என் மலர்
வேலூர்
வாட்ஸ் அப்பில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி வைத்துகொண்டு ஒருவர் பேசும் காட்சி வெளியானது.
அவர் சுட்ருவேன் பார்த்துக்கோ... சுட்டு தள்ளிருவேன் அடடேய் சுட்டிடுவேன்... என் துப்பாக்கிதான் பேசும் சதக்... சதக்... பார்த்துக்கோ அவ்ளோதான் பார்க்கிறியா. பொம்மை துப்பாக்கினு நினைச்சியா பார்த்துக்கோ செத்திடுவ... என அவர் கூறுவதுபோல முடிகிறது.
மேலும் மலர்கொடி என்ற பெண் தான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். நாமக்கல்லை சேர்ந்த நான் வேலூரை சேர்ந்த கபாலியுடன் 2 வருடம் குடும்பம் நடத்தினேன். அவர் என்னை கொடுமைப்படுத்தினார்.
தற்போது துப்பாக்கி காட்டி மிரட்டுகிறார். என்னை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசும் காட்சி வெளியானது.
துப்பாக்கி காட்டி மிரட்டும் ரவுடியை கைது செய்யும் வரை ஷேர் செய்யுங்கள் என பரப்பிக் கொண்டே இருந்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி வேலூர் மாவட்ட போலீசார் துப்புதுலக்கினர். இதில் மிரட்டல் விடுத்த நபர் வேலூர் பிஷப்டேவிட் நகரை சேர்ந்த கபாலி (வயது 45) என்பது தெரியவந்தது.
இவர் பி.எஸ்.என்.எல்.லில் பணியாற்றி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவரது முகவரியை அறிந்த தெற்கு போலீசார் கபாலியை தேடி சென்றனர். அவர் போலீசாரை பார்த்ததும் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தற்போது போலீஸ் நிலையத்தில் இருந்து கபாலி பேசுவதுபோல மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் முதலில் என்னை மன்னித்து விடுங்கள் என் பெயர் கபாலி வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். எனது மனைவி மலர்கொடி சிங்கப்பூரில் வேலை செய்கிறார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக 4 வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டேன். அவர் வரமறுத்ததால் போலியான பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டினேன். வேறு எந்த நோக்கமும் இல்லை.
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்திவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு பின்னால் அரசியல்வாதியோ எந்த ரவுடியும் இல்லை நான் சாதாரணமான மனிதன் வீடியோவை பார்த்து போலீசார் என்னை கைது செய்து தண்டனை கொடுத்துவிட்டார்கள்.
வீடியோ வெளியிட்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என அதில் பேசுகிறார்.
கபாலியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த பொம்மை துப்பாக்கி, 2 கத்தி, 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து ஆம்பூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்நோக்கத்துடன் தேர்தல் நிறுத்தப்பட்டது.
வேலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயம், குடிநீர் ஆதாரமான பாலாற்றில் கர்நாடக, ஆந்திர அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை கிடைக்காமல் செய்துள்ளன. தமிழகத்தின் எல்லை பகுதியில் சுமார் 222 கிலோ மீட்டர் ஓடும் பாலாற்றில் தமிழக அரசு தடுப்பணை கட்ட வேண்டுமென அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளன. அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை உயர்த்தி கட்டி வரும் பிரச்சினையை தடுக்க முடியாதவர்கள் ஆட்சியில் இருந்து என்ன பயன். எல்லா பிரச்சினைகளிலும் இரட்டை நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது. இரட்டை தலைமை கொண்ட கட்சியாக இருக்கலாம். அது அவர்கள் விருப்பம்.
முத்தலாக் பிரச்சினையில் தேனி தொகுதி எம்.பி. மக்களவையில் ஆதரித்து பேசுகிறார். மாநிலங்களவையில் நவநீதருஷ்ணன் எதிர்த்து பேசுகிறார். புதிய கல்விக் கொள்கை, ஹைட்ரோகார்பன் திட்டம், 10 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றில் இரட்டை நிலைப்பாட்டை அ.தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள், நலன்கள் மத்திய அரசால் பறிக்கப்படுகிறது. எனவே நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதை போல வேலூர் தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் 3-வது நாளாக அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஊசூரில் பேசினார்.
வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள 37 எம்.பி.க்களும் அங்கு தமிழக பிரச்சனைகள் குறித்து நாள்தோறும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத அ.தி.மு.க.வினர் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று விட்டதாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியில் மட்டும் மொத்தம் ரூ.28,179 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1.627 கோடி, குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கிய ரூ.2,064 கோடி, சாலை, பாலங்களுக்காக ஒதுக்கிய ரூ.2,034 கோடி, ஏற்காட்டில் மேம்பாலம் கட்ட ஒதுக்கிய ரூ.138.95 கோடி, நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒதுக்கிய ரூ.1,779,49 கோடி நிதியும் அடங்கும்.
எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று கூறிவருகிறார். 8 வழிச்சாலை திட்டத்தால் வாழ்வாதாரமே பறிபோகும் என விவசாயிகள் போராட்டங்கள் நடத்திய நிலையில் ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்த பிறகும். அந்த தடைக்கு தடையாணை பெற இந்த அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.

மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் டெல்டா பகுதி விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியை ஒரு விவசாயியாக கருத முடியாது.
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்போது காவிரி கூட்டு குடிநீர் விரிவுப்படுத்தப்பட்டு, விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கவும், விளைபொருட்களுக்கான குடிநீர் பதனக் கிடங்கு, அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மதுவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காட்பாடி சட்டக் கல்லூரிக்கு வந்தார். அங்கிருந்த மாணவ, மாணவியிடம் மதுவுக்கு எதிராக கையெழுத்து வாங்கினார். பொதுமக்களிடமும் வாங்கினார்.
இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள வேலூருக்கு வந்தார். அங்கு பொதுமக்களை சந்தித்து மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறி அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்.
மக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருள் விற்பது இந்திய தண்டனை சட்டம் 328-ன் படி குற்றம். இச்சட்டபடி போதை தருகிற, உடல் நலத்தை கெடுக்கிற எந்த பொருளையும் யாருக்கும் கொடுக்க கூடாது. இந்த குற்றத்திற்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை தரப்படவேண்டும். ஆனால் மது நாட்டுக்கு, உயிருக்கு கேடு என்று எழுதி வைத்துவிட்டு டாஸ்மாக் மூலம் உடல் நலத்தை கெடுக்க கூடிய பொதை பொருளை விற்பனை செய்து வருகின்றனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் விபத்துகளால் மரணம் ஏற்படும் என்று ஹெல்மெட்டை கட்டாய படுத்தும் கோர்ட்டு லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடாதது ஏன்?
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போதை பொருளை வாங்கி குடிப்பதால் எண்ணற்ற நோய்கள், விபத்துக்கள், கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு பாதிப்புகள், கலாசார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. பள்ளி மாணவர்கள் கூட மது போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். எனவே டாஸ்மாக் கடைகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் நடத்துவது அரசின் கொள்கை முடிவு என்று சொல்லி டாஸ்மாக்கை மூட உத்தரவிடாமல் போதை பொருள் விற்பதை அனுமதிப்பது சட்டவிரோதம். அரசின் கொள்கை முடிவை விட சட்டமும், மக்களின் உயிரும் பெரிது.
எனவே இந்திய தண்டனைச் சட்டம்-328க்கு எதிராக செயல்பட்டுவரும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும், மதுபான பார்களையும் மது உற்பத்தி ஆலைகளையும் மூட ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்களிடம் கையெழுத்து வாங்கி ஐகோர்ட்டில் ஒப்படைக்க உள்ளோம்.
வேலூர் தொகுதியில் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடம் மதுவை ஒழிப்போம் என்று கூறினீர்களே ஏன் மதுகடைகளை மூடவில்லை என்று கேள்வி கேளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினியின் கோரிக்கையை ஏற்று அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக சென்னை ஐகோர்ட் அவருக்கு 30 நாள் பரோல் வழங்கியது.
கடந்த 25-ந் தேதி பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை நிர்வாகி வீட்டில் தங்கியுள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி தினமும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டு வருகிறார்.
அதன்படி, 5-ம் நாளான இன்று காலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டார்.
இந்நிலையில், கடந்த 27-ந் தேதி இரவு சென்னையில் இருந்து வந்திருந்த அவரது தம்பி பாக்கியநாதனிடம் மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து நளினி தீவிரமாக ஆலோசித்துள்ளார்.
கோர்ட் உத்தரவுப்படி வேலூர் சிறையில் நளினி முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர். அதன்படி, வரும் 3-ந் தேதி வேலூர் சிறையில் முருகனை சந்திக்கிறார்.
அப்போது மகள் ஹரித்ராவின் திருமணம் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஒரு மக்கள் இயக்கமாக, தொண்டர்களின் இயக்கமாக பரிணமித்து இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அவருக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மாவும் இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாகவே நடத்தி வந்தார். மக்களுக்காகவே நான், மக்களால் நான் என்ற தாரக மந்திரத்தோடு அம்மா ஆட்சியை தொடர்ந்தார். அதனால் தான் மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்தி அவர் பல சமூக நல திட்டங்களை நிறைவேற்றினார்.
ஒருமனிதனுக்கு தேவையானது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை. இது மூன்றும் மிகவும் அவசியமாகும். இந்த மூன்று அத்தியாவசிய தேவைகளையும் உணர்ந்து அம்மா தங்கு தடையற்ற உணவு பாதுகாப்பு வேண்டும் என்று 20 கிலோ அரிசியை விலையில்லாமல் வழங்கினார். உடுக்க ஆடை வேண்டும் என்பதற்காக இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.
யாரும் வீடு இல்லாமல் வாழக்கூடாது என்பதற்காகத் தான் கடந்த 2011-ம் ஆண்டு தொலைநோக்கு திட்டம் 2023-ஐ அம்மா அறிவித்தார். அதன் படி தமிழகத்தில் குடிசைகளே இல்லாத கிராமமோ, நகரமோ இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு அதற்காக பணிகளை மேற்கொண்டார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்த நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அம்மாவின் வழியில் அவர் அமல்படுத்திய சமூக நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.
நாம் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலமும் அமல்படுத்தாத பல்வேறு திட்டங்களை நமது அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. கிராம பொருளாதாரம் வளர வேண்டும் என்பதற்காக கறவை மாடுகள், ஆடுகள், விலையில்லா கோழிகள் ஆகியவற்றை அம்மா கொண்டு வந்து செயல்படுத்தினார். அத்திட்டங்களை இப்போதைய கழக அரசும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் 2-வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தொழில் முனைவோரை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு.
கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் அம்மா அரசின் புரட்சிகர திட்டங்கள் தான். தமிழகத்தில் கிராமப்புறங்களில் வறட்சி நிலவுகின்ற இந்த நேரத்தில் கிராம மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது 100 நாள் வேலை திட்டத்தை இந்த அரசு ரத்து செய்யப்போவதாக ஒரு பொய்யை திரும்ப திரும்ப ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி பொய் சொல்லி எத்தனை நாளைக்குத்தான் அவரால் மக்களை ஏமாற்ற முடியும்.
கடந்த தேர்தலில் பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது தி.மு.க.. ஆனால் இப்பொழுது மக்கள் அதை உணர தொடங்கி விட்டார்கள். நாம் எதை செய்ய முடியுமோ அதை சொல்வோம். அதை செய்வோம். அது மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் மக்களுக்காக நாம் அமல்படுத்துவோம்.
100 நாள் வேலை திட்டம் கிராம பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டம். அத்திட்டம் ஒருபோதும் ரத்து செய்யப்படமாட்டாது. மக்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம். வேலூர் மக்களவை தொகுதி கழக ஆதரவு பெற்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சிறந்த பண்பாளர். அவர் வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இப்பொழுது செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்ல, மேலும் பல புதிய திட்டங்களை நாம் பெற முடியும். எனவே அவரை அமோகமாக வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக உள்ளது. கம்யூனிஸ்டு லீலாவதியை கொலை செய்தது யார்?. ஸ்டாலின் மதுரை சென்றபோது அவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவமும் நடந்தது.
இதை எல்லாம் மு.க.ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு கேலிகூத்தாக இருந்தது. சட்டம்-ஒழுங்கு பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர்:
வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாணியம்பாடி டவுன், வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு, மிட்டூர், குருசிலாப்பட்டு, பூங்குளம், ஆலங்காயம், போன்ற பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடல் அலையே திரண்டு வந்திருப்பதுபோல் நீங்கள் அனைவரும் வந்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்க்கின்ற பொழுது நிச்சயமாக உறுதியாக நம்முடைய அணியின் சார்பில் 39வது எம்.பி.யாக நம் வேட்பாளர் கதிர் ஆனந்த் பாராளுமன்றத்திற்கு போகப் போகின்றார் என்பது உறுதி. எந்த மாற்றமும் கிடையாது.
நியாயமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலிலேயே கதிர் ஆனந்த் அவர்கள் வெற்றி பெற்று அவர் பாராளுமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டு சதி செய்து சூழ்ச்சி வலையைப் பின்னி தி.மு.க.வின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ரெய்டு என்கின்ற ஒரு நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கழகத்தின் பொருளாளராக இருக்கக்கூடிய அண்ணன் துரை முருகன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொன்னோம் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீங்கள் அடமானம் வைத்திருக்கக்கூடிய அத்தனை நகைகளையும் வட்டியில்லாமல் மீண்டும் உங்களிடத்தில் ஒப்படைக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவோம் என்று உறுதி அளித்திருந்தோம்.
ஆனால், ஆட்சிக்கு வர முடியவில்லை. தற்பொழுது அ.தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்கள் என்றால் நடக்காத உறுதி மொழிகளை எல்லாம் தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள் மிட்டாய் கொடுத்து வாக்கு வாங்கி விட்டார்கள் என்று, ஒரு தவறான பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நான் கேட்கின்றேன் மக்களை ஏமாற்றியதால் 38 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நீங்கள் வென்ற ஒரே ஒரு இடத்தில் மிட்டாய் கொடுத்தீர்களா அல்லது அல்வா கொடுத்து அங்கிருக்கும் மக்களை ஏமாற்றினீர்களா? இதுதான் நான் கேட்கக்கூடிய கேள்வி. எனவே, இவற்றையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு கொச்சைப்படுத்தி பேசக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள் இவற்றிற்கெல்லாம் நீங்கள் சரியான பதில் தர வேண்டும்.
அவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க ஆட்சியை அழிக்க முடியாது என்கிறார். நான் கனவு காண வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. விரைவில் அது நினைவாக நடக்கப் போகிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள்.
மோடியின் தயவில் பி.ஜே.பி ஆட்சியின் ஒத்துழைப்போடு, இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதே தவிர வேறொன்றும் அல்ல அது தான் உண்மையும் கூட. எனவே இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்கும் நிலைத்து நீடித்து வைத்துக் கொள்ளவும், அவர்கள் மக்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த ஆட்சி நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அங்கு இருக்கக்கூடிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமல்லாமல், அமைச்சர்களுக்கும் மாதா மாதம் படி அளந்து கொண்டிருக்கின்றார்கள்.
அ.தி.மு.க ஆட்சி சிறந்த ஆட்சி என்று பெயரெடுத்ததாம். அதாவது, ஐ.எஸ்.ஐ முத்திரை அவர்களுக்கு குத்தி விட்டார்களாம். எதில் ஐ.எஸ்.ஐ முத்திரை? ஊழலிலா, நீங்கள் அடிக்கின்ற கொள்ளையிலா, நீங்கள் வாங்கிய கமசனிலா. நான் கேட்கின்றேன் கொட நாட்டு விவகாரம் ஒன்று போதாதா அதைப்பற்றி பேசக்கூடாது என்று நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கினீர்களே?
நான் கேட்கின்றேன், உங்கள் மீது ஊழல் இருக்கின்றது என்று சொல்லி சென்னை உயர்நீதி மன்றம் விசாரித்துவிட்டு சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதா, இல்லையா. தான் எந்தத் தவறும் செய்யவில்லை உத்தமபுத்திரன் என்று நினைத்திருந்தால், விசாரணையை சந்திக்கக்கூடிய ஆற்றல், தெம்பு, திராணி முதலமைச்சருக்கு இருந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று ஸ்டே வாங்கி இருக்கின்றீர்களே என்ன காரணம். எனவே அச்சம் இருக்கிறதல்லவா இது ஒன்றே போதும்.
அதுமட்டுமல்ல, தற்போது சாமி சிலை கடத்தலில் 2 அமைச்சர்கள் மீது பொன்மாணிக்கவேல் அபிடவிட் தாக்கல் செய்திருக்கின்றார். இதைவிட மானக்கேடு வேறென்ன இருக்கமுடியும்.
எனவே இந்த நிலையில் தான் இந்த ஆட்சி போய்க்கொண்டிருக்கின்றது இந்த ஆட்சிக்கு துணை நிற்கக் கூடிய வகையில் தான் மத்திய ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறு அவர் பேசினார்.


வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து லத்தேரி, கே.வி.குப்பம், குடியாத்தம் சித்தூர் கேட், கொண்டசமுத்திரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
கதிர்ஆனந்த் உங்கள் ஊரில் இருப்பவர். நேரில் சென்று அவரிடம் எந்த ஒரு குறையையும் கூறலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த தேர்தல் நடத்திருந்தால் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி., ஆகியிருப்பார். சிலர் செய்த சதியால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தி.மு.க.வை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் கனிமொழி போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
அந்த சதி முறியடிக்கப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றோம். வெற்றி பெற்ற அனைத்து தொகுதியிலும் 3 லட்சத்தில் இருந்து 5½ லட்சம் வரை ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அந்த தேர்தலில் 24 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றோம். வேலூரில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றால் இதோடு சேர்த்து 25 தொகுதிகள் ஆகும்.
பாராளுமன்றத்தில் தி.மு.க. 3-வது இடத்தில் உள்ளது. 22 சட்டசபை இடைத்தேர்தலில் குடியாத்தம், ஆம்பூர் உட்பட 13 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 9 இடங்களைத் தான் பெற்றது. இப்போது தி.மு.க. வெற்றி பெற்ற 13 இடங்கள் ஏற்கனவே அ.தி.மு.க. வசம் இருந்ததில் 12 இடங்கள் ஆகும்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பொய்யான வெற்றி பெற்றதாக அ.தி.மு.க.வினர் சொல்கின்றனர்.
பொய் என்று சொன்னாலும் பரவாயில்லை. வாக்காளர்களுக்கு 'மிட்டாய்' கொடுத்து தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றதாக அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். மிட்டாய் என்றால் என்ன கமரகட்டா? பல்லி மிட்டாயா?
சரி அப்படியே நாங்க மிட்டாய் கொடுத்து ஜெயிச்சதாக வைத்துக் கொண்டாலும், தேனி தொகுதியில் நீங்கள் ஜெயிச்சீங்களே, அங்க நீங்க என்ன கொடுத்தீங்க? அல்வா. அதுவும் திருநெல்வேலி அல்வா இல்லை. டில்லி அல்வா கொடுத்து ஜெயிச்சீங்களா?.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்றும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும். தற்போதும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று கூற முடியாது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போன்று தமிழகத்திலும் ஏற்படலாம். மோடி நினைத்தால் அது நடக்கும்.
இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் அதனால் மோடி நினைக்கவில்லை.
கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராமல் மக்களின் ஆதரவை பெற்று வாக்குகள் வாங்கி ஆட்சிக்கு வரவேண்டும் என்று கருணாநிதி கூறுவார். அதன்படி மக்களின் ஆதரவை பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வரும். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார் என அ.தி.மு.க.வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். கனவு காண வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் ஆட்சி கவிழ்ப்பு நினைவாக போகிறது.
இந்தியா முழுவதிலும் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக ஓட்டுகளை பெற்று ஓட்டு சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. டில்லிக்கு 38 எம்.பி.க்களும் கில்லி மாதிரி சென்றுள்ளனர். தமிழகத்துக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை அவர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருக்கும் வரை மத்திய அரசால் நீட் தேர்வு கொண்டுவர முடியவில்லை.
ஜெயலலிதா சர்வாதிகாரியாக இருந்தாலும் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. மோடியா, லேடியா என பார்ப்போம் என கூறினார். இதற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்.
ஆனால் அவரது பெயர் சொல்லி தற்போது நடக்கும் ஆட்சியை டில்லியில் அடகு வைத்துவிட்டனர்.
துரைமுருகன் யார் என நான் சொல்லி உங்களுக்கு தெரியப்போவதில்லை. அவரது மகனான கதிர் ஆனந்தும் இத்தொகுதியின் குறைகளை பாராளுமன்றத்தில் எடுத்துக் கூற அவருக்கு ஓட்டு அளியுங்கள்.
கருணாநிதி பதவிப் பிரமாணம் செய்த விழா மேடையிலேயே தேர்தலில் அளித்த வாக்குறுதியாக ரூ.7ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். அவருடைய மகன் நான்.
நானும் சொன்னதை செய்யமாட்டேனா. தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. தயவில் நடந்து வருகிறது. இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு விரைவில் அமித்ஷா அ.தி.மு.க. என பெயர் மாறும் போல உள்ளது. விரைவில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். அப்போது முதலாவதாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். தொடர்ந்து விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.க.ஸ்டாலின் இன்று வாணியம்பாடி சட்டமன்ற தொகுக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
வாணியம்பாடி:
வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி, ஆம்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்தியாவில் 543 பாராளுமன்ற தொகுதியில் 542 தொகுதிக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஆனால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. இந்த தேர்தல் நிறுத்தப்பட யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நகைக்கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் என நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை பொய் மூட்டைகளாக அவிழ்த்து விட்டு வெற்றி பெற்றார்கள்.
குழந்தைகளுக்கு கவர்ச்சிகரமான கவரில் சுற்றி மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் மக்களை ஏமாற்றி ஸ்டாலின் வெற்றி பெற்று விட்டார்.
இது உண்மையான வெற்றி அல்ல. தற்போது நடைபெற உள்ள வேலூர் தேர்தலில் என்ன பொய்களை சொல்லி ஸ்டாலின் ஓட்டு கேட்பார் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு பொய் பிரசாரம் எடுபடாது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எந்த தேர்தலிலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் இயக்கம்.

நாங்கள் உண்மையை மட்டும் கூறி ஓட்டுகளை பெறுவோம். ஆனால் எதிர் அணியினர் திட்டமிட்டு பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டுகள் பெறுகின்றனர்.
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் தமிழகத்தை ஆள்வதற்கு அ.தி.மு.க. தான் சிறந்த கட்சி என தெரிந்து எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். ஆகவே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி என்ற கனவு என்றுமே நிறைவேறாது.
கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தில் பொருளாதாரம் மேம்பாடு அடையும். அங்கு அமைதி நிலவும். எனவே தமிழகத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா பல்லாயிரக்கணக்கான கோடிகளை மாணவர்களின் கல்விக்கு ஒதுக்கீடு செய்தார்.
இந்தியாவில் இதுவரை எந்த மாநில அரசும் வழங்காத திட்டமான இலவச லேப்-டாப் திட்டத்தில் 43.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கியுள்ளோம்.
வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட இப்படிபட்ட திட்டம் செயல்படுத்தப்பட வில்லை. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும்.
தி.மு.க. ஆட்சியின் போது 100-க்கு 32 பேர் உயர்கல்வி படித்தார்கள். தற்போது இந்தியாவிலேயே அதிகபட்சமாக 100-க்கு 48.6 மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் முழுவதும் வாணியம்பாடி உள்பட 11 நகராட்சி, 5 பேரூராட்சி மற்றும் 944 ஊரக ஊராட்சியில் ஆயிரத்து 300 கோடி ரூபாயில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுகாதார துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கி வருகிறோம்.
வேலூர் தொகுதி தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர் குடும்பத்தினருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
எத்தனை அவதாரம் எடுத்தாலும் மு.க.ஸ்டாலினால் ஆட்சி அமைக்க முடியாது. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றாலும் மக்கள் தி.மு.க.வை தொங்கலில் விட்டுள்ளனர். மத்தியிலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்துவிட முடியாது. பல பொய்களை சொல்லி ஓட்டு பெற்றனர். பொய் சொல்வதற்காகவே அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.
ஸ்டாலின் மீண்டும் ஓட்டு கேட்க வருவார். டீ கடைக்கு சென்று டீ குடிப்பார். மார்க்கெட்டுக்கு செல்வார். பொய் சொல்லி ஓட்டு கேட்பார். மக்களே உஷாராக இருங்கள். ஏமாறாதீர்கள்.
ஐ.எஸ்.ஐ. தரம் பெற்ற கட்சி அ.திமு.க. முத்திரையில்லாத கட்சி தி.மு.க., அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். ஆனால் தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்ப வாரிசுகள் தான் பொறுப்புக்கு வருவார்கள். மக்களுக்கான கட்சி அ.தி.மு.க., தி.முக. கார்ப்பரேட் கம்பெனி. ஆகவே அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று குடியாத்தம், கே.வி.குப்பத்தில் பிரசாரம் செய்கிறார்.






