என் மலர்tooltip icon

    வேலூர்

    மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.  

    நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள். நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன். மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள். ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    திமுக தலைவர் ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
    வாணியம்பாடி

    வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “  ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றி பெற்றது திமுக. 

    இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். 
    முக ஸ்டாலின்
    ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. திமுகவின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மிகவும் உயர்தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகமானோர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு" என்றார். 
    ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாலாற்றில் உள்ள பம்ப் ஹவுஸ்சில் இருந்து உயர் மின் அழுத்த மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சபட்டு குடிநீர் வழங்கபட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). மரம் வெட்டும் தொழிலாளி.

    இவர் ஆற்காடு அருகே உள்ள முப்பதுவெட்டி பகுதியில் தங்கி மரம் வெட்டும் தொழிலை செய்து வந்தார்.குமார் நேற்று இரவு பம்ப் ஹவுஸ்சில் உள்ள மின் ஒயர்களை திருட முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து ஆற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    வேலூர்:

    பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மும்முனை போட்டி இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க. இடையே தான் போட்டி உள்ளது.

    தேர்தல் பிரசாரம் 3-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டர்கள் குவிந்துள்ளதால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திருவிழாவை போல் கூட்டம் காணப்படுகிறது.

    அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் தொகுதி வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார். அதேபோல், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் இன்று தொடங்கி 3 நாட்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்.

    இருவரும் ஒரே நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதால் பிரசாரம் களம் சூடுபிடித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாளைக்கு 2 தொகுதிகள் வீதமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு நளைக்கு ஒரு தொகுதி என்றும் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு வாணியம்பாடி பஸ் நிலையத்தில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து 6 மணிக்கு ஆம்பூர் பஸ் நிலையத்தில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

    நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம் பஸ் நிலையம், 6 மணிக்கு குடியாத்தம் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து 2-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அணைக்கட்டிலும், 6 மணிக்கு வேலூரிலும் பிரசாரம் செய்கிறார்.

    முதல்-அமைச்சர் பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஜ.ஜி. நாகராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு பணியில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

     

    முக ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் இன்று பிரசாத்தை ஆரம்பித்து விட்டார். காலை வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்.

    இன்று மாலை 4 மணிக்கு கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட லத்தேரி, செஞ்சி, பனமடங்கி, பரதராமி, சித்தூர் கேட், கொண்ட சமுத்திரம், கீழ்ஆலத்தூர், கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல் பகுதியில் வாசன் பிரசாரம் செய்கிறார்.

    நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செக்குமேடு, மிட்டூர், நிம்மியம்பட்டு, வாணியம்பாடி, பெருமாள்பேட்டை, வாணியம்பாடி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை மறுநாள் திங்கட்கிழமை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலப்பாடி, வண்டிபாலத்தெரு, அல்லாபுரம், பலவன் சாத், தொரப்பாடி, சித்தேரி, பொன்னாத்தூர், தொரப்பாடி, பொற் கோவில், ஊசூர் (தெள்ளூர்), அணைக்கட்டு, குருராஜ பாளையம், ஒடுக்கத்தூர், மாதனூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    வேலூர் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் பிரசாரம் செய்ய வருகிறார்.

    துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 29-ந்தேதி திங்கட்கிழமை அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஒடுகத்தூரில் மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி லத்தேரியில் 6 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.

    குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி பேரணாம்பட் டில் 30-ந்தேதி செவ்வாய்க் கிழமை மாலை 4 மணிக்கும், வேலூரில் 6 மணிக்கு பேசுகிறார்.

    1-ந்தேதி வியாழக்கிழமை வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி ஆலங்காயத்தில் மாலை 4 மணிக்கும், ஆம்பூரில் மாலை 6 மணிக்கு பேசுகிறார். அவர் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    கனிமொழி எம்.பி., 30-ந் தேதி வேலூரில் பேசுகிறார். 31-ந்தேதி வாணியம்பாடி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில பிரசாரம் செய்கிறார்.

    உதயநிதி ஸ்டாலின் 29-ந்தேதி வாணியம்பாடி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதியிலும் 30-ந்தேதி குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிகளில் ஒட்டு சேகரித்து பேசுகிறார். 31-ந் தேதி அணைக்கட்டு, வேலூ ரில் பிரசாரம் செய்கிறார்.

    திண்டுக்கல் ஐ.லியோனி 30-ந்தேதி குடியாத்தம், பேரணாம்பட்டிலும், 31-ந் தேதி கே.வி.குப்பம், வாணியம்பாடியிலும், 1-ந் தேதி அணைக்கட்டு, வேலூரில் பிரசாரம் செய்கிறார்.

    இவர்கள் தவிர அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்கின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை அணைக்கட்டு தொகுதியில் அன்புமணி பிரசாரம் செய்கிறார்.

    தே.மு.தி.க. பிரேமலதா 31-ந்தேதி வாணியம்பாடியில் தொடங்கி ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூரில் பிரசாரம் செய்கிறார்.

    பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் சரத்குமார், புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பிரசாரம் செய்ய வருகின்றனர். அவர்கள் வருகிற தேதி இன்னும் உறுதி செய்யப்பட வில்லை.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா எம்.பி. வருகிற 30-ந்தேதி மாலை ஆம்பூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், விடுதலை போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு 31-ந்தேதி வேலூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி மாலை வாணியம்பாடியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

    மாநில செயலாளர் முத்தரசன் வரும் 26-ந்தேதி மாலை 4 மணி முதல் மேல்பட்டி, பேரணாம்பட்டு, குடியாத்தம், லத்தேரி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரஸ் சார்பில் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் 30-ந்தேதி பிரசாரம் செய்ய வருகிறார்.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 23-ந்தேதி வேலூரில் பிரசாரம் செய்தார். அவர் மீண்டும் நாளை முதல் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்கிறார்.

    வேலூர் தேர்தல் பிரசாரத்திற்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டுள்ளதால் வேலூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    வேலூர் பாகாயத்தில் நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கணவன் அடித்து கொலை செய்தார்.

    வேலூர்:

    வேலூர் பாகாயம் சஞ்சீவிபுரத்தை சேர்ந்தவர் ஸ்டான்லிஜான் (42). தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலைபார்த்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரது மனைவி ஜெயந்தி (40).

    ஸ்டான்லி ஜானுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் இடுபட்டு வந்தார். மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் உருட்டு கட்டையால் ஜெயந்தியை தாக்கினார். விடிய, விடிய அடித்து சித்ரவதை செய்தார். நேற்று காலை படுகாயத்துடன் எழுந்த ஜெயந்தியை தலை, மார்பு பகுதியில் கட்டையால் தாக்கியுள்ளார். நிலைகுலைந்த அவர் வீட்டுக்குள்ளேயே இறந்தார்.

    இதனை கண்ட ஸ்டான்லி ஜான் தப்பி ஓடிவிட்டார் நேற்று மதியம் ஜெயந்தி இறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.

    இது பற்றி பாகாயம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ஸ்டான்லி ஜானை தேடி வருகின்றனர்.

    சிலை கடத்தலில் நாங்கள் ஈடுபட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.
    வேலூர்:

    சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், “சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

    இது தொடர்பான ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது. 

    இந்நிலையில் ஆம்பூரில் பேட்டியளித்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
    பொன் மாணிக்கவேல்
    பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எங்களுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தியை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த 2 அமைச்சர்கள் நாங்கள் என்பது முற்றிலும் பொய்யானது. செய்தியை வெளியிட்ட அந் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் 

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

     அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    ஏ.சி.சண்முகம்


    இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 -ம் தேதி என 3 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்படி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் அணைக்கட்டு வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் தொடங்கும் 27-ந்தேதி கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 
    வேலூர் தொகுதியில் பிரசாரம் நடந்துவரும் நிலையில் 10 நாள் வாடகை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வீட்டின் உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    வெளி மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்காக வந்துள்ளவர்கள் தங்குவதற்கு தனியார் திருமண மண்டபம், விடுதி, ரெசிடென்சி ஆகியவை முன்பதிவு ஆகிவிட்டது. இதனால் அரசியல் கட்சியினர் தங்குவதற்கு வீடுகளை குறிவைக்கின்றனர். 10 நாள் வாடகைக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வீட்டின் உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

    பிரசாரத்திற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் வீட்டின் உரிமையாளர் கேட்கும் பணத்தை கொடுத்து அரசியல் கட்சியினர் தங்குகின்றனர். பண்ணை வீடுகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது. அந்த வீடுகளை அரசியல் கட்சியினர் ஆர்வமாக கேட்கின்றனர். சிலர் அரசியல் பிரமுகர்களுக்கு வீடு கொடுக்க தயங்குகின்றனர். ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று வீடு கொடுக்க மறுக்கின்றனர்.

    ஆம்பூர் என்றாலே பிரியாணிக்கு பெயர் பெற்றது ஆகும். ஏற்கனவே ஆம்பூரில் பிரியாணி வியாபாரம் நன்றாக இருக்கும். தற்போது வெளியூர் நபர்கள் ஆம்பூரில் வந்து குவிந்துள்ளதால் அனைத்து பிரியாணி ஓட்டல்களிலும் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. வியாபாரம் அதிகரித்துள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் மதிய உணவுக்காக ஆம்பூர் பிரியாணியை தேடி செல்கின்றனர்.

    பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதில் காலதாமதம் ஆன நிலையில், மகளின் திருமணத்திற்காக சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
    வழக்கில் அவரே ஆஜராகி வாதாடினார். அதை தொடர்ந்து நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

    10 நாட்களுக்குள் பரிசீலித்து நளினியை பரோலில் விடவேண்டும். அரசியல்வாதிகள் இயக்கவாதிகளை சந்திக்க கூடாது பேட்டியளிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நளினிக்கு அவரது தாயார் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் வழங்கியுள்ளனர். நளினி வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்குகிறார். 2 பேர் ஜாமீன் மற்றும் வேலூரில் தங்கும் இடம் குறித்த ஆவணங்களை நளினி சமர்ப்பித்துள்ளார்.

    இதற்கிடையில், நளினி கடந்த 16-ந் தேதி பரோலில் வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வரவில்லை. இன்று பரோலில் வெளியே வருவார் என்று கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    10 நாட்களில் நளினியை பரோலில் விட வேண்டும் என கோர்ட்டு விதித்த கெடு கடந்த 22ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில்,  தற்போது நளினி வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ளார்.  
    நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் இரவில் சாலை மறியல் செய்தனர். இச்சம்பவத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள கூத்தாண்டகுப்பத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வாணியம்பாடி - பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுசாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    எங்கள் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்கமால் வருகின்றனர் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    காட்பாடியில் நண்பன் காதலியின் தோழியை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேலூர்:

    காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்த பிச்சமுத்து மகன் சந்தோஷ் (வயது 22). மாட்டு வண்டி ஓட்டி வருகிறார்.

    இவரது நண்பர் ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதலியை பார்க்க செல்லும் நண்பருடன் சந்தோசும் சென்று வந்தார்.

    அப்போது அவரது நண்பரின் காதலி 20 வயது தோழியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து சந்தோஷ் இளம்பெண்ணுடன் தனிமையில் பேசினார். அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதனால் இளம்பெண் 7 மாத கர்ப்பிணியானார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி காட்பாடி போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மா வழக்குபதிவு செய்து தலைமறைவான சந்தோசை தேடி வருகின்றனர்.

    வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யாமல் அப்போதே நடத்தியிருக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது சீமான் பேசினார்.
    வேலூர்:

    வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அவர் பேச ஆரம்பித்த போதே மிதமான மழை பெய்தது. இருந்தாலும் மழையில் நனைந்தவாரே சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தை திராவிட கட்சியினர் அரை நூற்றாண்டு ஆண்டு விட்டார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான். எனவே தான் அக்கட்சிகளை எதிர்த்து தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிடுகிறோம். புதிதாக கட்சி தொடங்கும்போது ஊழல், லஞ்சத்தை ஒழித்து மாற்றத்தை கொண்டு வருவதாக கூறுவார்கள்.

    ஆனால் லஞ்சம், ஊழலில் திளைக்கும் கட்சிகளுடன் அவர்கள் கூட்டணி வைப்பார்கள். அவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டுவர முடியும். மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல்.

    நாம் தமிழர் கட்சி மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கும். எனவே பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் பெரும்பிழையாகி விடும் என்பதால் தனியாக நிற்கிறோம். வருகிற சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சியை முன்நிறுத்திதான் இருக்கும்.

    ஆந்திர மாநிலத்தில் சட்டம் கொண்டு வந்தது போன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்க வேண்டும். உலக அளவில் நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிகம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் மாநிலம் தமிழகமாகும்.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான்

    தமிழகத்தில் நிலவிய குடிநீர் பிரச்சனைக்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்காததும், தூர்வாரி பாதுகாக்க தவறியதும்தான் காரணம். இது யாருடைய தவறு? தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் தான் காரணம். பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி கொடுத்தது யார்?

    இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி இல்லாத போது எப்படி ஒரே மாதிரியாக நீட் தேர்வு நடத்த முடியும்? நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தான் இடஒதுக்கீடு வேண்டும். முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கூடாது.

    வேலூர் தொகுதி மக்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. தமிழகத்தின் நலனை காக்க ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சீமான் பேசிமுடிக்கும் வரையில் மழை பெய்துகொண்டே இருந்தது. மழையில் நனைந்தவாறு கட்சி தொண்டர்களும் அவர் பேச்சை கேட்டனர்.

    முன்னதாக அவர் ஆம்பூர் பைபாஸ் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பா.ஜ.க.வை காட்டியே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், நடுநிலையாளர்களின் வாக்குகளை பெற்று புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறது. 400 ஆண்டுகள் கூட ஆகாத இந்தியை திணிக்கிறார்கள். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்மொழியை அழிவில் இருந்து காக்க வேண்டுமென நாங்கள் போராடுகிறோம். தமிழ் என்று பேசினாலே பாசிசம், தேசத்துரோகி, தமிழ் தீவிரவாதம் என்று கூறுகிறார்கள்.

    நாங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. நாட்டுக்காக பேசி வருகிறோம். மக்களை நம்புகிறோம். தனித்து போட்டியிடுகிறோம். மக்களை நம்பாததால்தான் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    வேலூர் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் வீட்டில் பணம் பிடிபட்ட காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அவரே வேட்பாளராக உள்ளார்.

    இதற்கு அப்போதே தேர்தலை நடத்தியிருக்கலாம். தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் மக்கள் ஒருநாள் எங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும். அதுவரை தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×