search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் நிலவரத்தை கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய மன்சூர் அலிகான்
    X

    தேர்தல் நிலவரத்தை கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய மன்சூர் அலிகான்

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நிலவரத்தை கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.

    குறிப்பாக சாலையோர வியாபாரிகளுடன் அமர்ந்து பிரசாரம் செய்தது, டீக்கடைகளில் டீ போட்டு கொடுத்தது, புரோட்டா கடைகளில் மாவு தயாரித்து கொடுத்தது, செருப்பு தைக்கும் தொழிலாளர்களுடன் அமர்ந்து ஷூ பாலீஸ் போட்டு கொடுத்தது, குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடம் காய்கறி விலை நிலவரம் குறித்து கேட்டு பிரசாரம் செய்தது போன்ற பல்வேறு சம்பவங்கள் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.

    தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்களை விட இவரது நூதன பிரசாரமே தினசரி செய்தியாக வெளிவந்து கொண்டு இருந்தது. இவரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்த போது சட்டை அணியாமல் மேடையில் வந்து கலந்து கொண்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இன்று திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழக கல்லூரிக்கு அருகே மன்சூர்அலிகான் தனது கட்சியினருடன் வந்தார். தபால் வாக்குப்பதிவு மற்றும் முதல் சுற்று வாக்குப்பதிவு ஆகியவற்றை கேட்டபோது தனக்கு குறைவான வாக்குகளே வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து வாக்கு நிலவரங்களை தனக்கு தெரிவிக்குமாறு தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதே போல் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் சுதாகரனும் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்தார். 2 சுற்று முடிவில் கிடைத்த வாக்கு நிலவரங்களை கேட்டு ஏமாற்றத்துடன் அவரும் திரும்பிச் சென்றார்.
    Next Story
    ×