என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.ஏ.செல்லகுமார், சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் 14 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.ஏ.செல்லகுமார், 3,74,397 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 2,86,831 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன் 16 ஆயிரத்து 253 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காருண்யா 8 ஆயிரத்து 558 வாக்குகளும், அமமுக வேட்பாளர் கணேசகுமார் 5 ஆயிரத்து 446 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றிமுகம் காட்டிவரும் நிலையில் இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடிக்கு மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு அக்கட்சியின் மிக மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘அபரிமிதமான இந்த வெற்றிக்கு பாஜகவை வழிநடத்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



    பாஜகவின் கொள்கைகள் ஒவ்வொரு வாக்காளர்களையும் சென்றடையும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷாவும் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் அபாரமான முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.

    பன்முகத்தன்மைகளை கொண்ட மிகப்பெரிய நாடான இந்தியாவில் இவ்வளவு வெற்றிகரமான தேர்தலை நடத்தி முடித்தமைக்காக வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் உள்ளிட்ட முகமைகளுக்கு வாழ்த்துக்கள். ஒளிமயமான எதிர்காலத்துடன் நமது உயர்ந்த நாடு ஆசீர்வதிக்கப்படுவதாக!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலின் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நீலகிரி தொகுதியின் திமுக வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆ.ராசா, 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 

    இதையடுத்து அப்பகுதியின் திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    கரூர்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கரூர் பாராளுமன்றத் தொகுதியில் 9 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அவர் 3,20,678 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 537 வாக்குகள் பெற்றிருந்தார்.

    அமமுக வேட்பாளர் தங்கவேல் 11 ஆயிரத்து531 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 18 ஆயிரத்து 756 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் .ஹரிஹரன் 7920 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    காஞ்சிபுரம்:

    பாராளுமன்றத் தேர்திலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    காஞ்சிபுரம் தொகுதியில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் செல்வம் 5,30,533 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 3,15,463 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். அமமுக வேட்பாளர் முனுசாமி 44 ஆயிரத்து 246 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சனி 49 ஆயிரத்து 412 வாக்குகளும் பெற்றிருந்தனர். 
    கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    கன்னியாகுமரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை பெற்று வந்தார். 12 சுற்றுகள் முடிவில் வசந்தகுமார் 2 லட்சத்து 76 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 133 வாக்குகள் பெற்றுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 7333, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 4201, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் 5901 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் முன்னிலை வகித்து வருகிறார்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

    இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 12 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 4,14,769 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 1,73,953 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். 
    ஒடிசா மற்றும் ஆந்திரா சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களை பிடித்த பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை மோடி வாழ்த்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆந்திராவில் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் வேட்பாளர்களும் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களும் அதிக இடங்களில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அம்மாநிலங்களில் விரைவில் ஆட்சி அமைக்கவுள்ள பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    தனது டுவிட்டர் பக்கத்தில் தெலுங்கு மற்றும் ஒடியா மொழிகளில் தனித்தனியாக வாழ்த்து செய்தியை அவர் பதிவிட்டுள்ளார்.
    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி மீண்டும் அடுத்தவாரம் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

    அவ்வகையில் 17-வது பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்று, தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். இந்த இமாலய வெற்றியால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பாஜக அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய உள்ளார். 26-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என தெரிகிறது. அதன்பின்னர் பாஜக தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோருகிறார். மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இ.கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிமுகம் காட்டி வருகிறார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

    இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி ராகுல் காந்தி 12 லட்சத்து 76 ஆயிரத்து 945 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிர் 4 லட்சத்து 77 ஆயிரத்து 783 வாக்குகளை பெற்றார். 



    பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 1 லட்சத்து 64 ஆயிரத்து 69 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நிலவரத்தை கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    குறிப்பாக சாலையோர வியாபாரிகளுடன் அமர்ந்து பிரசாரம் செய்தது, டீக்கடைகளில் டீ போட்டு கொடுத்தது, புரோட்டா கடைகளில் மாவு தயாரித்து கொடுத்தது, செருப்பு தைக்கும் தொழிலாளர்களுடன் அமர்ந்து ஷூ பாலீஸ் போட்டு கொடுத்தது, குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடம் காய்கறி விலை நிலவரம் குறித்து கேட்டு பிரசாரம் செய்தது போன்ற பல்வேறு சம்பவங்கள் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.

    தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்களை விட இவரது நூதன பிரசாரமே தினசரி செய்தியாக வெளிவந்து கொண்டு இருந்தது. இவரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்த போது சட்டை அணியாமல் மேடையில் வந்து கலந்து கொண்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இன்று திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழக கல்லூரிக்கு அருகே மன்சூர்அலிகான் தனது கட்சியினருடன் வந்தார். தபால் வாக்குப்பதிவு மற்றும் முதல் சுற்று வாக்குப்பதிவு ஆகியவற்றை கேட்டபோது தனக்கு குறைவான வாக்குகளே வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து வாக்கு நிலவரங்களை தனக்கு தெரிவிக்குமாறு தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதே போல் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் சுதாகரனும் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்தார். 2 சுற்று முடிவில் கிடைத்த வாக்கு நிலவரங்களை கேட்டு ஏமாற்றத்துடன் அவரும் திரும்பிச் சென்றார்.
    2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை விட அதிகளவில் பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

    2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×