என் மலர்
வேலூர்
வேலூர்:
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், வேலூர் மாவட்டம் முழுவதும் மழைக்கான அறிகுறிகளின்றி காணப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சாரலுடன் லேசான மழை பெய்யத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 3 மணியளவில் மழையின் தாக்கம் மேலும் அதிகரித்து, அதிகாலை 5 மணி வரை மழை கொட்டியது.
பின்னர், படிப்படியாக குறைந்து மிதமான மழையாகத் தொடர்ந்து பெய்தது.
இரவு முழுவதும் பெய்த கனமழையால் வேலூர் மாநகரில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பஸ் நிலையம், காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம், தோட்டப் பாளையம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
திடீர் நகர், இந்திரா நகர், கன்சால் பேட்டை உள்ளிட்ட மாநகரின் தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன், ஏராளமான வீடுகளுக்குள் 5 அடி அளவுக்கு மழை தண்ணீர் புகுந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் இருந்த உடைமைகளும் சேதமடைந்தன.
இதேபோல், காட்பாடி வி.ஜி.ராவ் நகர், காந்தி நகர் விரிவாக்கம், சித்தூர் பஸ் நிலையம், ஓடைப்பிள்ளையார் கோவில், சில்க் மில் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், கனமழையால் காகிதப்பட்டறை டான்சி நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் அப்பகுதிகளில் சென்ற பல வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிக் கொண்டன.
கனமழையால் வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதேபோல், மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களிலும் கனமழை பெய்தது.
மாங்காய் மண்டி எதிரே உள்ள நிக்கல்சன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுகள் அங்குள்ள தடுப்புகளில் சிக்கியதால் மழை வெள்ளம் தொடர்ந்து செல்ல வழியின்றி மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் புகுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
கால்வாய் அடைப்பை சரிசெய்யாததால்தான் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததாகக் கூறி, அப்பகுதி மக்கள் மாங்காய் மண்டி எதிரே பெங்களூரு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.
வேலூரில் கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு ஒரே நாளில் 166 மி.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழைப் பொழிவு கணக்கெடுப்புப்படி, வேலூரில் அதிகபட்சமாக 165.7 மி.மீ (16 செ.மீ), இதற்கு அடுத்தபடியாக காட்பாடியில் 109 மி.மீ மழை பதிவானது.
கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூரில் வெள்ளிக்கிழமை இரவு அதிகபட்ச மழை பெய்திருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வேலூரில் 106 மி.மீ. பெய்ததே வேலூரில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை பொழிவாக இதுவரை இருந்து வந்தது. அதனை மிஞ்சும் வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாள் இரவில் 166 மி.மீ. மழை பெய்துள்ளது.
வேலூர்- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. வெள்ளத்திற்கு ஆரத்தி எடுத்தும் மலர்தூவியும் பொதுமக்கள் வரவேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆலங்காயம், பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர், காட்பாடியில் நேற்று இரவும் பலத்த மழை கொட்டியது.
இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளாக்காடாக காட்சியளித்தது.
அதிகபட்சமாக ஆலங்காயத்தில் 150 மி.மீ, ஆம்பூர்-80.6 மி.மீ. வாணியம்பாடி-85 மி.மீ, திருப்பத்தூர்-73 மி.மீ. மழை கொட்டியது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பலத்த முதல் மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 18.7 செ.மீ, போளூரில் 10.7 செமீ மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமணத்திற்காக கடந்த 25-ந்தேதி பரோலில் வந்தார்.
அவரது மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தற்போது வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் திராவிட இயக்க தமிழர் பேரவை பிரமுகர் வீட்டில் நளினி தங்கியுள்ளார்.
இவர் சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். போலீஸ் அனுமதியில்லாமல் அவர் வெளியில் எங்கும் செல்லக்கூடாது.

அத்திவரதர் தரிசனம் இன்று கடைசி நாளாகும். மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி கேட்ட நளினியின் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு உத்தரவின்படி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் ஜூலை 12-ந் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது.

ஒரு தடவை ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல ரூ.8.6 லட்சம் தமிழக அரசுக்கு செலவாகிறது. இதன் மூலம் ரெயில்வே நிர்வாகம் இதுவரை ரூ.4.73 கோடி சம்பாதித்துள்ளது.
12-ந் தேதியில் இருந்து நேற்று வரை 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த குடிநீர் சென்னை மாநகர மேற்கு பகுதிகளில் சப்ளை செய்யப்படுகிறது.
சென்னைக்கு திட்டமிட்டபடி தினமும் 10 மில்லியன் லிட்டர் கொண்டு செல்ல முடியவில்லை இதனால் கூடுதலாக 2 ரெயில்கள் இயக்க வேண்டுமென மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதையடுத்து 3-வது ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மேலும் ஒரு ரெயில் வரவழைக்கபட்டு இந்த வாரம் 3-வது ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரெயில்வே நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் திட்டம் தொடங்கி இன்றுடன் 1 மாதம் நிறைவடைந்த நிலையில், திட்டமிட்டப்படி 1 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன்-நளினி உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் உள்ளனர்.
நளினி, முருகன் மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக நளினி கடந்த 25-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நிபந்தனைகளுடன் பரோலில் வந்தார். தற்போது வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் திராவிட இயக்க தமிழர் பேரவை பிரமுகர் வீட்டில் தங்கியுள்ளார்.
இவர் சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை நளினி சந்தித்து பேசினார். அப்போது மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரியில் நளினியுடன் தங்கியுள்ள அவரது தாயார் பத்மா கூறியிருப்பதாவது:-
28 ஆண்டுகளுக்கு பிறகு எனது மகள் நளினி, பேத்தி ஹரித்ராவின் திருமண எற்பாடுகள் செய்ய ஒருமாதம் பரோலில் வந்துள்ளார். இதுவரை பேத்திக்கு மணமகனாக 4 பேரை பார்த்து வைத்துள்ளோம். பேத்தி ஹரித்ராவிடம் காண்பித்து மணமகன் இறுதி செய்யப்பட உள்ளார்.
லண்டனில் உள்ள பேத்தி ஹரித்ராவுக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு முடிந்த பிறகு தான் தமிழகத்திற்கு வர உள்ளார்.
இதற்கிடையே நளினிக்கு ஒருமாதம் பரோல் முடிவடைய உள்ளதால் மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்க கோரி நளினி தரப்பில் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
ஏற்கனவே ஒரு கைதிக்கு 6 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பரோலை அதிகரிப்பது குறித்து தகவல் சேகரித்து வருகிறோம்.
6 மாதம் பரோல் நீட்டிக்க விண்ணப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
நளினிக்கு கோர்ட்டு மூலமாக பரோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பரோல் நீட்டிப்பு தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கோர்ட்டு பரோல் நீட்டிக்காவிட்டால் வரும் 25-ந்தேதி மாலை வேலூர் பெண்கள் சிறைக்கு நளினி திரும்ப வேண்டும் என்றனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் இனியாரும் சால்வை அணிவிக்கக் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம். வைகோவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக ரூ.100 வழங்க வேண்டும் என கடந்த 9-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வைகோ கார் மூலம் வேலூர் வழியாக சென்றார்.
ஆம்பூரில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்க காத்திருந்தனர். வைகோவின் கார் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே வந்த போது பட்டாசு வெடித்து கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர், காரை விட்டு வைகோ கீழே இறங்கியதும் கட்சியினர் ஒவ்வொருவரும் அவரிடம் ரூ.100 வழங்கி செல்பி எடுத்துக்கொண்டனர்.
அப்போது, பஸ் நிலையம் அருகே நின்றிருந்த ஒருவர் ஓடி வந்து வைகோவுடன் போட்டோ எடுக்க தயாரானார்.
அவர் கட்சிக்காரர் என எண்ணிய வைகோ அவரிடம் பணம் கேட்டார். ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும், வைகோ அவரை திருப்பியனுப்பினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் விரக்தியுடன் திரும்பி சென்றார்.
இந்த சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
வைகோவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் ரூ.100 கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போட்டோ எடுக்க சென்ற நபர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை செல்போனில் யாரோ வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வரை சென்ற வைகோ ஆங்காங்கே நின்று கட்சியினரை சந்தித்து பணத்தை பெற்றுக்கொண்டு செல்பி எடுத்த வகையில் கட்சி நிதியாக ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் வசூல் ஆனதாக ம.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை:
ஈரோட்டில் இருந்து புறப்பட்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு பெட்டியின் (எஸ்-6) கழிவறைக்கு செல்லும் வழியில் 2 வாலிபர்கள் தகராறில் ஈடுபடுவதாக பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தனர்.
அந்த வாலிபர்கள் பொதுப்பிரிவு பெட்டியில் டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் ஏறி பயணம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர், ஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு 15-வது பட்டாலியனை சேர்ந்த போலீஸ்காரர் பெருமாளிடம் கூறினார்.
அவர் அங்கு சென்று வாலிபர்களை பொதுப்பிரிவு பெட்டிக்கு செல்லும்படி கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த வாலிபர்கள் திடீரென போலீஸ்காரர் பெருமாளை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த பயணிகள் வாலிபர்களை தடுத்தனர்.
இதுகுறித்து போலீஸ்காரர் பெருமாள் காட்பாடி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த ரெயில் காட்பாடிக்கு வந்து நடைமேடையில் நின்றதும் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டிக்கு சென்று அந்த வாலிபர்களை பிடித்து பிடித்து போலீஸ் நிலையத்துககு அழைத்து சென்று விசாரித்தனர்.
இருவரும் திருவாரூர் மாவட்டம் மான்னார்குடியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் அசோக்குமார் (வயது 31). திருச்சியை சேர்ந்த அறிவழகன் (31) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆற்காடு அருகே உள்ள வளையாத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 36). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சசிரேகா. இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர்.
பழனி நேற்று ஆரணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வளையாத்தூர் அரசு பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், ஆக.13-
பரோலில் வந்த நளினி வேலூர் ஜெயிலில் முருகனை இன்று சந்தித்து பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் தங்கி உள்ளார்.
தினமும் அவர், சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
சிறையில் இருக்கும்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால் இப்போது ஜெயிலில் விட்டு வெளியே இருப்பதால், பாதுகாப்பு காரணங்கள் காட்டி நளினி, முருகன் சந்திப்பு நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் என் மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியதுள்ளது. அதனால் முருகனை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நளினி மனு அளித்தார். அந்த மனுவை, சிறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இன்று நளினி, முருகன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியிருந்த நளினி யை சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு கையெழுத்து போட்டதும், நளினியை பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
நளினி, முருகன் சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது. அப்போது மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து 2 பேரும் உருக்கமாக பேசிக்கொண்டனர். சந்திப்பு முடிந்ததும், நளினியை சத்துவாச்சாரியில் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர். * * * நளினி * * * முருகன்
ராணிப்பேட்டை சிப்காட்டில் தனியார் கெமிக்கல் கம்பெனி இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்தர் (வயது 27), பூட்டுதாக்கு ராஜா (38), ராணிப்பேட்டை சுகேந்தர் (29), சத்திரம்புதூர் உதயகுமார் (48), வாணாபாடி மாரிமுத்து ஆகிய 5 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பைப்பில் இருந்து திடீரென விஷ வாயு வெளியானது. அதை சுவாசித்த சுகேந்தர் மயங்கி விழுந்தார். இதனை கண்ட மற்ற 4 பேரும் அவரை மீட்க முயன்றனர். அப்போது அவர்களும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த காவலாளி அனைவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் அனைவரையும் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்தர் பரிதாபமாக இறந்தார். மயக்கமடைந்த மற்ற தொழிலாளிகள் ராஜா, ராணிப்பேட்டை சுகேந்தர், உதயகுமார், மாரிமுத்து ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






