என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் முறையிட்டுள்ளார். #ThiruparankundramElection #MadrasHC
    சென்னை:

    ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

    அப்போது வக்கீல் அருண் ஆஜராகி திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து என் கட்சிக்காரரான தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தீர்கள். இந்த நிலையில், இந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

    இந்த வழக்கை காரணம் கூறி, ஐகோர்ட் மீது பொறுப்பினை சுமத்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நீதிபதி, தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே போஸ் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்து விட்டார். அதனால் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதும், அதற்கு விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. #ThiruparankundramElection #MadrasHC
    தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறியுள்ளார். #Congress #SanjayDutt

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு மக்களுக்கு எதனையும் செய்யாமல் ஏமாற்றிவிட்டது. பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி,வரி, சிறுதொழில்களை நசுக்குதல், விலைவாசி உயர்வு என மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் மூலமாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் தொழில்நிறுவனங்களே அதிக பலன் பெற்றுள்ளன. மற்ற தொழில்நிறுவனங்கள் எல்லாம் நசுக்கப்பட்டுள்ளன.

    தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும், கஜா புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் கூட மோடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உடனடியாக வரவில்லை. ஆனால் இப்போது அடிக்கடி வருகிறார்.

    ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்காக எதனையும் செய்ய முன்வரவில்லை. இதனால் பா.ஜ.க. அரசையே ஜெயலலிதா வெறுத்தார். ஆனால் இன்றுள்ள எடப்பாடி தலைமையிலான அரசு மோடியுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. ஏனென்றால் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் அதிகளவில் ஊழல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதற்கு துணையாக மோடியின் உதவி தேவைப்படுவதாலேயே இப்படி பேசி வருகின்றனர். கன்னியாகுமரியில்13-ந் தேதி நடைபெறும் கூட்டம் அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #SanjayDutt

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என்று சிவோட்டர் மற்றும் இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. #BJP #SurveyPoll
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று சிவோட்டர் நிறுவனமும், இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை தனித்தனியாக நடத்தின.

    இந்த 2 கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த 2 முடிவுகளிலும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது.

    சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ள முடிவுகள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 264 தொகுதிகள் வெற்றி பெறும். பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 220 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 141 இடங்களே கிடைக்கும். இதில் காங்கிரசுக்கு மட்டும் 86 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தவிர மாநில கட்சிகளுக்கும் அதிகளவு தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாநில கட்சிகளுக்கு 138 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும்.

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஓரளவு வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிதான் பாரதிய ஜனதாவின் தனி பெருமபான்மையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு 29 இடங்களே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா 71 இடங்களை கைப்பற்றி இருந்தது. அங்கு முன்பு போல பா.ஜனதா வெற்றி பெற்றால் 300 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று விடும்.

    பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பலமான 272 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை. பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதால் சில மாநில கட்சிகள் பா.ஜனதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளது.

    மொத்தத்தில் நாடு முழுவதும் பா.ஜனதா கூட்டணிக்கு 31.1 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 30.9 சதவீதம், மாநில கட்சிகளுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

    மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான தேர்தல் உடன்பாடு ஏற்படாததால் அந்த கட்சி கணிசமான தொகுதிகளில் தோல்வி அடையும் நிலையில் உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சிக்கு பீகாரில் 36, குஜராத்தில் 26, கர்நாடகாவில் 16, மத்திய பிரதேசத்தில் 24, மராட்டியத்தில் 36, ஒடிசாவில் 12, ராஜஸ்தானில் 20 தொகுதி களில் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு சிவோட்டர் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா டி.வி.டி.என். எக்ஸ் நடத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்து இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேரதலில் 238 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 82 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் பெறும் இடங்களை கருத்தில் கொண்டு அந்த கூட்டணிக்கு 285 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கிடைத்தால் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சமாக 126 இடங்கள் பெறவே வாய்ப்புள்ளது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். சமாஜ்வாடி கட்சிக்கு 18 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது.

    உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி காரணமாக பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும். என்றாலும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வெற்றிகள் பா.ஜனதாவின் உத்தபிரதேச இழப்பை ஈடு செய்யும் வகையில் இருக்கும்.

    இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP #SurveyPoll
    18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    இன்று இரவு அல்லது நாளைக்குள் திமுக கூட்டணி தொகுதிகள் வெளியாகும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    தி.மு.க. தனது பிரசாரத்தை மிகப்பெரிய அளவில் 12500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி சபை கூட்டத்தின் மூலமாக பிரசாரங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்.

    நியாயமாக பார்த்தால் தமிழகத்தில் 21 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வேண்டிய நிலை. ஆனால் 3 தொகுதிகளை தவிர்த்து 18 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை இங்குள்ள தேர்தல் கமி‌ஷன் சொல்லி இருக்கிறது. வழக்கை காரணமாக சொல்லி இருக்கிறார்கள்.

    வழக்கு நடந்தால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது மரபல்ல. தடை உத்தரவு போடவில்லை. எனவே அந்த 3 தொகுதிகளுக்கு தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? இதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. அதைத்தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை போட்டிருக்கிறோம்.

    தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கக்கூடிய இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக 15 மாதங்களாக இந்த 18 தொகுதிகளில் தேர்தலை நடத்தாமல் சதி செய்து வந்துள்ளது.

    இடையில் திருவாரூர் தொகுதியில் தேர்தல் என்று அறிவித்தார்கள். எந்த விதிமுறையில் இப்படி அறிவித்தார்கள் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

    தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை உள் நோக்கத்தோடு செயல்படக்கூடாது. எனவே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தேர்தல் கமி‌ஷனில் நேரம் கேட்டு இருக்கிறார்கள். இன்றோ அல்லது நாளையோ நேரம் ஒதுக்கி தருவதாக கூறி இருக்கிறார்கள்.

    அப்போது எங்களது பாராளுமன்ற உறுப்பினர் சிவாவும், டி.கே.எஸ். இளங்கோவனும் சென்று எங்களது கோரிக்கையை மனுவாக வழங்க இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லை என்று சொன்னால் தேவைப்பட்டால் நாங்கள் உயர்நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் நாடுவோம்.



    கேள்வி:- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை எப்போது அறிவிப்பீர்கள்?

    பதில்:- ஓரளவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்று பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறோம். இருந்தாலும் மரபுப்படி எல்லா கட்சிகளின் தொகுதிகளும் முழுமை அடைந்த பிறகு யாருக்கு எந்த தொகுதி என்பது வெளியிடப்படும். இன்று இரவோ அல்லது நாளையோ வெளியிடப்படும்.

    கே:- தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?

    ப:- இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும்.

    கே:- தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. மே 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த காலக்கெடுவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

    ப:- நீங்கள் ஒரு சந்தேகத்தில் கேட்கிறீர்கள் அந்த சந்தேகம் எங்களுக்கும் உள்ளது.

    கே:- மதுரையில் சித்திரை திருவிழாவின்போது தமிழகத்தில் தேர்தல் நடக்கிறதே?

    ப:- தேர்தல் கமி‌ஷன் தேர்தலை அறிவிக்கும்போது வெயில், பள்ளி, கல்லூரி தேர்வுகள், திருவிழாக்கள் எல்லாவற்றையும் மனதில் வைத்துதான் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். ஆனால் மதுரையில் நடக்கக்கூடிய கள்ளழகர் விழாவை பற்றி ஏன் நினைக்கவில்லை என்பதுதான் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது.

    எனவே இதுகுறித்தும் தேர்தல் கமி‌ஷன் பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

    கே:- 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

    ப:- இடைத்தேர்தலில் தி.மு.க. மட்டும் தான் போட்டியிடும்.

    கே:- வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதா?

    ப:- குளறுபடி உள்ளதாக மனு கொடுத்திருக்கிறோம். இதுதொடர்பாக மீண்டும் வலியுறுத்துவோம்.

    கே:- அ.தி.மு.க. கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- அது கொள்கை கூட்டணி அல்ல. தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் கொள்கை கூட்டணி

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடங்கியது. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளுக்கும் 1,736 பேர் விருப்ப மனு கொடுத்தனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் அ.திமு.க. போட்டியிடுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நேர்காணல் இன்று தொடங்கியது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், தமிழ் மகன்உசேன், பா.வளர்மதி, டாக்டர் வேணுகோபால் ஆகியோர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் நேர்காணல் நடத்தினார்கள்.


    சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய 10 தொகுதிகளுக்கு காலையில் நேர்காணல் நடந்தது.

    முதலாவதாக சேலம் தொகுதிக்கு தற்போது எம்.பி.யாக உள்ள பன்னீர் செல்வத்திடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு உள்ள சாதக, பாதகம் குறித்து கேட்டறிந்தனர்.

    மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

    வேட்பாளர் தேர்வு நடைபெறுவதால் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். நாளை 12-ந்தேதி மீதமுள்ள 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது. #LSPolls #ADMK #ADMKAlliance
    தேர்தல் பணிகளில் ஈடுபட டி.ஜி.பி.க்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இன்று வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் மீது குட்கா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. குட்கா வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டால் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி செயல்பட வாய்ப்புள்ளது.



    இதனால் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு. எனவே பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அவர் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என முறையிட்டார்.

    அதற்கு நீதிபதிகள், உங்கள் கோரிக்கை மனுவாக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் விசாரிக்கப்படும் என்றனர். #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
    தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளதால் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன. #Parliamentelection
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலை முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் சரியாக ஒரு வாரமே அவகாசம் உள்ளது. இதனால் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். மனுக்களை திரும்ப பெற 29-ந்தேதி கடைசி நாளாகும். அன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு விடும்.

    அன்று முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வெறும் 19 நாட்களே அவகாசம் உள்ளது. எனவே தலைவர்கள் இப்போதே தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிந்துவிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.-7, பா.ஜனதா-5, தே.மு.தி.க.-4, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. த.மா.கா.வும் இந்த அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வசம் 21 தொகுதிகள் உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு-10, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா-2 , ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    தொகுதி பங்கீடுகள் முடிந்துவிட்டதால் அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதிகளை எந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதுவும் இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

    வருகிற 19-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் தான் இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. தொகுதி முடிவானால் தான் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும். பொதுவாக எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்து அவர்களை முன்னிலைப்படுத்தியே தொகுதிகளையும் கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள்.

    பேச்சு வார்த்தையின்போது எங்கள் தரப்பில் இந்த வேட்பாளருக்காக இந்த தொகுதியை எதிர்பார்க்கிறோம் என்று தான் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். எங்கள் கட்சியில் இவர் இந்த தொகுதியில் போட்டியிட்டால் தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற அடிப்படையிலேயே கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி தொகுதிகளை முடிவு செய்கிறார்கள்.

    எல்லா கூட்டணிகளிலும் இன்று மாலை அல்லது நாளைக்குள் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக தி.மு.க. ஏற்கனவே நேர்காணலை முடித்து விட்டது. அ.தி.மு.க.வில் நேர்காணல் இன்றும், நாளையும் நடக்கிறது.



    எனவே இந்த வார இறுதிக்குள் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் களம் இறங்கும் வேட்பாளர்கள் முழு விவரம் தெரிய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    அடுத்த வாரம் வேட்பு மனுதாக்கல் தொடங்க இருப்பதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சுறுசுறுப்பான மனநிலைக்கு வந்துள்ளனர். இப்போதே பல இடங்களில் பிரசாரம் தொடங்கி விட்டது. அடுத்த வாரம் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டிவிடும். #Parliamentelection
    பாராளுமன்றத் தேர்தலின்போது, விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. #DMK #TNBypoll
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.

    இந்நிலையில், சென்னையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடவும் முடிவு செய்யப்பட்டது.



    அதன்பின்னர், 18 சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், விடுபட்ட அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    “3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாததற்கு கூறும் காரணங்கள் அடிப்படை ஆதாரமற்றது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், உயர்நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த 2 தொகுதிகள் தொடர்பான வேறு எந்த வழக்குகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிடப்படவில்லை. தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு அரசை மைனாரிட்டி அரசாக நீடிக்க அனுமதிப்பதா?

    எனவே, விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்படும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முன்வராவிட்டால் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DMK #TNBypoll
    பணப்பட்டுவாடா குறித்து சென்னை பெண் தொடர்ந்த வழக்கினால் தான் அரவக்குறிச்சி தேர்தல் நடத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #AravakurichiElection
    கரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த கீதா என்பவர் தொடர்ந்த வழக்கினால்தான் தேர்தல் நடத்தப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வழக்கு தொடர்ந்த கீதா நிருபர்களிடம் கூறியதாவது:-


    நான் சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கிறேன். தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாக உள்ளேன். அரவக்குறிச்சி சட்டசபை தேர்தல் நடந்த போது அதில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமியும், போட்டியிட்டனர். பணப்புழக்கம் அதிகம் இருந்தது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் அந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டது.

    பணப்புழக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நான் பொது நல வழக்கை சென்னை கோர்ட்டில் தொடர்ந்தேன். கோர்ட்டு அந்த வழக்கை ஏற்காததோடு எனக்கு அபராதமும் விதித்தது.

    தொடர்ந்து மீண்டும் அரவக்குறிச்சி தேர்தல் நடத்த அறிவிப்பு வந்த போது நான் அந்த தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அதன்பின்னர் நான் அந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் என்ற முறையில் ஏற்கனவே பணப்பட்டுவாடா பிரச்சனையில் தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடந்த தேர்தலில் செந்தில்பாலாஜி, கே.சி. பழனிசாமி ஆகியோரை நிற்க அனுமதித்தது தவறு என்றும், செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லாது என்றும் வழக்கு தாக்கல் செய்தேன்.

    அந்த வழக்கிற்கு செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை வாங்கினர். இப்போது அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகத்தான் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #AravakurichiElection
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். #LSPolls #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan

    வடலூர், மார்ச்.11-

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் வடலூரில் நடைபெற் றது.

    கட்சி தலைவர் வேல்முருகன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும் செல்போன் மூலமாக அவர் பேசியது, கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் என்னால் கூட்டத்திற்கு வர முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும். ஒரு சீட்டுக்காக யாரிடமும் விலை போக மாட்டேன். தொடர்ந்து தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறி னார். பின்னர் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் தேர்தல் கமிட்டி தலைவர் ஜம்புலிங்கம், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெரோன்குமார், நகர செயலாளர் அய்யப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலோடு புதுவையில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LSPolls #ThattanchavadyByPolls
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி மறுசீரமைப்பில் 3 தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.

    கதிர்காமம், இந்திரா நகர் மற்றும் தட்டாஞ்சாவடி என 3 ஆக பிரிக்கப்பட்டது. இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    மீண்டும் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிட்டு 2-வது முறை எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் அவர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து அசோக் ஆனந்தின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. மேலும், தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாகவும், சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார். இந்த அறிவிப்பு முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலோடு தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு செய்யும் அதே நாளில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

    இதன்படி தி.மு.க. வேட்பாளர் களம் இறங்க உள்ளது. தி.மு.க.வை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார். இதற்கான வேட்பாளர் தேர்வு 2 கட்சியிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 29 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் 27 வாக்குச் சாவடிகள் அமைத்து தேர்தல் நடத்தப்படும் என்று புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுந்தவேலு தெரிவித்துள்ளார்.

    கடந்த சட்டப்படி தேர்தலில் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-

    அசோக் ஆனந்த்  (என்.ஆர்.காங்கிரஸ்) - 12,754
    சேது செல்வம்  (இந்திய கம்யூனிஸ்டு) - 5,296

    7 ஆயிரத்து 458 வாக்கு வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். #LSPolls #ThattanchavadyByPolls

    ×