என் மலர்
தேர்தல் செய்திகள்

இந்நிலையில், சென்னையில் இன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #DMK #TNBypoll
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஓரிரு நாட்களில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள் (13-ந்தேதி) வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை தே.மு.தி.க. பெற்றுள்ளது. 350 பேர் போட்டியிட மனு கொடுத்து இருந்தனர். அவர்களை தொகுதி வாரியாக அழைத்து நேர்காணல் செய்ய உள்ளனர். தொகுதி பங்கீட்டு குழுவினர் நேர்காணல் நடத்திய பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. #LSPolls #DMDK
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறினர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை கூறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. போட்டியிட அவர் தயங்குவதாக கூறப்படுகிறது.

1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. மக்களவைத் தேர்தல்களில் மன்மோகன் சிங் இதுவரை வெற்றி பெற்றது இல்லை. 1999 ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர் பா.ஜனதாவின் மல்கோத்ராவிடம் தோல்வி அடைந்தார். தற்போது, அசாமில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. #LSPolls #ManmohanSingh
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல் ஆகும். எனவே நாம் தேர்தல் பணிகளை முழுவீச்சாக செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
பொங்கலுக்கு அனைவரது குடும்பத்துக்கும் முதல்-அமைச்சர் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கினார். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த மூன்று திட்டங்களும் 3 அணுகுண்டுகள் போன்றவை. இந்த திட்டம் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #SellurRaju
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இதன் காரணமாக நேற்று மாலை 5 மணிக்கே, மத்திய- மாநில அமைச்சர்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த அரசு கார்களை திருப்பி ஒப்படைத்தனர். அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை திருச்சியில் இருந்த விமானத்தில் சென்னைக்கு வந்தனர்.
அவர்களை அழைத்துச் செல்வதற்காக சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த அரசு கார்கள் விமான நிலையத்துக்கு வந்திருந்தன.
இந்த கார்களை பயன்படுத்தாமல் அமைச்சர்கள் திருப்பி அனுப்பினர். அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரான வைகை செல்வனும், அதே விமானத்தில் சென்னை திரும்பி இருந்தார். அவரது காரில் ஏறி அமைச்சர்கள் இருவரும் புறப்பட்டு சென்றனர்.

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. குன்னம் அருகே உள்ள செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், பீல் வாடி, எழுமூர், சித்தளி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து சித்தளியில் நடைபெற்ற கட்சி உறுப்பினரின் இல்ல விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக எழுமூரில் கட்சி கொடியினை ஏற்றிய விஜயபிரபாகரன், இந்த தேர்தலில் நாம் யார்? என்பதை விஜயகாந்த் வழியில் செயல்பட்டு நிரூபிக்க வேண்டும். தேர்தலில் நம்முடைய நோக்கம் வெற்றியடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றார். #LSPolls #DMDK #VijayaPrabhakaran #Vijayakanth
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்-10, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, இந்திய கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, ம.தி.மு.க.-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-1, இந்திய ஜனநாயக கட்சி-1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களை வரவழைத்து பேசிய பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகவில்லை.
இது தொடர்பாக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அன்று காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான மூவர் குழுவினர் பேச்சு நடத்தினர். அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் சுமார் 15 தொகுதிகளின் பட்டியலை அளித்தனர்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. ஆலோசனை கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் எப்படி தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் இன்று மாலை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. #LSPolls #DMK #MKStalin #congress
17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
தேர்தல் நடத்தை விதி முறைகள் பற்றிய விவரம் வருமாறு:-
* மக்களுக்கு எந்தவித நிதி உதவிகளையும் அளிப்பதாக அரசு அறிவிக்கக்கூடாது.
* “அதைச் செய்வேன், இதைச் செய்வேன்” என்று புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை அள்ளி வீசக்கூடாது.
* புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது.
* அமைச்சரோ அல்லது அரசியல் நிர்வாகிகளோ எந்த திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டக்கூடாது. எந்தவித திட்டத்துக்காகவும் தொடக்க விழாக்களை நடத்தக்கூடாது.
* அரசு அல்லது அரசியல் கட்சிப் பணியாளர்கள் யாரும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கக்கூடாது.
* அரசுப்பணி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் எந்தவித தற்காலிக அல்லது நிரந்தர பணி நியமனத்தை, பதவி உயர்வை அரசு அளிக்கக்கூடாது.
* அமைச்சர்கள் தங்கள் அலுவலக பயணத்தை தேர்தல் பணியோடு இணைக்கக்கூடாது.
* அமைச்சர்கள் தேர்தல் பணிக்காக, அரசுக்கான அம்சங்களை பயன்படுத்தக்கூடாது. அரசு வாகனம், சுழல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.
* சாதி, மதம் தொடர்பான உணர்ச்சியை தூண்டும் விதத்தில் செயல்படக்கூடாது.
* பிரசாரத்தில் குற்றச்சாட்டுகள் அனைத்துமே, அடுத்த கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், பழைய பதிவுகள், பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.
* சாதி, மத உணர்வுகளை வாக்குக்காக பயன்படுத்தக்கூடாது.

* அரசு பணத்தை செலவழித்து ஆளுங்கட்சியினர் விளம்பரம் செய்யக்கூடாது.
* அரசு திட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பெயர், படம் இடம் பெறக்கூடாது. அப்படி இடம்பெறும் பெயர், படத்தை மறைக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெவ்வேறு தலைப்புகளில் இந்திய தேர்தல் ஆணையம் www.elections.tn.gov.in என்ற தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. #Parliamentelection
கோவை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் பலனில்லை என்ற பிரேமலதா விஜயகாந்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை சேர்ந்த பிரதமர் இல்லாததால், இவ்வளவு எம்.பி.க்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று தான் தெரிவித்துள்ளார். அவர் சொன்னதன் கருவை புரிந்து கொள்ள வேண்டும்.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். கூட்டணி அமைத்தால் ஒன்றிபோக வேண்டும். அப்போது தான் கூட்டணி வலுபெறும். கூட்டணி அமைத்தவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.

கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தமிழக அரசை குறை கூறி தான் அரை சதவீத ஓட்டு வாங்குகின்றனர். கூட்டணி சேரவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி காணாமல் போய்விடும். அவர்கள் கூறும் பொய்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அரசு விழாக்களில் தேர்தல் பிரசாரம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகத்தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அது குற்றமா?. தற்போது எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணியை தொடங்கி வைத்து உள்ளார். இதனால் எதிர் கட்சிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது எத்தனை முறை பிரதமர் வந்து தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைப்பார்கள். அதுகுறித்து பொதுமக்களும், நீங்களும் சிந்திக்க வேண்டும்.
தற்போதைய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சரியான கூட்டணியா? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது யார் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது வெட்கக் கேடான ஒன்று. பா.ஜனதா கட்சியை தி.மு.க. மதவாத கட்சி என்கிறார்கள். அவர்களுடன் மத்தியில் அங்கம் வகித்து 5 ஆண்டு ஆட்சி சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது மதவாத கட்சி என்று குறை கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை தி.மு.க. ஆட்சியில் பரோலில் விட்டார்களா? ஆனால் அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
7 பேர் விடுதலைக்காக தி.மு.க. எதையும் செய்யவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் வேண்டும் என்றே மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தலுக்காக இதுபோன்ற நாடகம் ஆடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மீது பாசம் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியில் விடுதலை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். அவர் மத்திய அரசிடம் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.






