து இருக்கிறார்.

    இதேபோல நானும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. எங்களது தேசியவாத காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 22 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாது, இதனால் பிரதமர் பதவி பற்றி நான் சிந்திக்கவில்லை.

    இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார். #SharadPawar #BJP #ParliamentElection

    ×