search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது - வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்
    X

    கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது - வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்

    தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளதால் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன. #Parliamentelection
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலை முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் சரியாக ஒரு வாரமே அவகாசம் உள்ளது. இதனால் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். மனுக்களை திரும்ப பெற 29-ந்தேதி கடைசி நாளாகும். அன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு விடும்.

    அன்று முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வெறும் 19 நாட்களே அவகாசம் உள்ளது. எனவே தலைவர்கள் இப்போதே தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிந்துவிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.-7, பா.ஜனதா-5, தே.மு.தி.க.-4, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. த.மா.கா.வும் இந்த அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வசம் 21 தொகுதிகள் உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு-10, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா-2 , ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    தொகுதி பங்கீடுகள் முடிந்துவிட்டதால் அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதிகளை எந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதுவும் இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

    வருகிற 19-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் தான் இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. தொகுதி முடிவானால் தான் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும். பொதுவாக எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்து அவர்களை முன்னிலைப்படுத்தியே தொகுதிகளையும் கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள்.

    பேச்சு வார்த்தையின்போது எங்கள் தரப்பில் இந்த வேட்பாளருக்காக இந்த தொகுதியை எதிர்பார்க்கிறோம் என்று தான் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். எங்கள் கட்சியில் இவர் இந்த தொகுதியில் போட்டியிட்டால் தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற அடிப்படையிலேயே கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி தொகுதிகளை முடிவு செய்கிறார்கள்.

    எல்லா கூட்டணிகளிலும் இன்று மாலை அல்லது நாளைக்குள் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக தி.மு.க. ஏற்கனவே நேர்காணலை முடித்து விட்டது. அ.தி.மு.க.வில் நேர்காணல் இன்றும், நாளையும் நடக்கிறது.



    எனவே இந்த வார இறுதிக்குள் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் களம் இறங்கும் வேட்பாளர்கள் முழு விவரம் தெரிய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    அடுத்த வாரம் வேட்பு மனுதாக்கல் தொடங்க இருப்பதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சுறுசுறுப்பான மனநிலைக்கு வந்துள்ளனர். இப்போதே பல இடங்களில் பிரசாரம் தொடங்கி விட்டது. அடுத்த வாரம் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டிவிடும். #Parliamentelection
    Next Story
    ×