என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

    91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்தன. பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    273 தொகுதிகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர பிரசாரத்தைத் தொடர்ந்து 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தடவை தேர்தலில் இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை உறுதிப்படுத்தியது.

    காலை 8.30 மணிக்கு அதாவது ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது.

    9 மணி அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

    10 மணி அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலைப் பெற்றது.



    காங்கிரஸ் கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கி விட்டது. மாநில கட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் தத்தளித்தப்படி இருந்தன.

    காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க நேற்று மாலை வரை ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுக்கும், மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.

    காங்கிரசும், மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன.

    பிற்பகல் தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வெற்றியை பெறும் சூழ்நிலை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது.

    இந்த தடவை பாரதிய ஜனதா தனிப்பட்ட முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மீண்டும் இமாலய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தடவை அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில கருத்து கணிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தது.

    ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 51 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

    421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக ராகுலும், பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வெறும் 6 அல்லது 7 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.

    பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்த மேஜிக் நம்பரை பா.ஜனதா கூட்டணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது.

    எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக தலைவர் அமித் ஷா காந்திநகர் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் சுமார் 350 தொகுதிகளில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    அவ்வகையில், பிற்பகல் 3 மணிவரை நிலவரப்படி உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி 4 லட்சத்து 41 ஆயிரத்து 59     வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 87 ஆயிரத்து 338 வாக்குகளை பெற்றார். அங்கு சுமார் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றிமுகம் காட்டி வருகிறார்.



    இதேபோல், குஜராத் மாநிலத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித் ஷா 8 லட்சத்து 21 ஆயிரத்து 705 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சி.ஜே.சாவ்டா 3 லட்சத்து 20 ஆயிரத்து 136 வாக்குகளை பெற்று பின்தங்கியுள்ளார். 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றிமுகம் காட்டி வருகிறார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் எம்.பி.யாக உள்ள  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டார்.



    காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலை வகித்துவந்த ராகுல் காந்தி, பின்னர் மெல்ல பின்னடைவை சந்திக்க தொடங்கினார்.

    பிற்பகல் 2 மணி நிலவரப்படி  மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 479அதிக வாக்குகளையும்  ராகுல் காந்தி  ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 772 வாக்குகளையும் பெற்றிருந்தனர், ராகுல் காந்தியைவிட ஸ்மிருதி இரானி சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    ஆந்திர மாநிலத்தில் தனது கட்சிக்கு கிடைத்த வெற்றியானது மக்களின் வெற்றி என்றும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
    அமராவதி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது.

    175 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், ஆட்சியமைக்க 88 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிற்பகல் நிலவரப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. வரும் 25-ம் தேதி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அவர் சட்டமன்ற கட்சி தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், 30-ம்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த வெற்றி குறித்து ஜெகன் மோகன் ரெட்டி சமூக வலைத்தளம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த தேர்தல் வெற்றியானது மக்களின் வெற்றி. இது எதிர்பார்த்ததுதான். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.



    வாக்காளர்கள் பெருமளவில் தங்கள் உரிமையை நிலைநாட்டி ஜனநாயகத்தின் மதிப்பை மேம்படுத்தியமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    இதற்கிடையே தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றிருப்பதால் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவதாகவும் கூறினார்.

    இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆந்திராவை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார் எனவும் ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.
    பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று டுவிட்டரில் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

    ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை விட அதிகளவில் பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-


    மதிப்பிற்குரிய பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவரும் பாஜக கூட்டணி அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்



    இரண்டாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். தங்களது தலைமையில் கீழ் நாடு சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்து கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


    பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவரும் பாஜக கூட்டணி அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

    இந்த வெற்றியை பாஜகவினர் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்பட உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 பாராளுமன்றத் தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் பின்தங்கியுள்ளது.
    ராஞ்சி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால், மீண்டும் மோடி பிரதமர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதிய நிலவரப்படி, மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    ஹசாரிபாக் தொகுதியில் மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா 1,16,819 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சாகுவை விட முன்னிலை பெற்றிருந்தார்.



    லோகர்தகா தொகுதியில் மத்திய இணை மந்திரியும் பாஜக வேட்பாளருமான சுதர்சன் பகத், காங்கிரஸ் வேட்பாளர் சுக்தேவ் பகத்தை விட 5852 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார். முன்னாள் முதலமைச்சர்கள் சிபு சோரன், பாபுலால் மராண்டி ஆகியோர் தும்கா மற்றும் கோடர்மா தொகுதிகளில் பின்தங்கினர்.

    மற்றொரு முன்னாள் முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான அர்ஜுன் முண்டா, குந்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் பின்தங்கினார். பாஜக எம்பியும் மாநில பாஜக தலைவருமான லட்சுமண் கிலுவா, சிங்பம் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கீதா கோடாவைவிட 44962 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.
    சமீபத்தில் காலமான கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
    பனாஜி:

    கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கர் புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்ததால் பாராளுமன்ற தேர்தலுடன் அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலில் நடந்தது.

    இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியான நிலையில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அட்டனாசியோ மான்செராட்டே 8,748 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் 6,990 வாக்குளை பெற்று தோல்வியை தழுவினார்.

    இந்த தோல்வியின் மூலம் சுமார் 25 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பனாஜி தொகுதியை தற்போது காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் பனாஜி தொகுதியை பறிகொடுத்ததற்காக பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம், அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ், மக்கள்நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம், நாம் தமிழர் வினோதினி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் திருவாரூர் திரு.வி.க.கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திரு.வி.க. கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணியளவில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வந்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர், துணை தேர்தல் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 4 சுற்று முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம்:-

    பூண்டி கலைவாணன் (தி.மு.க.)-18,891

    ஆர்.ஜீவானந்தம் (அ.தி.மு.க.)-9,892

    எஸ்.காமராஜ் (அ.ம.மு.க.)-3166

    அருண் சிதம்பரம் (மக்கள் நீதி மய்யம்):-538

    வினோதினி (நாம் தமிழர்):-1249

    மறைந்த தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    திருவாரூர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
    மேற்கு வங்காளத்தில் பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியதுபோல் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.



    மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களான அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றன.

    கடந்த முறை 2 இடங்கள் மட்டுமே பிடித்திருந்த பா.ஜனதா இரட்டை இலக்க இடங்களை பிடிக்க தீவிரம் காட்டியது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கடும் சவாலாக விளங்கியது.

    42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை 34 இடங்கள் பிடித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.
    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் முன்னனியில் உள்ளார்.

    வேலூர்:

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கஸ்பா ஆர்.மூர்த்தி போட்டியிட்டார்.

    தி.மு.க. வேட்பாளராக காத்தவராயன், அ.ம.மு.க. வேட்பாளராக ஜெயந்தி பத்மநாபன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வெங்கடேசன், நாம்தமிழர் வேட்பாளராக கலையேந்திரி போட்டியிட்டனர்.

    குடியாத்தம் தொகுதியில் மொத்தம் 2,70,751 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,02,593 ஓட்டுகள் பதிவானது. இது 74.83 சதவீதமாகும்.

    (தி.மு.க.) - 4,811

    கஸ்பா ஆர்.மூர்த்தி

    (அ.தி.மு.க.) - 4,261

    (அ.ம.மு.க.)- 243

    (ம.நீ.ம,) - 54

    (நாம்தமிழர்) - 208

    550 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் முன்னனியில் உள்ளார்.

    ×