search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.சி.சண்முகம்
    X
    ஏ.சி.சண்முகம்

    முத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு

    வேலூரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம் என்று ஏ.சி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    இதற்கான காரணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஏ.சி. சண்முகம் அளித்த பதில் வருமாறு:-

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவாக நடைபெற நான்தான் காரணமாக இருந்தேன். எனது வெற்றி நூல் இழையில் பறிபோனது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், வேலூர் தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை வேலூர் வெற்றி பெற்ற தொகுதிதான். என்றாலும் என்னால் பாராளுமன்றத்துக்கு போக முடியவில்லை.

    தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தில் என்.ஐ.ஏ. சட்டமும், முத்தலாக் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எழுந்தது.

    இந்த பிரச்சினைகளால் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். மாலை 4 மணி வரை அவர்கள் வாக்களிக்கவில்லை. ஆனால் சில தலைவர்கள் இறங்கி பணியாற்றியதால் துரதிருஷ்டவசமாக 4 மணிக்கு மேல் ஓட்டு போட்டனர்.

    இதனால் நிலைமை மாறியது. ஆம்பூர், வாணியம்பாடி மக்கள் ஓட்டுப் போடாமல் இருந்திருந்தால் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோற்று இருக்கும். இந்த முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் வெற்றி கிடைக்கவில்லை. இது வேலூர் மக்களுக்கு ஏமாற்றம். எனக்கு பணியாற்ற வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தம்தான். மக்கள் என்னை கை விட்டாலும், நான் அவர்களை கைவிட மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×