என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    என்னிடம் இன்றைக்கு பொறுப்பை கொடுத்தால், மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன் என டி.ஆர்.பாலு சவால் விடுத்துள்ளார். #TRBaalu #DMK
    தாம்பரம் :

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

    1 லிட்டர் பெட்ரோல் ரூ.74.75-க்கு விற்கப்படுகிறது. இது நியாயமான விலை கிடையாது என்று நான் சொல்கிறேன். காரணம் நான், 1996-ல் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தேன்.

    இன்றைக்கு என்னிடம் அந்த பொறுப்பை கொடுங்கள். நான் நாளை காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன். மோடி எங்கெங்கோ சென்று சவால் விடுகிறார்.

    நான் சவால் விடுகிறேன். 40 ரூபாய்க்கு நான் பெட்ரோலை கொடுக்கிறேன். அப்படி செய்தால் பா.ஜனதாவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது. பா.ஜனதாவினரால் அது முடியுமா?.

    இவ்வாறு அவர் பேசினார். #TRBaalu #DMK
    மண்டியா மக்களை ஏமாற்ற ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்று நடிகை சுமலதாவை நிகில்குமாரசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    ஹலகூர் :

    பாராளுமன்ற தேர்தலை கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில், மண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் நடிகை சுமலதா காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்த சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    இதனால் நடிகை சுமலதா, நிகில் குமாரசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் மண்டியாவில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கரடகெரே கிராமத்தில்நிகில் குமாரசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் தான் ஹீரோக்கள்

    நான் எந்த சுயநலத்திற்காகவும் இங்கு போட்டியிட வரவில்லை. எனது தாத்தா தேவேகவுடா, தந்தை குமாரசாமி வழியில் மக்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் தான் மண்டியா தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றுள்ளது. மண்டியா மாவட்டத்தை பற்றிய அறிவு எங்களிடம் இருக்கிறது. எனவே என்னை உங்கள் வீட்டுபிள்ளை என நினைத்து ஆசிர்வதித்து தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும். விவசாயிகள் தான் நமது ஹீரோக்கள். தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் திரண்டு வந்து விவசாயிகள் என்னை உற்சாகமாக வரவேற்றனர்.

    என்னை தோற்கடிக்க எதிரிகள் தந்திரங்களை கையாளுகிறார்கள். அந்த கூட்டம் மண்டியா மாவட்ட மக்களை ஏமாற்ற புறப்பட்டுள்ளனர். எந்த காரணத்தை கொண்டும் அவர்களுக்கு நீங்கள் (மக்கள்) ஆதரவு கொடுக்காதீர்கள். (அதாவது நடிகை சுமலதாவை தான் நிகில்குமாரசாமி மறைமுகமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

    இன்று (அதாவது நேற்று) தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தேவேகவுடா குடும்பத்தினர் செய்ததில்லை. செய்யமாட்டோம். போராடி வெற்றி பெறுவேனே தவிர, கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடமாட்டேன்.

    யார் குற்றச்சாட்டு கூறுகிறார்களோ, அவர்களே தொலைக்காட்சி ஒளிபரப்பை தடை செய்துவிட்டு எங்கள் மீது ஏன் குற்றம்சாட்டக் கூடாது?. எனவே அதை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சாமி கோவிலில் நிகில் குமாரசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் மந்திரி டி.சி.தம்மண்ணா உள்பட பலர் இருந்தனர். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy 
    மக்களை முட்டாள்கள் என நினைப்பதை நிறுத்துங்கள் மோடி என்று பிரியங்கா காந்தி சாடினார். #PMModi #PriyankaGandhi
    மிர்சாப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசார களத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பம்பரமாக சுழன்று வருகிறார்.

    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கு பொறுப்பேற்ற அவர், பிரயாக்ராஜ் ஆக இப்போது மாறியுள்ள அலகாபாத் நகரில் இருந்து பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசிக்கு 100 கி.மீ. தொலைவுக்கு கங்கை நதியில் படகில் பயணம் செய்து கங்கைக்கரை மக்களின் ஆதரவை திரட்டினார். இந்தப் பயணத்தின் இடையே நேற்று அவர் மிர்சாப்பூரில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி கருத்துக்கள் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-



    நாட்டின் அரசு அமைப்புகள் ஒவ்வொன்றின் மீதும் பிரதமர் கடந்த 5 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வந்திருக்கிறார். நீங்கள் அங்கமாக இருக்கிற அரசு அமைப்பும் இதில் அடங்கும்.

    மக்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று நினைப்பதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    எங்களுக்கு ஏதாவது நடந்தாலும், நாங்கள் தொல்லைக்கு ஆளானாலும், நாங்கள் பயப்பட மாட்டோம். அவர்களுக்கு எதிரான எங்கள் போரைத் தொடர்ந்து நடத்துவோம். நாங்கள் எந்தளவுக்கு தொல்லைக்கு ஆளாகிறோமோ, அதே அளவுக்கு பலம் வாய்ந்தவர்கள் ஆவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மிர்சாப்பூரில் ஒரு கோவில் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியிலும் பிரியங்கா பேசினார்.

    அப்போது அவர் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி எதையுமே செய்யவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த அரசு லாலிபப்புகளைத்தான் (குச்சி மிட்டாய்களை) மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.அரசியல் என்பது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    “காங்கிரஸ் ஆட்சியிலே வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது, நாட்டின் மிகப்பெரிய திட்டமாக மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வந்தோம்” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.ஆனால் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியிலோ தொழிலாளர்களுக்கு பதிலாக எந்திரங்களை கொண்டு வந்துவிட்டார்கள் எனவும் அவர் சாடினார்.

    மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி விவசாயிகளுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் உழைக்கும் என்று அவர் உறுதி அளித்தார். #PMModi #PriyankaGandhi
    திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. #Election2019 #vck
    பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பிடித்துள்ளது. அந்தக் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார்.

    அவர் தேர்தல் கமிஷனிடம் மோதிரம் சின்னம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தார். ஆனால், மோதிரம் சின்னம் வழங்கவில்லை. இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில் ‘‘தேர்தல் கமிஷன் சின்னம் வழங்குவதில் காலதாமதம் செய்கிறது’’ என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். #Election2019 #vck
    கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்று ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். #mkstalin #parliamentelection #tngovt
    சென்னை:

    தஞ்சையில் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வாக்கு கேட்கிறேன்.  பிறந்த ஊரான திருவாரூரில் தொடங்கி வளர்ந்த ஊரான தஞ்சைக்கு வந்துள்ளேன். 

    தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஆட்சியா நடக்கிறது? மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நிலை ஏற்படத்தான் போகிறது. 

    எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு ஈடாகாது. அதிமுக ஆட்சிக்கு ஆதரவளித்த 18 பேரிடம் தற்போது பதவிகள் இல்லை. 18 பேருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பதே என் கேள்வி.  கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்று ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #mkstalin #parliamentelection #tngovt
    சென்னையில் 3 தொகுதிகளின் வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க 6 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். #Parliamentelection #LSPolls

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு அதிகாரி வீதம் மொத்தம் 6 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    வடசென்னை தொகுதியில் உள்ள திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சஞ்ஜீவ் குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது செல்போன் எண்:94999-56202. பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிக்கு விவேகானந்த் பவுரியர் செல் எண்:94999-56203.

    தென்சென்னை தொகுதியில் உள்ள சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளை அதிகாரி எம்.நவீன் (9499956205) கண்காணிக்கிறார்.

    விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் தொகுதிக்கு அதிகாரி குருபிரசாத் (9499956206) நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்திய சென்னை தொகுதியில் உள்ள வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரி ஆர்.எம்.முஜும்தர் (94999-56209) செயல்படுகிறார்.

    துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரி வி.என்.மங்கராஜு (94999-56208) நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த 6 அதிகாரிகளும் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவின பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தேர்தல் முடியும் வரை சென்னையில் தங்கி இருந்து அனைத்து தேர்தல் பணிகளையும் கண்காணித்து வருவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். #Parliamentelection #LSPolls

    13 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கிடைத்திட தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். #kanimozhi #mkstalin #sterliteplant

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக் நகரில் தி.மு.க. காரியாலயத்தை திறந்து வைத்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    ஜனநாயகத்தை காக்க இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில் நான் வேட்பாளராக நிற்கிறேன். எனக்கு மக்கள் அமோக ஆதரவளித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    நீட் தேர்வை கொண்டு வந்த அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு நீதி கிடைத்திட தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழிற் சாலைகள், தொழில்வளங்கள் பெருக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். #kanimozhi #mkstalin #sterliteplant

    நெல்லை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை ரொக்க பணம் ரூ.99 லட்சமும், பரிசு பொருட்களுடன் சேர்த்து ரூ.1 கோடி வரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இன்றும் பறக்கும் படை அதிகாரிகள் காலையிலேயே தங்கள் அதிரடி வேட்டையை தொடங்கினார்கள். பழைய பேட்டை செக் போஸ்ட் பகுதிகளிலும், கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரத்தில் இன்று அதிகாலை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ராஜபாளையத்தில் இருந்து நெல்லைக்கு வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கணேசனிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. அதை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்துடன் வந்த காரில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் சிக்கியது. இதைத்தொடர்ந்து இன்று அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், அ.ம.மு.க. வேட்பாளர் ஞான அருள்மணி ஆகியோர் நெல்லை வந்தனர். அவர்களுடன் ஏராளமான கார்கள் வந்ததால், பாளை கே.டி.சி. நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் வரும் வாகனங்கள், வேன்கள் போன்றவற்றிலும் அதிரடி சோதனை நடந்தது.

    வேட்பாளர்களுடன் வந்த கார்களை, தேர்தல் செலவு கணக்கு கண்காணிப்பு அதிகாரிகள் குழுவினர் வீடியோ எடுத்தனர். மேலும் தேர்தல் பிரசாரம் குறித்த பல்வேறு அம்சங்களையும் இன்று கண்காணிப்பு அதிகாரிகளின் குழுவினர் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவங்கள் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.  #Parliamentelection #LSPolls
    டெல்லியில் கூட்டணி குறித்து காங்கிரசுடன் இனி பேசமாட்டோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #AamAadmi #Kejriwal

    புதுடெல்லி:

    பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும் ஒரு சில மாநிலங்களில் இந்த முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

    டெல்லி மாநிலத்தில் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலுமே கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.

    இந்த தடவை காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் தொகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. இந்த இரு கட்சிகளுமே பாரதிய ஜனதாவுக்கு எதிரானவையாகும்.

    எனவே இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கு முயற்சித்தன. 7 தொகுதிகளை சம அளவில் பிரித்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. காங்கிரசுக்கு 2 தொகுதிகள் மட்டும் விட்டு கொடுத்து 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட விரும்பியது.

    ஆனால் சம அளவு தொகுதி வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது. 7 தொகுதிகளை சமமாக பிரிக்க முடியாது என்பதால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புதிய சமரச திட்டம் ஒன்றை உருவாக்கினார்.

     


    இதன்படி ஆம் ஆத்மி, காங்கிரஸ் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுவது, ஒரு தொகுதியை பொதுவான நபர் ஒருவருக்கு விட்டுக்கொடுத்து இரு கட்சிகளும் ஆதரவளிப்பது என்பது திட்டமாகும்.

    இதற்கும் ஆம் ஆத்மி கட்சி உடன்படவில்லை. இது சம்பந்தமாக இரு கட்சி தலைவர்களும் நீண்ட நாட்களாக பேசி வந்தனர். ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    இந்த நிலையில் சரத்பவார் நேற்று டெல்லி வந்தார். அவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் ஆம் ஆத்மி கட்சி மேல் சபை தலைவர் சஞ்சய் சிங்கை சந்தித்தார். இரு தரப்பினரிடமும் கூட்டணிக்கு சம்மதிக்கும்படி வற்புறுத்தினார். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி அமைப்பாளர் கோபால் ராய், “நாங்கள் தனித்து போட்டியிடப்போகிறோம். காங்கிரசுடன் கூட்டணி இல்லை” என்று கூறினார்.

    இதை கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆமோதித்துள்ளார். நேற்றுடெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இது பற்றி கூறும்போது, “இனி காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி குறித்து பேச மாட்டோம். காங்கிரசை பொறுத்தவரை தனது கூட்டணியை பலவீனமாக்கி வருகிறது. அவர்களுடன் பேசுவதால் இனி எந்த பலனும் இருக்காது” என்று கூறினார்.

    டெல்லி காங்கிரஸ்மேலிட பார்வையாளர் பி.சி. சாக்கோ கூறும் போது, “பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. டெல்லி முக்கிய தலைவரான ஷீலா தீட்சித்தை நான் சந்தித்து பேசியபோது அவர் ஆம் ஆத்மியிடம் கூட்டணி வேண்டாம் என்று பிடிவாதமாக கூறுகிறார். இனி இதுபற்றி ராகுல் காந்திதான் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார். #AamAadmi #Kejriwal

    பாராளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். #Mayawati #LSPolls
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவை கூட்டணி வைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் மட்டும் கூட்டணி சார்பில் போட்டியிடவில்லை. 

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை, நாட்டின் தேவை மற்றும் கட்சி, இயக்கம் மற்றும் பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியிருக்கிறார். 

    கூட்டணியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும், தனது தனிப்பட்ட வெற்றியை விட ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார். #Mayawati #LSPolls
    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். #makkalneedhimaiamparty #kamalannouncescandidates
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வந்தார்.



    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடவிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் இன்று வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் பெயர் வருமாறு:-

    அரக்கோணம்-என். நாகேந்திரன், வேலூர்-ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரி- காருண்யா, தர்மபுரி-வழக்கறிஞர் ராஜசேகரன், விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி, சேலம் -என் பிரபு மணிகண்டன், நீலகிரி -வழக்கறிஞர்  ராஜேந்திரன், திண்டுக்கல்- டாக்டர் சுதாகர், திருச்சி- வி. ஆனந்தராஜா, மத்திய சென்னை- கமிலா நாசர், சிதம்பரம்- ரவி, மயிலாடுதுறை- ரிபைதின், நாகை- குருவையா, தேனி- வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி- பொன் குமரன், திருநெல்வேலி- வெண்ணிமலை, கன்னியாகுமரி-எபிநேசன், புதுச்சேரி-எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், திருவள்ளூர் - லோக ரங்கன், வடசென்னை- ஏஜி மவுரியா, ஸ்ரீபெரும்புதூர்- என் சிவக்குமார்.

    முதற்கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற வேட்பாளர்கள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். #makkalneedhimaiamparty #kamal

    பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தை வெயிலில் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

    சென்னை:

    தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ல் நடைபெற இருப்பதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.

    தற்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயில் நேரத்தில் பிற்பகலிலும் பகல் நேரத்திலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறுவதால் தங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக சில அமைப்புகளிடம் இருந்தும் குடிமக்கள் குழுக்களிடம் இருந்தும் முறையீடுகள் வந்துள்ளன.

    மேலும் இதுபோன்ற கூட்டங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழல் தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட வேண்டும்.

    பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகளை செய்து கொடுத்தால் தான் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும் போது யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும். எனவே மேற்கண்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஏஜெண்ட்கள் அனைவரும் பின்பற்றி பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

    ×