search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த காட்சி.
    X
    காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த காட்சி.

    காஷ்மீர் பிரச்சனை எதிரொலி - தேர்தல் பாதுகாப்புக்கு வந்த துணை ராணுவத்தினருக்கு பணி நீட்டிப்பு

    காஷ்மீர் பிரச்சனை எதிரொலியாக வேலூர் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட துணை ராணுவத்தினருக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களில் சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    ரெயில் நிலையம் சோதனை சாவடிகளில் கூடுதலாக போலீசார் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள் போலீசாரின் கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் பலத்த சோதனைக்கு பின்னர் பக்தர்கள் அனுதிக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.

    மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. இதேபோல் சினிமா தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 20 கம்பெனிகளை சேர்ந்த 1,600 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வாக்கு எண்ணும் நாளான வருகிற 9-ந் தேதி வரை பணியில் ஈடுபட இருந்தனர்.

    தற்போது காஷ்மீர் பிரச்சினை காரணமாக அவர்கள் வருகிற 31-ந் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதற்கான உத்தரவு வாய்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமாயின் அவர்கள் உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர வாசல்களில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னர் பக்தர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மெட்டல் டிடெக்டர் சோதனை செய்யபடுகிறது. கோவில் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    Next Story
    ×