என் மலர்tooltip icon

    வேலூர்

    நேற்று நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவு 72.62 சதவீதம் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது இது 3 முதல் 4 சதவீத வாக்குகள் குறைவாகும்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் 72.62 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.

    சட்டமன்ற தொகுதி வாரியாக, வேலூரில் 67.05 சதவீதம் பதிவாகி இருக்கிறது. அணைக்கட்டில் 75.04, கே.வி.குப்பத்தில் 82.62, சதவீத வாக்குகள் பதிவாகின. குடியாத்தம் தொகுதியில் 68.9 சதவீதமும், ஆம்பூரில் 70.51 சதவீதமும், வாணியம்பாடியில் 73.22 சதவீதமும் பதிவானது.

    கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது இது 3 முதல் 4 சதவீத வாக்குகள் குறைவாகும்.

    காஷ்மீர் பிரச்சனை எதிரொலியாக வேலூர் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட துணை ராணுவத்தினருக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களில் சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    ரெயில் நிலையம் சோதனை சாவடிகளில் கூடுதலாக போலீசார் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள் போலீசாரின் கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் பலத்த சோதனைக்கு பின்னர் பக்தர்கள் அனுதிக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

    மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. இதேபோல் சினிமா தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 20 கம்பெனிகளை சேர்ந்த 1,600 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வாக்கு எண்ணும் நாளான வருகிற 9-ந் தேதி வரை பணியில் ஈடுபட இருந்தனர்.

    தற்போது காஷ்மீர் பிரச்சினை காரணமாக அவர்கள் வருகிற 31-ந் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதற்கான உத்தரவு வாய்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமாயின் அவர்கள் உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர வாசல்களில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னர் பக்தர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மெட்டல் டிடெக்டர் சோதனை செய்யபடுகிறது. கோவில் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.94 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டு வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவீதமாக இருந்தது.

    அதன்பின்னர் பகல் 11 மணி நிலவரப்படி 14.61 சதவீதம் வாக்குகள் பதிவானது. மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஓட்டு போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

    தற்போது, மாலை 5 மணி நிலவரப்படி 62.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு:-

    குடியாத்தம் -67.25%

    அணைக்கட்டு -67.61%

    கே.வி.குப்பம் -67.1%

    வேலூர் -58.55%

    ஆம்பூர் -65.17%

    வாணியம்பாடி -52%
    வேலூர் சேண்பாக்கத்தில் மாட்டுவண்டி தொழிலாளியை வெட்டி கொன்று சாலையோரம் வீசியுள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த சேகர் (வயது 35). மாட்டுவண்டி ஓட்டி வந்தார். இன்று காலை சேண்பாக்கம் வளைவு அருகே சர்வீஸ் சாலையில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தார்.

    அவரது தலையில் அரிவாள், கத்தியால் வெட்டப்பட்டிருந்தது.

    இன்று காலை வாக்கிங் சென்றவர்கள் இதனைக் கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேகர் நேற்று இரவு யாருடன் வெளியே சென்றார் என விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பகல் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டு வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவீதமாக இருந்தது.

    வேலூர் தொகுதி

    11 மணி நிலவரப்படி 14.61 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    1 மணி நிலவரப்படி 29.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு:-

    வேலூர் 24.73 சதவீதம், அணைக்கட்டு 27.14 சதவீதம், கே.வி.குப்பம் 30.75 சதவீதம், குடியாத்தம் 32.43 சதவீதம், வாணியம்பாடி 30.21 சதவீதம், ஆம்பூர் 31.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.
    வேலூர்:

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.  பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும்.  வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.

    வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.  இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.

    வாக்காளர்கள் அனைவரும் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம்.  இந்த நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு ஆர்வமுடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இதனிடையே, குடியாத்தம் 6.79, அணைக்கட்டு 6.10, வாணியம்பாடி 6.29, வேலூர் 8.79, கே.வி. குப்பம் 8.85 மற்றும் ஆம்பூர் 7.76 சதவீதம் என்ற அளவில் வேலூர் மக்களவை தொகுதிகளில் அடங்கியுள்ள 6 சட்டசபை தொகுதிகளில் வாக்குகள் பதிவாகி உள்ளன. வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % வாக்குகள் பதிவாகி உள்ளன.
    வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் மக்களவை தொகுதிக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வள்ளலார் நகரில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    எந்த வேலையாக இருந்தாலும் ஒத்திவைத்துவிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. 100 சதவிகித வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்.

    வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    வேலூர்:

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

    பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று (திங்கட் கிழமை) காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    ஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று காலை மாதிரி வாக்குபதிவு நடைபெற்றது. முகவர்கள் மட்டும் பங்குகொள்ளும் இந்த வாக்குபதிவில் வாக்குபதிவு எந்திரத்தின் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது,  அதை தொடர்ந்து பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். தொடர்ந்து உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெறும்.

    வேலூர் தொகுதி

    வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.

    இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலை கண்காணிக்க பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி காதே சுதம் பண்டரிநாத், சிறப்பு செலவின பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி முரளிகுமார், தேர்தல் செலவின பார்வையாளர்களாக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்.சுக்லா, போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆதித்யகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் வேலூர் தொகுதியில் தங்கி இருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பாட் கருவிகளும், வாக்கு எண்ணிக்கை மையமான ராணிபேட்டையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்.

    9-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். யாருக்கு வெற்றி என்பது அப்போது தெரிந்துவிடும்.
    பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் நாளை திங்கட்கிழமை நடக்கிறது. ஓட்டு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது.

    இதற்காக 1553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 7500 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 3752 ஓட்டு பதிவு எந்திரங்களும், 1876 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 1876 விவிபேட் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

    வாக்கு பதிவு எந்திரம் மற்றும் தேர்தல் பொருட்கள் அனைத்து அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று அங்கிருந்து வாக்கு பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து ஆயிரத்து 351 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

     

    வேலூர் தொகுதி

    தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 30 அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகளை சேகரித்தார்.

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1,600 பேர் கொண்ட 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 ஆயிரம் போலீசாரும், 400 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்றியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. துணை ராணுவத்தினரும் அங்கு பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க 114 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ‘‘உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 57 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 890 கிராம் தங்கம், ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 13 கிலோ 800 கிராம் வெள்ளி, 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆம்பூரில் திருமண மண்டபத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

    அந்த மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்திருப்பதாக கூறி சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்தினர் மனு அளித்தனர். இதனை ஏற்று, நேற்று மாலை 6 மணி அளவில் தற்காலிகமாக 'சீல்' அகற்றப்பட்டு திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் மீண்டும் மண்டபத்துக்கு 'சீல்' வைக்கப்பட உள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது.

    வேலூரில் அ.தி.மு.க. சார்பில் இறுதிகட்ட பிரசாரமாக தொரப்பாடியில் தொடங்கி சத்துவாச்சாரி வரை வாகன பேரணி நடந்தது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    தி.மு.க. சார்பில் வேலூர் மண்டித் தெருவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கே.சி.அழகிரி, வைகோ, முத்தரசன், ரங்கராஜன், திருமாவளவன், காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, பாலகிருஷ்ணன், பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் இருசக்கர வாகன பேரணி நடந்தது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வருகிற 9-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகிறது. 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் தெரியவரும்.

    வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள குடியாத்தம் அரசு பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு திருமகள் கல்லூரி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் 11 கம்யூட்டர்கள் கொண்டு ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி இப்பள்ளியில் 29, 30,32 வார்டுகளுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம கும்பல் ஸ்மார்ட் வகுப்பில் இருந்த 11 கம்யூட்டர்கள், பிரிண்டர், போன் மற்றும் தேர்தல் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    திருட்டு நடந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள பள்ளி.

    இன்று காலை தேர்தல் பணிக்காக பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் பள்ளியின் 5 வகுப்பு அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு கம்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

    வருங்காலத்தில் செய்யப்போவதை வாக்குறுதியாக அளிக்கிறோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி சத்துவாச்சாரி ஆர்.டி.ஒ. ஆபீஸ் சாலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் தொகுதியில் 2-கட்டமாக 6 நாட்களாக பிரசாரம் செய்து வருகிறேன். பொதுமக்கள், பெண்கள் எங்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். இது எங்கள் வெற்றிக்கு சான்றாக அமைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஏப்ரல் மாதம் வேலூர் தேர்தல் நடந்து முடிந்திருக்க வேண்டும்.

    மத்திய பா.ஜனதா அரசு, மற்றும் அ.தி.மு.க. அரசு கூட்டணி அமைத்து வேலூர் தேர்தலை ரத்து செய்ய திட்டம் தீட்டினர். தேர்தல் கமி‌ஷன் வருமானவரி துறையினர் ரெய்டு என்ற பெயரில் அதனை நடத்தி முடித்தார்கள். 100 சதவீதம் தி.மு.க. தான் வெற்றி பெற போகிறது என்ற ஆதார பூர்வமான தகவல் வந்ததும் தி.மு.க.வின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக சூழ்ச்சி செய்து ரெய்டு என்ற பெயரில் தேர்தலை நிறுத்தினார்கள்.

    தி.மு.க.விற்கு அவப்பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்து தி.மு.க.வின் வெற்றியை தடுக்க திட்டமிட்டார்கள் அவர்களால் தேர்தலைத் தான் நிறுத்தி வைக்க முடிந்தது.

    வேலூரில் தி.மு.க.வின் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது மக்களிடம் அவர்களது சூழ்ச்சி எடுபடவில்லை அது தவிடுபொடியானது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 38 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதை கண்கூடாகப் பார்த்தோம் அதுவும் சாதாரண வெற்றியல்ல ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்.

    தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி காட்சி பொருளாகத்தான் உள்ளது. மக்களைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே கிடையாது. எப்படி ஊழல் செய்யலாம் எங்கு கமி‌ஷன் பெறலாம் என்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

    இன்று ஆங்கில பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது அதில் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்துகிறதா என்ற புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    தமிழகத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக மத்திய அரசு 2 ஆயிரத்து 394 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    அதனை செயல்படுத்தாமல் அப்படியே திருப்பி அனுப்பியுள்ளனர் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு 247 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. அதனை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

    கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பிற்காக 100 கோடி ஒதுக்கி கொடுத்துள்ளனர். அதில் 97 கோடியை திருப்பி அனுப்பிவிட்டனர். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி கடன் உள்ளிட்டவை வழங்க ரூ.23 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையும் வழங்கவில்லை மொத்தம் ரூ.3 ஆயிரத்து 677 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

    கையாலாகாத எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்து கொண்டு இருப்பதற்கு இதுவே சாட்சி. தேர்தல் பிரசாரத்தில் நான் ஒரு விவசாயி என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

    விவசாயி படம் அல்லது பாடல் பார்த்துவிட்டால் அவர் விவசாயியா? நானும் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். ரசிகன் தான் அவர் நடித்த விவசாயி திரைப்படத்தை ஏழு முறை பார்த்துள்ளேன் நம்ம தி.மு.க. கொடியை பிடித்துக் கொண்டு தான் அதில் வருவார். தொப்பி டீ சர்ட் பேண்ட் அணிந்து கொண்டிருப்பார். கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி விவசாயி... என பாடுவார்.

    சென்னை சேலம் எட்டு வழி சாலை போடுவதில் தவறில்லை. முன்னேற்றம் தேவைதான் ஆனால் அங்கு விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் 8 வழி சாலைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. அந்த தடையை உடைக்க உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர்.

    இதற்கு என்ன காரணம் தஞ்சை டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அவர்களைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று கூறுவதற்கு அருகதை இல்லை.

    தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறோம் ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது செய்த திட்டங்களை பட்டியலிட்டு கூறுகிறோம் வருங்காலத்தில் செய்யப் போவதை வாக்குறுதியாக அளிக்கிறோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி வெற்றி பெற்றதாக பிரசாரம் செய்து வருகின்றனர் அவர்களது தோல்வியை ஒப்புக்கொள்ள வெட்கப்பட்டு இப்படிக் கூறுகிறார்கள்.

    மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என தமிழக மக்களை கொச்சைப் படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நாங்கள் மிட்டாய் கொடுத்தோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்தா வெற்றி பெற்றீர்கள்.

    திருநெல்வேலி அல்வா வா டெல்லி அல்வா வா என எங்களால் கேட்டிருக்க முடியும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என சட்டசபையில் கூறியுள்ளோம். அதைத்தான் இங்கேயும் கூறுகிறேன் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட மக்களுக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். அப்போது துரைமுருகன் வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    அதனை ஏற்று வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வர நிதி ஒதுக்கி இங்கேதான் அடிக்கல் விழாவை நடத்தினோம்.

    அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் இந்த ஸ்டாலின்தான். அந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருந்தால் வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் கிடைத்திருக்கும். பொறுப்புக்கு வந்தவுடன் காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்.

    நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி வரவில்லை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றைக்கும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள் வேலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கடந்த 23 நாட்களில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இதுவரை ரெயிலில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    வேலூர்:

    சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) குடிநீரை ரெயில் வேகன்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஒரு ரெயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டு 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வீதம் ஒருநாளைக்கு 4 தடவை 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் கடந்த 12-ந் தேதி புறப்பட்டது. அந்த ரெயில் சென்னை சென்று வர தண்ணீர் பிடிக்க, இறக்க என மொத்தம் 16 மணி நேரம் ஆகிறது. இதனால் தினசரி ஒரே ஒரு ரெயிலில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்ல முடிந்தது.

    கூடுதலாக 3 ரெயில்கள் தர வேண்டும் என மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜஸ்தானில் இருந்து 50 வேகன் கொண்ட மற்றொரு ரெயில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த ரெயில் ஜோலார்பேட்டைக்கு 23-ந் தேதி வந்தது. அன்றிலிருந்து பகலில் ஒரு ரெயில் இரவில் ஒரு ரெயில் என சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    2 ரெயில்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் சென்னைக்கு தினமும் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.

    கடந்த 23 நாட்களில் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதிகளுக்கு இந்த குடிநீர் சப்ளை செய்யபடுகிறது. கூடுதலாக ரெயில் இயக்கினால் திட்டமிட்டபடி தினமும் 10 மில்லியன் குடிநீர் கொண்ட செல்ல முடியும்.

    அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×