என் மலர்
தேர்தல் செய்திகள்
சேலம் பாராளுமன்ற தொகுதியில், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
1952-ம் ஆண்டு முதல் 2014 வரையிலான சேலம் பாராளுமன்ற தேர்தல்களில் தனித்தும், கூட்டணி வைத்தும் 7 முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 4 முறையும், தி.மு.க. 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு முறை சுயேட்சையாகவும் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.
1980-க்கு பிறகு தி.மு.க. சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. சேலம் தொகுதியை கைப்பற்றுகிறது. இதனால் தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 67 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட உமாராணி 2 லட்சத்து 88 ஆயிரத்து 939 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் 2 லட்சத்து 1,265 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் 46 ஆயிரத்து 477 ஓட்டுகள் பெற்றார்.
பாராளுமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது மத்தியில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று பெரும்பாலான நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டன.
அந்த முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே 7 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 நிறுவனங்கள் சார்பில் கருத்து கணிப்புகள் வெளியானது. அவை அனைத்திலும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த கருத்து கணிப்புகளை நம்ப இயலாது என்று கூறியிருந்தனர். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று பேசி வந்தனர். எனவே கருத்து கணிப்புகள் துல்லியமாக இருக்குமா? என்ற சந்தேகம் எல்லோரது மனதிலும் இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியம் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கடந்தது.
542 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தபோது பாரதிய ஜனதா கூட்டணி 328 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 106 இடங்களிலும், மாநில கட்சிகள் 108 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.
தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகள் இதே ரீதியில்தான் சரியாக இருந்தன.

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனி பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இந்த மாத தொடக்கத்தில் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து மாநில கட்சி தலைவர்களில் சிலர் கிங்மேக்கர்களாக மாற ஆசைப்பட்டு காய்களை நகர்த்தினார்கள். குறிப்பாக சந்திரபாபு நாயுடு கடந்த 2 வாரமாக மாநிலம் மாநிலமாக சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
ராகுல், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, அரவிந்த் கெஜ்ரிவால் என்று அவர் நிறைய பேரை சந்தித்து ஓரணியில் திரட்ட தீவிர முயற்சி செய்தார். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது.
அதுபோல தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவும் மற்றொரு பக்கத்தில் காய்களை நகர்த்தினார். மம்தாபானர்ஜி, பினராயி விஜயன், நவீன் பட்நாயக், மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசினார்.

3-வது அணியை உருவாக்கி மாநில கட்சி தலைவர் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது. அவரது ஆசையெல்லாம் மம்தாபானர்ஜியை பிரதமர் ஆக்கி விட வேண்டும் என்று கிங்மேக்கர் போல ஆசைப்பட்டார்.
இதற்கிடையே தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கடந்த 2 தினங்களாக ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசி வந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைக்க அவர் கிங்மேக்கராக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால் அவரது இலக்கும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாநில கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியமாக மாறி உள்ளது.
மாநில கட்சி தலைவர்களில் 90 சதவீதம் பேர் தோல்வியை சந்தித்து உள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் கிங்மேக்கர்களின் ஆசை நிராசையாக மாறி போனது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது.
இந்திராகாந்தி ஆட்சியின்போது தான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மத்தியில் காங்கிரசை வீழ்த்திய வாஜ்பாய் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை கொடுத்தார். அவர் 2 தடவை பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால் குறைந்த ஆண்டுகள்தான் அவரால் மத்தியில் ஆட்சி செய்ய முடிந்தது.
இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2014-ம்ஆண்டு பிரதமர் மோடி முடிவுரை எழுதினார். 2019 வரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த மோடி மீண்டும் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார்.
இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவி வகிப்பது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.
அந்த வகையில் மோடி இந்திய அரசியலில் காங்கிரசுக்கு எதிராக புதிய சாதனையை உருவாக்கி இருக்கிறார்.
பெரியகுளம்:
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேனி மாவட்டம கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க கல்லூரியில் இன்று நடைபெற்றது. பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மயில்வேல், தி.மு.க. சார்பில் சரவணக்குமார், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கதிர்காமு, மக்கள் நீதிமய்யம் சார்பில் பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் ஷோபனா உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலையில் உள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின்படி, பாஜக 48 இடங்களில் முன்னிலை வகித்தது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி பின்தங்கியது. மெகா கூட்டணி 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
நேரம் செல்லச் செல்ல பாஜக முன்னிலை பெற்ற தொகுதிகள் அதிகரித்தன. மதிய நிலவரப்படி 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது. 19 தொகுதிகளில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 55 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். அமேதியில் ஸ்மிரிதி இரானி முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால், கடும் போட்டி நிலவுகிறது.
ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதேபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), மேனகா காந்தி (சுல்தான்பூர்), சந்தோஷ் காங்வார் (பரேலி) ஆகியோரும் முன்னிலை பெற்றிருந்தனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி), அவரது மகன் அகிலேஷ் யாதவ் (ஆசம்கர்), அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் (கன்னாஜ்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 2014 பொதுத்தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. பா.ஜனதா கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜனதா பிடிக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் அதிக ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருகிறார்கள்.
சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் காம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே கவுதம் காம்பீர் முன்னிலை பெற்றார். இன்று மதியம் நிலவரப்படி கவுதம் காம்பீர் காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங்கைவிட 18 ஆயிரத்து 632 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் 8 ஆயிரத்து 764 வாக்குகள், புதுடெல்லியில் தற்போது எம்.பி.யான மீனாட்சிலேகி காங்கிரஸ் வேட்பாளர் அஜர் மக்கானைவிட 10 ஆயிரத்து 486 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.
வடகிழக்கு டெல்லி தொகுதியில் மனோஜ் திவாரி 29 ஆயிரத்து 797 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
தெற்கு டெல்லி தொகுதியில் ரமேஷ் பிதூரி, ஆம் ஆத்மி வேட்பாளர் ராகவ் சதாவை விட 30 ஆயிரத்து 755 ஓட்டு பெற்று இருந்தார்.

முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலாதீட்சித் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஷீலா தீட்சித்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட மனோஜ் திவாரி 89 ஆயிரத்து 218 ஓட்டுகள் முன்னிலையில் வெற்றி முகத்தில் உள்ளார்.

அதிமுக வேட்பாளரான துணை சபாநாயகர் எம். தம்பிதுரை 55491 வாக்குகளே பெற்றுள்ளார். ஜோதிமணி 79910 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் 7724 வாக்குகள் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலம் வதோரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.
2 தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார்.
இந்த தேர்தலில் மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரியங்கா போட்டியிடவில்லை.
காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டார். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டார். ஆனால் மோடிக்கு இவர்கள் யாரும் வலுவான சவாலை ஏற்படுத்தவில்லை.
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலின்போது சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தடவை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க பா.ஜனதா நிர்வாகிகள் களம் இறக்கப்பட்டனர்.
அதற்கேற்ப வாரணாசி தொகுதி முழுக்க பா.ஜனதா தீவிர பிரசாரம் நடத்தியது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.
மதியம் 12 மணி அளவில் சில சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு இருந்தன. அப்போதே பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது.
எனவே அவர் இந்த தடவையும் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சி முன்னிலையில் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்தங்கி உள்ளது.
7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதில் சந்திர பிரகாஷ் ஜோஷி (சித்தோர்கர்), நிகல் சந்த் (கங்காநகர்), தேவ்ஜி பட்டேல் (ஜலூர்), துஷ்யந்த் சிங் (ஜல்வாரா பரன்), பிபி சவுத்ரி (பாலி) மற்றும் தியா குமாரி (ராஜ்சமந்த்) ஆகிய 6 பேர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். பில்வாரா தொகுதி பாஜக வேட்பாளர் சுபாஸ் பகேரியா 214184 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

ஜோத்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், பாஜக வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விட 64341 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த மன்வேந்திர சிங், ராஜ்புத் தொகுதியில் 87145 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கைலாஷ் சவுத்ரி முன்னிலையில் உள்ளார்.
ஜெய்ப்பூர் (ஊரகபகுதி) தொகுதியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 91493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் (பிகானர்) 86919 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியிலும், தேசிய செயலாளரான எச்.ராஜாவும், சி.பி.ராதா கிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டனர். இந்த 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.
2014 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் தற்போது 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரிடம் பின்தங்கி இருக்கிறார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை விட 20 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி இருக்கிறார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை தழுவினார்.
கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜனிடமும், ராமநாதபுரம் தொகுதியில் நயினார் நாகேந்திரன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ்கனியிடமும் பின்தங்கி இருக்கிறார்கள்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பம் முதலே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார்.

பா.ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.






