என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களுடன் கபாலி. அடுத்த படம்: கபாலி துப்பாக்கி காட்டி மிரட்டிய காட்சி.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களுடன் கபாலி. அடுத்த படம்: கபாலி துப்பாக்கி காட்டி மிரட்டிய காட்சி.

    துப்பாக்கியை காட்டி வாட்ஸ் அப்பில் மிரட்டிய வேலூர் ரவுடி கைது

    துப்பாக்கியை காட்டி வாட்ஸ் அப்பில் மிரட்டிய வேலூர் ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த பொம்மை துப்பாக்கி, 2 கத்தி, 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வாட்ஸ் அப்பில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி வைத்துகொண்டு ஒருவர் பேசும் காட்சி வெளியானது.

    அவர் சுட்ருவேன் பார்த்துக்கோ... சுட்டு தள்ளிருவேன் அடடேய் சுட்டிடுவேன்... என் துப்பாக்கிதான் பேசும் சதக்... சதக்... பார்த்துக்கோ அவ்ளோதான் பார்க்கிறியா. பொம்மை துப்பாக்கினு நினைச்சியா பார்த்துக்கோ செத்திடுவ... என அவர் கூறுவதுபோல முடிகிறது.

    மேலும் மலர்கொடி என்ற பெண் தான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். நாமக்கல்லை சேர்ந்த நான் வேலூரை சேர்ந்த கபாலியுடன் 2 வருடம் குடும்பம் நடத்தினேன். அவர் என்னை கொடுமைப்படுத்தினார்.

    தற்போது துப்பாக்கி காட்டி மிரட்டுகிறார். என்னை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசும் காட்சி வெளியானது.

    துப்பாக்கி காட்டி மிரட்டும் ரவுடியை கைது செய்யும் வரை ஷேர் செய்யுங்கள் என பரப்பிக் கொண்டே இருந்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி வேலூர் மாவட்ட போலீசார் துப்புதுலக்கினர். இதில் மிரட்டல் விடுத்த நபர் வேலூர் பி‌ஷப்டேவிட் நகரை சேர்ந்த கபாலி (வயது 45) என்பது தெரியவந்தது.

    இவர் பி.எஸ்.என்.எல்.லில் பணியாற்றி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவரது முகவரியை அறிந்த தெற்கு போலீசார் கபாலியை தேடி சென்றனர். அவர் போலீசாரை பார்த்ததும் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    தற்போது போலீஸ் நிலையத்தில் இருந்து கபாலி பேசுவதுபோல மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் முதலில் என்னை மன்னித்து விடுங்கள் என் பெயர் கபாலி வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். எனது மனைவி மலர்கொடி சிங்கப்பூரில் வேலை செய்கிறார்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக 4 வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டேன். அவர் வரமறுத்ததால் போலியான பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டினேன். வேறு எந்த நோக்கமும் இல்லை.

    பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்திவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு பின்னால் அரசியல்வாதியோ எந்த ரவுடியும் இல்லை நான் சாதாரணமான மனிதன் வீடியோவை பார்த்து போலீசார் என்னை கைது செய்து தண்டனை கொடுத்துவிட்டார்கள்.

    வீடியோ வெளியிட்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என அதில் பேசுகிறார்.

    கபாலியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த பொம்மை துப்பாக்கி, 2 கத்தி, 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×