என் மலர்
தேர்தல் செய்திகள்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை பட்டியலிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை அறிவாலயத்துக்கு சென்று துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசினார்.
அப்போது ம.தி.மு.க. வுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட வைகோ அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த வைகோ, ‘‘ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி எது என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்’’ என்றார்.
ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கூட்டணியில் 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அறிவாலயத்துக்கு இன்று வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தங்களுக்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்டார்.
இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில் கூட்டணி கட்சிகளிடம் கலந்து பேசி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது என்பதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார். #vaiko #mkstalin #parliamentelection
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 25 பேர் விருப்ப மனு கொடுத்து இருந்தனர்.
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார் என்பது கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவரை தவிர வேறு யாரும் விருப்ப மனுதாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி பெயரில் 33 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்திருந்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தினார்.
தூத்துக்குடி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த கனிமொழியும் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் பங்கேற்றார்.
கனிமொழியிடம் தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
இந்த நேர்காணலின்போது முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உடன் இருந்தனர்.
நேர்காணலில் திருநெல்வேலி தொகுதிக்கு 39 நிர்வாகிகளும் கன்னியாகுமரி தொகுதிக்கு 25 பேர்களும் வந்திருந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரிடமும் மு.க.ஸ்டாலின் நேர் காணல் நடத்தினார். மற்ற தொகுதிகளுக்கும் இன்று மாலை வரை நேர்காணல் நடைபெறுகிறது. #kanimozhi #mkstalin #parliamentelection
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பா.ஜ.க. கொடியேற்று நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று கொடியேற்றி பேசியதாவது:-
தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் எல்லா கூட்டணியும் அறிவிக்கப்பட்டுவிடும். இதைப் பொறுத்துக் கொள்ளாமல் தான் எதிர்கட்சியினர் பதற்றத்தோடு இருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொடுத்திருக்கிறார். இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம், 8 கோடி இலக்கு வைத்து இதுவரை 7 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். நிச்சயமாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி இந்திய தமிழர்களையும், இலங்கை தமிழர்களையும் பாதுகாக்கவில்லை. நிச்சயமாக இந்தக் கூட்டணி தோல்வியடையும். ஏனென்றால், தோல்வியடைந்த அனைவரும் அவர்களிடம் உள்ளனர். வைகோவின் கருப்புக் கொடிக்கும், அவரது கருப்புத் துண்டுக்கும், அவரது கருத்துக்கும் மரியாதை கிடையாது. காமராஜரை பற்றி பேச தகுதி படைத்த ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டும்தான். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் மோடி பிரதமராக வர வேண்டும். மத்தியில் தாமரை மலர வேண்டும். மாநிலத்தில் அ.தி.மு.க. பலம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #admk #bjp #tamilisai #parliamentelection
மதுரை:
பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் யார் ஆட்சி காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஏதோ வரலாற்று ரகசியத்தை கண்டுபிடித்த மாதிரி இப்போது கேள்வி கேட்டுள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகருக்கு கடத்தி சென்று விட்டனர்.
இந்திய விமானத்தில் பயணித்த பயணிகளை விடுவிப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விதித்த ஒரே நிபந்தனை இந்திய சிறையில் இருக்கும் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான்.
இந்திய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களோ எங்களது பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் அதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதியை விடுவிக்கக்கூடாது என்றனர்.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தூண்டுதலின்பேரில் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை பிரதமர் வீட்டு முன்பு திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதனால்தான் பிரதமர் வாஜ்பாய் வேறு வழியின்றி மசூத் அசாரை விடுதலை செய்ய நேரிட்டது. இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம்.
நான் ராகுல்காந்தியை பார்த்து கேட்கிறேன். இந்தியாவில் மும்பை முதல் கோவை வரையிலான பயங்கர குண்டு வெடிப்புகள் யார் ஆட்சி காலத்தில் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மொழிப் பிரச்சினையை தூண்டும் வகையில் தமிழகத்தில் ஓடும் ரெயில்களுக்கு தேஜஸ், அந்தியோதயா என இந்தியில் பெயர் வைக்கலாமா? என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அந்த கட்சியின் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் தமிழ் வார்த்தையா? என்று கேட்க விரும்புகிறேன். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 11, 12-ந்தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அது கோடை விடுமுறை காலம். இதனால் அவர் சொல்லி இருக்கலாம்.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைக்க ஆளும் கட்சி தலைவர்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆனாலும் பா.ஜனதா நெருக்கடி காரணமாகத் தான் தே.மு.தி.க.வுடன் பேச்சுவர்த்தை நடக்கிறது என்று கூறுவது சரியல்ல.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதை தமிழக முதல்வர் வரவேற்றுள்ளார். தமிழக அரசியலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் பலத்தை அதிகப்படுத்துவதும், எதிர் கட்சிகளின் பலத்தை அதிகரிக்காததும் தான் ராஜதந்திரம். அத்தகைய பணிகளில்தான் அ.தி.மு.க. கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் பாராளு மன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவு இல்லை. ராகுலுக்கு ஆதரவு என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இல.கணேசன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படாததால் முஷரப் அவ்வாறு கூறி இருக்கலாம் என்றார். #ilaganesan #rahulgandhi #pmmodi
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஷம்சபாத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவர் நடிகை விஜயசாந்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விஜயசாந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடியை பார்த்து ஒவ்வொரு மக்களும் பயப்படுகிறார்கள். அவர் எந்த நிமிடத்தில் அவர் குண்டு வீசுவார் என்ற அச்சத்துடனேயே உள்ளனர். அவர் பயங்கரவாதி போல இருக்கிறார். மக்கள் மீது அன்பை செலுத்துவதற்கு பதில் மோடி மக்களை பயமுறுத்தி வருகிறார். இது பிரதமருக்கான பண்பு கிடையாது.
மோடி சர்வாதிகாரியை போல் ஆட்சி செய்கிறார். அவர் ஜனநாயகத்தை கொன்று வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் ஜி.எஸ்.டி.வரை மற்றும் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நாட்டு மக்கள் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகிறார். அவரது செயல்பாடுகளால் பயங்கரவாதி போல் தெரிகிறார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் தான் போர். மோடியின் குறிக்கோள் சர்வாதிகாரம், ராகுல் காந்தியின் குறிக்கோள் ஜனநாயகம். அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு இதுபோன்று ஆட்சியை நடத்த மோடி விரும்புகிறார். அதற்கு மக்கள் வாய்ப்பு அளிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் காந்தி முன்னிலையில் பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று விஜயசாந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கோடை காலத்தில் எவ்வளவு மின்சார தட்டுப்பாடு இருந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மின்சார வாரியம் தயாராக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 15 ஆயிரத்து 689 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தது.
இனி வரும் காலங்களில் 16 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி திருப்திகரமாக உள்ளது. அதனால் கோடைகாலத்திலும் மின்வெட்டு என்பதே வராது.
தமிழகத்தில் மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தில் 2 மணி நேரம் குறைப்பு என்று கோர்ட்டு கூறியுள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணியில் இதர கட்சிகள் (தே.மு.தி.க.) இணைவது தொடர்பாக இன்றுமாலைக்குள் உரிய பதில் கிடைத்துவிடும். மத்தியில் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு வாழ்வாதாரம் பெற்றுத்தரும் வகையில் போராடி நிரந்தர தீர்வாக காவிரி ஆணையத்தை பெற்றுத் தந்துள்ளனர்.
அதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தியது பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார். #MinisterThangamani

சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியவர் அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கையும், பூத் கமிட்டிகளும் அமைக்கப்பட்ட நிலையில் ரஜினி பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் ரஜினி விடுத்த அறிக்கையில் ‘சட்டமன்றமே நமது இலக்கு. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. நதி நீர் பிரச்சினை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று கூறி இருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இணைந்ததாக கூறப்பட்டது.
ரஜினி மன்றத்தில் இருந்து விலகிய அவர் கிருஷ்ணகிரி தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனை கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளரும் பேட்டியாக அளித்தார்.
இந்நிலையில் இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. அதில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணவேண்டும் என உறுப்பினர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. மேலும் மக்கள் மன்ற தலைவரின் அறிவிப்பின்றி எந்த கூட்டமோ, போராட்டமோ நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #rajinikanth #rajinikanthpolitics
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்றும், நாளையும் விருப்ப மனு வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விருப்ப மனு வாங்குவது ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சரத்குமார் கூறும்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று வர இயலவில்லை. எனவே, நாளை (ஞாயிறு) முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படும்.
ஏற்கனவே அறிவித்தபடி நாளை விருப்ப மனு வாங்கப்படும் தொகுதிகளுக்கு நாளையே வாங்கப்படும்.
இன்று வாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (திங்கள்) மனு வாங்கப்படும்.
இவ்வாறு சரத்குமார் கூறினார். #sarathkumar #parliamentelection
கரூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா எங்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்லலாமே தவிர, அவர்கள் தயவில்தான் அ.தி.மு.க. ஆட்சி செய்கிறது என்று சொல்லக்கூடாது. சட்டமன்றம்தான் ஆட்சி செய்யும் அதிகாரத்தை தருகிறது. அங்கு அ.தி. மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு நல்ல ஆட்சியை அமைத்து தந்தார். அந்த ஆட்சியை இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறந்த முறையில் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி ஜெயலலிதாவையும், எம்.ஜி. ஆரையும் பாராட்டி சென்றார்.
சென்னை மத்திய ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. வலிமையான மக்கள் இயக்கம். தமிழக மக்களின் உரிமைக்காகவும், மாநில சுய ஆட்சிக்காகவும், மொழியை காப்பதற்காகவும், பெரியார்,அண்ணா வழியில் எம்.ஜி.ஆர்., கட்சியை தொடங்கினார்.
வருகிற சட்டமன்ற இடைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஜெயலலிதா தந்த 123 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 124ஆக மாறும் நிலை ஏற்படும்.
ரகசியங்களை எப்போதும் வெளியிடுவது தி.மு.க.வின் வாடிக்கை. துரைமுருகன் கூட்டணி பேசிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் போர் நடந்த போது சந்திரசேகர் பிரதமராகவும் அவருக்கு ராஜூவ்காந்தி ஆதரவாகவும் இருந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை இலங்கைக்கு தந்ததால் அன்றே ஆட்சி கலைக்கப்பட்டது. கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.

மு.க.ஸ்டாலினின் அண்ணன் அழகிரி தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று கூறியிருக்கிறார். அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. துரோகத்தை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி.
2014 தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஜெயலலிதா அப்போது தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பா.ஜனதா கூட்டணி 3 தொகுதிகளில் வென்றது. ஆனால் இன்றைய நிலை அவ்வாறு இல்லை. இரு முனை போட்டி நிலவுகிறது. அதனால்தான் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk






