என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கலைச்செல்வி வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் இருந்த 40 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவணந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40) அரசு பஸ் டிரைவர். இவர் வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி கலைச்செல்வியும் நேற்று மாலை உடல் நிலை சரியில்லாததால் திண்டிவனம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் வீட்டை திறந்து வீட்டில் இருந்த 40 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கலைச்செல்வி வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பீரோவில் இருந்த 40 பவுன் நகை திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவரின் ஊருக்கு நேரில் சென்று பார்த்த போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அந்த நபரின் செல்போன் மூலமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே பட்டப்பகலில் வீட்டில் இருந்த 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்
    • இந்த திருமணத்தில் எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்

    தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மாநில மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளர் தேன்மொழி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, மணமக்கள் ரூபன்சாந்தகுமார் - அனுபிரியா தம்பதியரை வாழ்த்தினார்.

    இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்த திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்.. அது மந்திரம் அல்ல, என்.சி.சி. யில் சொல்லும் இந்தி கமாண்ட். அம்மாதிரி இல்லாமல் இப்போது எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்" என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

    • தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம்.
    • மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா நேற்று நடந்தது.

    இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழா நடைபெற்று வந்தது. நேற்று காலை தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம், மகா தீபாரதனையும், காவடி பூஜையும், நடைபெற்றது.

    பிற்பகல் 2 மணி அளவில் பாலதண்டாயுதபாணி சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று பக்தர் ஒருவருக்கு மார்பு மீது மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செடல் சுற்றுதல் தீமிதித்தல், தேர் வீதி உலா ஆகியவை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவதானம் பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    • புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திண்டிவனம்:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் அரங்கேறி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு பொருளாதார பேராசிரியராக குமார் பாடம் எடுத்து வருகிறார்.

    இவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதள மூலமாகவும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பேராசிரியர் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும் அதற்கு மாணவி மறுத்து விட்டதாகவும் மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி மாணவி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மாவட்ட செயலாளர் நிரஞ்சனுக்கு 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் வரவேற்பளிக்க திரண்டு இருந்தனர்.
    • டிரைவர் சிவச்சந்திரன் உட்பட 15 பேர் மீது மயிலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

    மயிலம்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அனைத்து மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக நிரஞ்சனை த.வெ.க தலைவர் விஜய் தேர்வு செய்துள்ளார்.

    நேற்று காலை 11 மணி அளவில் மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டிற்கு வருகை தந்த கட்சியின் மாவட்ட செயலாளர் நிரஞ்சனுக்கு 200-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் வரவேற்பளிக்க திரண்டு இருந்தனர்.

    இந்நிலையில் போலீசாரிடம் அனுமதி பெறாமல் பொது இடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு கிரேன், பொக்லின், டாடா ஏசி போன்ற வாகனங்களை சாலையில் நிறுத்தி கூட்டேரிப்பட்டு 4 முனை சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வடக்கு மாவட்ட செயலாளர் நிரஞ்சன், மணிகண்டன், ஜீவன், ரமேஷ், தனசேகர், டேவிட், ஹேமச்சந்திரன், சங்கீதா, திவாகர், பிரதாப், தவப்புதல்வன், பார்த்திபன் மற்றும் ஜே.சி.பி. டிரைவர் வெண்ணி,கிரேன் ஆபரேட்டர் பிரபாகரன், டாட்டா ஏ.சி. டிரைவர் சிவச்சந்திரன் உட்பட 15 பேர் மீது மயிலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும்.
    • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னர், அரசுக்கு இடையிலான மோதல் உயர்கல்வியை பாதிக்கக்கூடாது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தது. பாரதியார், கல்வியியல், அண்ணா, பெரியார், அழகப்பா, அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆறுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து 7 பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உயர்கல்விதுறையில் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் 11 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகிவிடும். துணைவேந்தர் கையெழுத்து இல்லாத சான்றிதழ்கள் செல்லதக்கது அல்ல. இந்த நிலை நீடிக்கக்கூடாது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய 2023-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணபித்தவர்களுக்கு 2024 தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்வானவர்கள் பட்டியல் ஜூலை மாதம் வெளியிடப்பட்டு இன்று வரை பணிநியமன ஆணை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு 6 மாதம் கடந்தும் திருத்தம் செய்யவும் அரசு முயற்சிக்கவில்லை. அரசுப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஒய்வு பெற்ற நிலையில் ஒரு ஆசிரியர்கூட நியமிக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையையும், இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு முடிவை வெளியிடவேண்டும்.

    தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாராட்டி, தேசிய அளவில் இக்கணக்கெடுப்பு நடத்த எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வலியிறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமை வலியிறுத்த வேண்டும்.

    ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடைவிதித்தது செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் 19 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை பெற அரசு முயற்சிக்க வேண்டும்.

    தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 963 கிமீ நீளத்திற்கு 4 வழிச்சாலைகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் சுங்கச்சாவடிகள் 90 ஆக அதிகரிக்கும் என மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சுங்கக்கட்டணம் செலுத்த முடியாமல் செல்ல இயலாத நிலை ஏற்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் 658 சிறப்பு டாக்டர்களை நேர்காணல் மூலம் நியமிக்கும் முடிவை அரசு கைவிட்டு போட்டித்தேர்வின் மூலமே நியமிக்க வேண்டும். இப்படி நியமிக்கப்பட்டால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆசிரியர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் உள்ள காடுவெட்டி குருவின் சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவிக்க சென்றபோது வன்னியர்களுக்கு தி.மு.க. செய்த துரோகத்தை உரக்க சொல்லிய 3 பேரை போலீசார் கைது செய்ததை கண்டிக்கிறோம்.

    திருப்பரங்குன்றம் தொடர்பாக நிகழ்வில், அம்மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. கடந்த காலங்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களுக்கும் கடைபிடித்த நடைமுறை தொடர்பான அமைதிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி உடன் இருந்தார்.

    • பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள்.
    • திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல.

    தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

    இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், திண்டிவனம் அருகே மறைந்த கட்சிநிர்வாகி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், "இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.

    திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. விசிகவுக்கும் அவர்தான் வழிகாட்டி. ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    • அடுத்த மாதம் மயானக்கொள்ளை நடைபெற இருப்பதால் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தா னத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா, ஓம் சக்தி அங்காளம்மா, என கோஷத்துடன அம்மனை வழிபட்டனர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து உற்சவர் அம்மன் கோவிலின் உட்பிரகாரத்துக்குச் சென்றார். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அடுத்த மாதம் அமாவாசை அன்று மயானக் கொள்ளை விழா நடைபெறுவதாலும் அன்று இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் வீதி உலா வருவதாலும் அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான்.
    • என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்த சாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் 21 சமூக போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்து 21 சமூக நீதி போராளிகளின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சாமிநாதன், ராஜேந்திரன் மற்றும் ஏ.கே.கோவிந்தசாமியின் மகனும், பா.ஜ.க. மாநில துணைத்தலைவருமான ஏ.ஜி.சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ. கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைத்த நிகழ்வாகும். 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பிரசாரத்துக்கு வந்த என்னிடம் அமைச்சர் பொன்முடி, அன்னியூர் சிவா ஆகியோர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது கோரிக்கை வைத்தவர்களிடம் நிச்சயம் மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்தேன். அதன்படி ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாததாகும். மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ. கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார்.

    21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு உருவாக்கப்பட்டு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதாமாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது, வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது தி.மு.க. ஆட்சியில்தான்.

    தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்திற்கான தேவைகள் கண்டறியப்பட்டது.

    அதன்படி நந்தன் கால்வாய் ரூ.304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ.84 கோடியில் தளவானூர் தடுப்பணை, காணையில் ரூ.35 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ. 4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ. 2 கோடி மதிப்பில் டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன்.

    என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்.

    நிதி இல்லாவிட்டாலும் மக்களின் கோரிக்கையை தீர்க்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது. எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே சொல்லி கொண்டிருப்பார்கள். அது ஆட்சியின் மீதான குறை அல்ல. எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்தி சோர்ந்து விட்டனர். தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சென்றுள்ளேன். ஆனால் அதிக திட்டங்களை பெற்றது விழுப்புரம் மாவட்டம்தான். நேற்று இரவு மாவட்ட கலெக்டர் பழனியுடன் ஆய்வு நடத்தினேன். அப்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டறிந்து கொண்டேன். விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    • நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.
    • விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 231 திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    வீரத்தின் விளைநிலம் விழுப்புரம் மாவட்டம். வரலாறு பெருமை கொண்டது விழுப்புரம் என்று பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இலக்கிய புகழும், பெருமைகளும் நிறைந்த மாவட்டம் விழுப்புரம்.

    * விழுப்புரத்தின் பெருமையை பற்றி பேச நாளும் பொழுதும் பத்தாது.

    * கோவிந்தசாமி நினைவரங்கம், சமூக நீதி போராளிகள் நினைவாக மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * வாழ்நாள் எல்லாம் எண்ணி பெருமைபடும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.

    * தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஏ. கோவிந்தசாமி.

    * தமிழகத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்று முதலில் வென்றவர் ஏ.கோவிந்தசாமி.

    * வன்னிய சமுதாய மக்கள் இடஒதுக்கீடு கேட்டு போராடிய போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * இன்றும் துடிப்பு மிக்க போராளியாக திகழ்பவர் பொன்முடி.

    * அதிமுக ஆட்சியில் காக்கை, குருவிகளை போல் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    * மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர்.

    * இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பென்சன் வழங்கியவர் கலைஞர்.

    * ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியில் தான்.

    * சமூகநீதியை நிலைநாட்டுவது தான் திராவிட இயக்கத்தின் நோக்கம்.

    * சொன்னபடியே 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

    * பிற்படுத்தப்பட்டோர் இன்று முன்னேறுவதற்கு கருணாநிதியை காரணம்.

    * சமூகநீதி அகில இந்திய அளவில் போராடி வருவதும் திமுக தான்.

    * நூற்றாண்டு கடந்த திமுக இன்றளவும் சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருகிறது.

    * விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * சாத்தனூர் அணையின் உபரிநீர் நந்தன் கால்வாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சாத்தனூர் அணை உபரிநீருக்காக ரூ.304 கோடி செலவில் நந்தன் கால்வாய்திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * சங்கரபாணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும்.

    * விக்கிரவாண்டி பேரூராட்சியில் பல்நோக்கு சமுதாய கூடம் அமைக்கப்படும்.

    * செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

    * ரூ.5 கோடியில் திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வழங்க திட்டம்.

    * நிதி மட்டுமே தடையாக உள்ளது, வேறு எந்த தடையும் எங்களுக்கு இல்லை.

    * குறை சொல்வது எதிர்க்கட்சி தலைவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குறைபாடு

    * எந்த பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.

    * நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது அல்ல நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே எனது இலக்கு.

    * நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதை அடையவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றார். 

    • முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் முதலமைச்சர் செல்பி எடுத்துக்கொண்டார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரோட் ஷோ மூலமாக சாலைகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திண்டிவனம் பகுதியில் கோரிக்கை மனுவை பெற்றார்.

    இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரி வரை சாலையில் நடந்தே சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அவர் செல்பி எடுத்து கொண்டார்.

    அப்போது முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றுதிறனாளிகள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் என பலதரபட்டவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றபோது பெண் ஒருவர் செல்பி எடுக்க கேட்டு கொண்டதின் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்ணின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக்கொண்டு பெண்ணிடம் செல்போனை கொடுத்தார்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள், விவசாயிகள், வக்கீல்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முதலமைச்சர் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

    • ரூ.133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழுப்புரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



    இதனை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரிடம் மனுக்களை வழங்கினர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷாமிட்டல் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 20 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×