search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பேசிய காட்சி.
    X
    வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பேசிய காட்சி.

    100 நாள் வேலை திட்டம் தொடரும்- ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

    கிராம பொருளாதாரத்தை வளர்க்கும் 100 நாள் வேலை திட்டம் ஒருபோதும் ரத்து செய்யப்படமாட்டாது என்று வேலூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஒரு மக்கள் இயக்கமாக, தொண்டர்களின் இயக்கமாக பரிணமித்து இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அவருக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மாவும் இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாகவே நடத்தி வந்தார். மக்களுக்காகவே நான், மக்களால் நான் என்ற தாரக மந்திரத்தோடு அம்மா ஆட்சியை தொடர்ந்தார். அதனால் தான் மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்தி அவர் பல சமூக நல திட்டங்களை நிறைவேற்றினார்.

    ஒருமனிதனுக்கு தேவையானது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை. இது மூன்றும் மிகவும் அவசியமாகும். இந்த மூன்று அத்தியாவசிய தேவைகளையும் உணர்ந்து அம்மா தங்கு தடையற்ற உணவு பாதுகாப்பு வேண்டும் என்று 20 கிலோ அரிசியை விலையில்லாமல் வழங்கினார். உடுக்க ஆடை வேண்டும் என்பதற்காக இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.

    யாரும் வீடு இல்லாமல் வாழக்கூடாது என்பதற்காகத் தான் கடந்த 2011-ம் ஆண்டு தொலைநோக்கு திட்டம் 2023-ஐ அம்மா அறிவித்தார். அதன் படி தமிழகத்தில் குடிசைகளே இல்லாத கிராமமோ, நகரமோ இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு அதற்காக பணிகளை மேற்கொண்டார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்த நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அம்மாவின் வழியில் அவர் அமல்படுத்திய சமூக நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.

    நாம் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலமும் அமல்படுத்தாத பல்வேறு திட்டங்களை நமது அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. கிராம பொருளாதாரம் வளர வேண்டும் என்பதற்காக கறவை மாடுகள், ஆடுகள், விலையில்லா கோழிகள் ஆகியவற்றை அம்மா கொண்டு வந்து செயல்படுத்தினார். அத்திட்டங்களை இப்போதைய கழக அரசும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

    தொழில் வளர்ச்சியில் தமிழகம் மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் 2-வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தொழில் முனைவோரை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு.

    கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் அம்மா அரசின் புரட்சிகர திட்டங்கள் தான். தமிழகத்தில் கிராமப்புறங்களில் வறட்சி நிலவுகின்ற இந்த நேரத்தில் கிராம மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது 100 நாள் வேலை திட்டத்தை இந்த அரசு ரத்து செய்யப்போவதாக ஒரு பொய்யை திரும்ப திரும்ப ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி பொய் சொல்லி எத்தனை நாளைக்குத்தான் அவரால் மக்களை ஏமாற்ற முடியும்.

    கடந்த தேர்தலில் பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது தி.மு.க.. ஆனால் இப்பொழுது மக்கள் அதை உணர தொடங்கி விட்டார்கள். நாம் எதை செய்ய முடியுமோ அதை சொல்வோம். அதை செய்வோம். அது மட்டுமல்ல சொல்லாத திட்டங்களையும் மக்களுக்காக நாம் அமல்படுத்துவோம்.

    100 நாள் வேலை திட்டம் கிராம பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டம். அத்திட்டம் ஒருபோதும் ரத்து செய்யப்படமாட்டாது. மக்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம். வேலூர் மக்களவை தொகுதி கழக ஆதரவு பெற்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சிறந்த பண்பாளர். அவர் வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இப்பொழுது செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்ல, மேலும் பல புதிய திட்டங்களை நாம் பெற முடியும். எனவே அவரை அமோகமாக வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    Next Story
    ×