என் மலர்
வேலூர்

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.
2-வது கட்டமாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆலங்காயம், ஆம்பூரில் பிரசாரம் செய்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது கட்டமாக மீண்டும் வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பஸ்நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் மண்டி தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசுகிறார்.
2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி ஓட்டு கேட்கிறார்.
எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி செல்லும் வழி நெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். 29-ந்தேதி இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
மு.க.ஸ்டாலின் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 2-வது கட்ட பிரசாரத்திற்காக நேற்று இரவு ஆம்பூர் வந்தார்.
ஆம்பூர் மோட்டுக்கொல்லையில் உள்ள ஓய்வு விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். மோட்டுக் கொல்லையில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்கள் மோட்டுக்கொல்லைக்கு வரவழைக்கப்பட்டனர். அங்குள்ள விடுதி வளாகத்தில் தொழிலாளர்கள் சபா நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்டாலின் கலந்துகொண்டு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தரக்கோரி வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து விண்ணமங்கலம், கிரிசமுத்திரம், செங்கிலி குப்பம் கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
இன்று மாலை வீராங்குப்பம், வடச்சேரி, மதனாஞ்சேரி, செங்கிலி குப்பம் ஆம்பூர் டவுனில் பிரசாரம் செய்கிறார்.
நாளை குடியாத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்திசவுக், குடியாத்தம், புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
வேலூர்:
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஆளும் அ.தி.மு.க. அரசு ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்ற நெருக்கடியில் இருக்கிறது. மேலும் மோடியால் ஆட்டுவிக்கும் எடுபிடி அரசாக, கையாலாகாத அரசாக உள்ளது. இந்த அரசால் தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற முடியவில்லை. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.
பா.ஜ.க. அரசு ஆர்.எஸ்.எஸ்.சின் கருவியாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்றாக கலந்து பழகுகிறார்கள். இந்த நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. பா.ஜ.க. மதவெறியை தூண்டிவிட்டு பிரிக்க முயற்சிக்கிறது.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. இணைந்து இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் அரசியல் சட்டம் மதிக்கப்படவில்லை. தலித் மக்கள் மீது அடக்குமுறை, கும்பல் கொலை நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகம் பறிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறது. அதற்கு அ.தி.மு.க. துணை போகிறது. எனவே அ.தி.மு.க.வுக்கு தோல்வியை கொடுத்து பாடம் புகட்ட வேண்டும்.

வேலூரில் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கும் தோல்வி மோடிக்கு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும். ஆந்திரா, கேரளா போன்ற பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க. இறங்கி உள்ளது.
வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை வைத்து பல கட்சிகளை நிர்ப்பந்தித்து, அந்த கட்சி உறுப்பினர்களை கட்சிமாற செய்கிறது. இதற்கு பா.ஜ.க.வுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கும் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு 5-ந்தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்திருந்தனர்.
இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறார்.
நாளை மாலை 5 மணிக்கு (2-ந் தேதி) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் வாக்கு கேட்டு பேசுகிறார்.
2 பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழிகளில் கூடி நிற்கும் பொது மக்களை பார்த்தும் எடப்பாடி பழனிசாமி வாக்கு கேட்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூரில் முகாமிட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்காக 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதால் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் 2-வது கட்ட பிரசாரத்துக்கு செல்வதற்கு பிரசார வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஆம்பூர், வாணியம்பாடி, வேலூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தான். ரத்து செய்யப்பட்ட தேர்தல் மீண்டும் நடைபெற உள்ளது.
ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் ஆம்பூர் தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க செய்வார். காவிரி பாலாறு நதிநீரை இணைப்பார். தொகுதிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார். நாயக்கனேரி, காமனூர் மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். ஆம்பூர் பெத்லகேம் ரெயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுப்பார்.
கன்னடிகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தையும் அமைக்க நடவடிக்கை எடுப்பார். ஆம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்படும்.
இத்தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களுக்கு தேவையான உதவிகளை வேட்பாளர் ஏ.சி. சண்முகம் செய்வார்.
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தரும் கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இஸ்லாமியர்களின் உற்ற தோழன், பாதுகாவலர்கள் என்றால் அது விஜயகாந்த் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான்.
தே.மு.தி.க.வில் தான் 4 இஸ்லாமியர்களுக்கு மாவட்டச் செயலாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக பள்ளி வாசல்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கினார் என்பதை யாரும் மறந்துவிடவில்லை.
சினிமாவில் நடித்தாலும், மக்கள் முன்னிலையில் நடிக்க தெரியாதவர்கள் விஜயகாந்தும், ஜெயலலிதாவும்.
பா.ஜ.க.வை பிடிக்காது என்று கூறிவிட்டு, பா.ஜ.க. மத்திய அமைச்சர்களுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு காரியம் சாதித்துக் கொள்ள துடித்து கொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சர்களை போய் சந்திப்பவர்கள் தி.மு.க.வினர் தான். அ.தி.மு.க.வினர் செல்வதில்லை. வேலூர் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டுமானால், ஏ.சி. சண்முகத்துக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி பிரசாரம் செய்தார். 29-ந்தேதி வரை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் அதன்பிறகு சென்னை திரும்பினார்.
2-வது கட்ட பிரசாரத்துக்காக இன்று மாலை அங்கு செல்கிறார். ஆம்பூரில் உள்ள மிட்டாளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்கி வீராங்குப்பம், வடசேரி, மதனாஞ்சேரி, செங்கிலிகுப்பம், ஆம்பூர் நகரம் வரை பிரசாரம் செய்கிறார்.
நாளை (2-ந்தேதி) மாலை குடியாத்தம் பகுதியில் உள்ள உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்திசவுக், குடியாத்தம் புதிய பஸ் நிலையம், பள்ளி கொண்டா ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
3-ந்தேதி மாலை வேலூர் மண்டித் தெருவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்கிறார். துரைமுருகன், ஜெகத்ரட்சகன், காந்தி எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வி, முகமது சகி உள்பட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார்.
2-வது நாளான நேற்றிரவு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
ஈ.வெ.ரா, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் ஒருங்கிணைந்த குணம் கொண்டவர் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினர் வகுத்த சதித்திட்டங்களை முறியடித்தவர் ஜெயலலிதா.
அவர் வழியில் தொண்டர்களாக இருந்து இந்த ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். தி.மு.க. கட்சியில் தொண்டர் யாராவது கட்சியின் தலைவர், முதல் அமைச்சர் ஆக முடியுமா?
இந்நிலையில் மத்தியில் ஆட்சி கவிழ்ந்துவிடும். மாநிலத்தில் ஆட்சி முடிந்துவிடும். நாம் முதல் அமைச்சராகி விடுவோம் என்று பகல் கனவு கண்டு வந்தார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
பொய்யாக சொல்லி மக்களை ஏமாற்றி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அந்த வெற்றி தற்காலிகமானது, நிரந்தரமில்லை. மற்றவர்களை பற்றி குறைசொல்வதற்கு முன்பு, ஸ்டாலின் உங்கள் முதுகை திரும்பி பாருங்கள், எவ்வளவு அழுக்கு உள்ளது என்று, எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல் அமைச்சராக முடியாது என்பது மக்கள் தீர்ப்பாக உள்ளது.
அதேநேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் உங்களுக்கு நன்கு தெரிந்தவர். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வீரமணி, கருப்பண்ணன், நடராஜன் மற்றும் சட்டமன்ற துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் விஜய், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் பழனி உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பேரணாம்பட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
28 ஆண்டுகள் ஒரு இயக்கம் தமிழகத்தை ஆண்டது என்றால் அது அ.தி.மு.க.தான். இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றியை கொடுத்து தமிழகத்தை ஆள தகுதியான கட்சி அ.தி.மு.க.தான் என நிரூபித்து வருகின்றனர். தமிழக மக்கள். சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது இந்த இயக்கம்.
ரூ.28 ஆயிரம் கோடி நிதி உபயோகப்படுத்தாமல் திரும்பி சென்றதாக ஸ்டாலின் தமிழக அரசு மீது குறைகூறி வருகிறார். 2010ல் இவரது அப்பா தமிழக முதல் அமைச்சராக இருந்தபோது இதேபோல், ரூ.8 ஆயிரத்து 718 கோடி திரும்ப சென்றது.
இந்த பணம் முடிக்கப்படாமல் செய்து கொண்டுள்ள பணிகளுக்கான பணம் மீண்டும் திரும்பி வந்துவிடும். இதை தெரிந்து இருந்தும் ஸ்டாலின் குழப்புகிறார்.
5 ஆண்டுகள் மின் பிரச்சனையை தீர்க்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தவர்கள் இவர்கள். ஜெயலலிதா பதவியேற்று 2 ஆண்டில் பிரச்சனையை தீர்த்து வெளி மாநிலங்களுக்கு மீதி மின்சாரத்தை கொடுத்தார். காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
தி.மு.க.வின் ஆட்சி எப்போதுமே அராஜக ஆட்சி தான் என மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. எனவே தமிழகத்தை ஒருபோதும் தி.மு.க. ஆள முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ள வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 3-ந் தேதி காலை 10 மணி முதல் 5-ந் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஆகஸ்டு 9-ந் தேதியும் மதுபானக் கடைகள் மூடப்படும். மேலும் மதுபானக் கடைகளையொட்டி அமைந்துள்ள பார்களும் மூடப்படுகிறது. மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 4 நாட்களும் மது விற்பனை செய்வது மற்றும் மதுபானங்கள் பரிமாற்றம் செய்வது தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
ரத்துசெய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது. 100 சதவீத வாக்குப் பதிவு நடக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
வேலூர் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் ஆகஸ்டு 5-ந் தேதி வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வேலூர் தொகுதியில் வசித்து அதே தொகுதியில் பணிபுரிந்து வருபவர்களுக்கு பொருந்தும். ஆனால் பணி நிமித்தம் காரணமாக பெங்களூர், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தங்கிப் பணிபுரிந்து வருபவர்களுக்கு ஆகஸ்டு 5-ந் தேதி விடுமுறை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், சுமார் 10 சதவீதம் அளவுக்கு வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. பொதுத் தேர்தலாக இருக்கும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விடுமுறை கிடைத்துவிடும்.
ஆனால் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுவதால், இத்தொகுதிக்கு மட்டுமே பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் வெளியூரில் பணி நிமித்தமாக தனி நபர்களாகவும், குடும்பமாகவும் வசித்து வருபவர்களுக்கு விடுப்பு கிடைப்பது குறித்து வாக்காளர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
வெளியூரில் வசிக்கும் வேலூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கான விடுமுறை குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட வேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விடுப்பு கிடைத்தால் மட்டுமே அவர்களால் தங்களுடைய தொகுதிக்கு சென்று வாக்களிக்க முடியும். அதே நேரத்தில் வாக்குப் பதிவு சதவீதமும் கூடும்.
அதனால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என வேலூர் தொகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினியின் கோரிக்கையை ஏற்று அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக சென்னை ஐகோர்ட்டு அவருக்கு 30 நாள் பரோல் வழங்கியது.
கடந்த 25-ந் தேதி பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியுள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி தினமும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டு வருகிறார். இன்று 6-வது நாளாக கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் நளினி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தினமும் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட சிரமமாக உள்ளது. எனவே வீட்டிற்கே போலீசார் வந்து கையெழுத்து பெற்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மகள் திருமணம் குறித்து பேசுவதற்காக ஜெயிலில் உள்ள கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அழகுராணி கூறியதாவது:-
ஜெயிலில் இருந்து பரோலில் வந்த நளினி தினமும் காலை 10 மணிக்கு சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பரோலில் வந்துள்ளார்.
தற்போது போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட கடினமாக உள்ளது. கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை சிறைத்துறையிடம் தான் அளிக்க வேண்டும். ஆனால் அவர் பெறுநர் முகவரியில் மாவட்ட எஸ்.பி. என்று குறிப்பிட்டுள்ளதால் எஸ்.பி.யிடம் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையில் கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி, முருகன் சந்தித்து பேசி வருகின்றனர். தற்போது ஒருமாத பரோலில் வந்த நளினி வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்தித்து பேச அனுமதி அளித்து வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் (பொறுப்பு) உத்தரவிட்டார்.
இதையடுத்து வரும் 3-ந்தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலில் உள்ள முருகனை நளினி சந்தித்து பேசுகிறார்.






