search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    வருங்காலத்தில் செய்யப்போவதை வாக்குறுதியாக அளிக்கிறோம் - முக ஸ்டாலின்

    வருங்காலத்தில் செய்யப்போவதை வாக்குறுதியாக அளிக்கிறோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி சத்துவாச்சாரி ஆர்.டி.ஒ. ஆபீஸ் சாலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் தொகுதியில் 2-கட்டமாக 6 நாட்களாக பிரசாரம் செய்து வருகிறேன். பொதுமக்கள், பெண்கள் எங்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். இது எங்கள் வெற்றிக்கு சான்றாக அமைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஏப்ரல் மாதம் வேலூர் தேர்தல் நடந்து முடிந்திருக்க வேண்டும்.

    மத்திய பா.ஜனதா அரசு, மற்றும் அ.தி.மு.க. அரசு கூட்டணி அமைத்து வேலூர் தேர்தலை ரத்து செய்ய திட்டம் தீட்டினர். தேர்தல் கமி‌ஷன் வருமானவரி துறையினர் ரெய்டு என்ற பெயரில் அதனை நடத்தி முடித்தார்கள். 100 சதவீதம் தி.மு.க. தான் வெற்றி பெற போகிறது என்ற ஆதார பூர்வமான தகவல் வந்ததும் தி.மு.க.வின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக சூழ்ச்சி செய்து ரெய்டு என்ற பெயரில் தேர்தலை நிறுத்தினார்கள்.

    தி.மு.க.விற்கு அவப்பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்து தி.மு.க.வின் வெற்றியை தடுக்க திட்டமிட்டார்கள் அவர்களால் தேர்தலைத் தான் நிறுத்தி வைக்க முடிந்தது.

    வேலூரில் தி.மு.க.வின் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது மக்களிடம் அவர்களது சூழ்ச்சி எடுபடவில்லை அது தவிடுபொடியானது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 38 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதை கண்கூடாகப் பார்த்தோம் அதுவும் சாதாரண வெற்றியல்ல ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்.

    தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி காட்சி பொருளாகத்தான் உள்ளது. மக்களைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே கிடையாது. எப்படி ஊழல் செய்யலாம் எங்கு கமி‌ஷன் பெறலாம் என்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

    இன்று ஆங்கில பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது அதில் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்துகிறதா என்ற புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    தமிழகத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக மத்திய அரசு 2 ஆயிரத்து 394 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    அதனை செயல்படுத்தாமல் அப்படியே திருப்பி அனுப்பியுள்ளனர் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு 247 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. அதனை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

    கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பிற்காக 100 கோடி ஒதுக்கி கொடுத்துள்ளனர். அதில் 97 கோடியை திருப்பி அனுப்பிவிட்டனர். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி கடன் உள்ளிட்டவை வழங்க ரூ.23 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையும் வழங்கவில்லை மொத்தம் ரூ.3 ஆயிரத்து 677 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

    கையாலாகாத எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்து கொண்டு இருப்பதற்கு இதுவே சாட்சி. தேர்தல் பிரசாரத்தில் நான் ஒரு விவசாயி என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

    விவசாயி படம் அல்லது பாடல் பார்த்துவிட்டால் அவர் விவசாயியா? நானும் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். ரசிகன் தான் அவர் நடித்த விவசாயி திரைப்படத்தை ஏழு முறை பார்த்துள்ளேன் நம்ம தி.மு.க. கொடியை பிடித்துக் கொண்டு தான் அதில் வருவார். தொப்பி டீ சர்ட் பேண்ட் அணிந்து கொண்டிருப்பார். கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி விவசாயி... என பாடுவார்.

    சென்னை சேலம் எட்டு வழி சாலை போடுவதில் தவறில்லை. முன்னேற்றம் தேவைதான் ஆனால் அங்கு விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் 8 வழி சாலைக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. அந்த தடையை உடைக்க உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர்.

    இதற்கு என்ன காரணம் தஞ்சை டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அவர்களைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயி என்று கூறுவதற்கு அருகதை இல்லை.

    தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறோம் ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது செய்த திட்டங்களை பட்டியலிட்டு கூறுகிறோம் வருங்காலத்தில் செய்யப் போவதை வாக்குறுதியாக அளிக்கிறோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி வெற்றி பெற்றதாக பிரசாரம் செய்து வருகின்றனர் அவர்களது தோல்வியை ஒப்புக்கொள்ள வெட்கப்பட்டு இப்படிக் கூறுகிறார்கள்.

    மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என தமிழக மக்களை கொச்சைப் படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நாங்கள் மிட்டாய் கொடுத்தோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்தா வெற்றி பெற்றீர்கள்.

    திருநெல்வேலி அல்வா வா டெல்லி அல்வா வா என எங்களால் கேட்டிருக்க முடியும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என சட்டசபையில் கூறியுள்ளோம். அதைத்தான் இங்கேயும் கூறுகிறேன் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட மக்களுக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். அப்போது துரைமுருகன் வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    அதனை ஏற்று வேலூர் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வர நிதி ஒதுக்கி இங்கேதான் அடிக்கல் விழாவை நடத்தினோம்.

    அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் இந்த ஸ்டாலின்தான். அந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருந்தால் வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் கிடைத்திருக்கும். பொறுப்புக்கு வந்தவுடன் காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்.

    நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி வரவில்லை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றைக்கும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள் வேலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×