search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது வன்முறை - மம்தா, மோடி சரமாரி குற்றச்சாட்டு
    X

    மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது வன்முறை - மம்தா, மோடி சரமாரி குற்றச்சாட்டு

    மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியும் தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். #Modi #Mamata #WestBengalpollviolence
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
     
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 8 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.

    பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதமும், மோதல்களும் நடந்தன. மாநில காவல்துறையை வைத்து ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவினரை மிரட்டுவதாகவும், மத்திய துணை ராணுவப் படையினரை வைத்து  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை மத்தியில் ஆளும் பாஜகவினர் மிரட்டுவதாகவும் இருதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சேரம்பூர் நகரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மக்களை வாக்களிக்க விடாமல் தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், இம்மாநிலத்தில் பாஜகவினரை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.



    மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது நாடு முழுவதும் தாமரை மலரும். மம்தாவிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகுவார்கள். இன்றைய நிலவரப்படி அவரது கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் மோடி கூறினார்.

    இதற்கிடையில், மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிர்பம் பாராளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள் மத்திய  துணை ராணுவப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. #Modi #Mamata #WestBengalpollviolence
    Next Story
    ×