search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடியில் முக ஸ்டாலின் பிரசாரம் செய்த காட்சி
    X
    வாணியம்பாடியில் முக ஸ்டாலின் பிரசாரம் செய்த காட்சி

    அதிமுக ஆட்சியை காப்பாற்ற அமைச்சர்களுக்கும் மாதாமாதம் படி அளக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்

    அதிமுக ஆட்சியை காப்பாற்ற அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் மாதாமாதம் படி அளக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாணியம்பாடி டவுன், வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு, மிட்டூர், குருசிலாப்பட்டு, பூங்குளம், ஆலங்காயம், போன்ற பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடல் அலையே திரண்டு வந்திருப்பதுபோல் நீங்கள் அனைவரும் வந்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்க்கின்ற பொழுது நிச்சயமாக உறுதியாக நம்முடைய அணியின் சார்பில் 39வது எம்.பி.யாக நம் வேட்பாளர் கதிர் ஆனந்த் பாராளுமன்றத்திற்கு போகப் போகின்றார் என்பது உறுதி. எந்த மாற்றமும் கிடையாது.

    நியாயமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலிலேயே கதிர் ஆனந்த் அவர்கள் வெற்றி பெற்று அவர் பாராளுமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டு சதி செய்து சூழ்ச்சி வலையைப் பின்னி தி.மு.க.வின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ரெய்டு என்கின்ற ஒரு நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கழகத்தின் பொருளாளராக இருக்கக்கூடிய அண்ணன் துரை முருகன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

    நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொன்னோம் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீங்கள் அடமானம் வைத்திருக்கக்கூடிய அத்தனை நகைகளையும் வட்டியில்லாமல் மீண்டும் உங்களிடத்தில் ஒப்படைக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவோம் என்று உறுதி அளித்திருந்தோம்.

    ஆனால், ஆட்சிக்கு வர முடியவில்லை. தற்பொழுது அ.தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்கள் என்றால் நடக்காத உறுதி மொழிகளை எல்லாம் தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள் மிட்டாய் கொடுத்து வாக்கு வாங்கி விட்டார்கள் என்று, ஒரு தவறான பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    நான் கேட்கின்றேன் மக்களை ஏமாற்றியதால் 38 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நீங்கள் வென்ற ஒரே ஒரு இடத்தில் மிட்டாய் கொடுத்தீர்களா அல்லது அல்வா கொடுத்து அங்கிருக்கும் மக்களை ஏமாற்றினீர்களா? இதுதான் நான் கேட்கக்கூடிய கேள்வி. எனவே, இவற்றையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு கொச்சைப்படுத்தி பேசக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள் இவற்றிற்கெல்லாம் நீங்கள் சரியான பதில் தர வேண்டும்.

    அவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க ஆட்சியை அழிக்க முடியாது என்கிறார். நான் கனவு காண வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. விரைவில் அது நினைவாக நடக்கப் போகிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள்.

    மோடியின் தயவில் பி.ஜே.பி ஆட்சியின் ஒத்துழைப்போடு, இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதே தவிர வேறொன்றும் அல்ல அது தான் உண்மையும் கூட. எனவே இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்கும் நிலைத்து நீடித்து வைத்துக் கொள்ளவும், அவர்கள் மக்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த ஆட்சி நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அங்கு இருக்கக்கூடிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமல்லாமல், அமைச்சர்களுக்கும் மாதா மாதம் படி அளந்து கொண்டிருக்கின்றார்கள்.

    அ.தி.மு.க ஆட்சி சிறந்த ஆட்சி என்று பெயரெடுத்ததாம். அதாவது, ஐ.எஸ்.ஐ முத்திரை அவர்களுக்கு குத்தி விட்டார்களாம். எதில் ஐ.எஸ்.ஐ முத்திரை? ஊழலிலா, நீங்கள் அடிக்கின்ற கொள்ளையிலா, நீங்கள் வாங்கிய கமசனிலா. நான் கேட்கின்றேன் கொட நாட்டு விவகாரம் ஒன்று போதாதா அதைப்பற்றி பேசக்கூடாது என்று நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கினீர்களே?

    நான் கேட்கின்றேன், உங்கள் மீது ஊழல் இருக்கின்றது என்று சொல்லி சென்னை உயர்நீதி மன்றம் விசாரித்துவிட்டு சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதா, இல்லையா. தான் எந்தத் தவறும் செய்யவில்லை உத்தமபுத்திரன் என்று நினைத்திருந்தால், விசாரணையை சந்திக்கக்கூடிய ஆற்றல், தெம்பு, திராணி முதலமைச்சருக்கு இருந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று ஸ்டே வாங்கி இருக்கின்றீர்களே என்ன காரணம். எனவே அச்சம் இருக்கிறதல்லவா இது ஒன்றே போதும்.

    அதுமட்டுமல்ல, தற்போது சாமி சிலை கடத்தலில் 2 அமைச்சர்கள் மீது பொன்மாணிக்கவேல் அபிடவிட் தாக்கல் செய்திருக்கின்றார். இதைவிட மானக்கேடு வேறென்ன இருக்கமுடியும்.

    எனவே இந்த நிலையில் தான் இந்த ஆட்சி போய்க்கொண்டிருக்கின்றது இந்த ஆட்சிக்கு துணை நிற்கக் கூடிய வகையில் தான் மத்திய ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×