என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை உள்பட 13 அரசு ஆஸ்பத்திரிகள் 90க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் 450 டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரியிலும் பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் டாக்டர்கள் பணியில் இருந்தனர். இதுதவிர உயிர்காக்கும் அறுவைச் சிகிச்சைகள் திட்டமிட்டபடி நடந்தன.
புற நோயாளிகள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவு டாக்டர்கள் யாரும் பணிக்கு வராததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சில ஆஸ்பத்திரிகளில் பயிற்சி டாக்டர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், ஆரணி, தண்டராம்பட்டு உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல செயல்பட்டன. புறநோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்றிரவு 10 மணியளவில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
பஸ்சை டிரைவர் மோகன் ஓட்டி வந்தார். கண்டக்டராக திருப்பத்தூர் அவ்வை நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 54) இருந்தார். பஸ் வேலூர் ரத்தினகிரி அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் பஸ் மோதியது. விபத்தில் பஸ்சின் இடது புறம் நொறுங்கியது. இதில் பஸ்சின் முன் சீட்டில் அமர்ந்திருந்த கண்டக்டர் சீனிவாசன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் அடையாளம் தெரியாத பெண் ஒருவரும் 2 வாலிபர்களும் இடிபாடுகளில் சிக்கினர்.
போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை கடப்பாறை கொண்டு நீக்கி மீட்டனர். அவர்கள் 3 பேரும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்பூர் அடுத்த உமராபாத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுமென்றே விஜயகாந்த் உடல் நிலை குறித்து பொது மக்களிடம் வதந்தி பரப்பி வருகின்றனர்.
வரும் ஜனவரி மாதம் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து மீண்டும் தீவிர அரசியலுக்கு விஜயகாந்த் வருவார் என்றார். அப்போது விஜயபிரபாகரன் கண்கலங்கினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அவர் பேசுகையில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பிரேமலதா கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியுடன் அயராது உழைத்து கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆற்காடு:
ஆற்காடு அருகே உள்ள மொழுகம்பூண்டியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (20) டிரைவர். இருவரும் நண்பர்கள். 2 பேரும் இன்று காலை சென்னைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். விளாப்பாக்கம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு நடு ரோட்டில் விழுந்தனர். பார்த்திபனுக்கும், வெங்கடேசனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன், வெங்கடேசன் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் பயங்கர நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்ககோவில், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட மாவட்டத்தின் முக்கிய ரெயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக - ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.
சாமிங் ஆபரேஷன் என்ற பெயரில் வேலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 435 தங்கும் விடுதிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உஷார் நிலையில் இருக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 4 கோபுர வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
வழக்கமாக கோவிலில் சுமார் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் மக்கள் கூடும் பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் நாராயணபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் ஆதி திராவிடர் காலனி மக்களுக்கென தனியாக மயானம் இல்லை. இதனால் இறந்தவர்களின் பிணத்தை பாலாற்றின் கரையோரம் வைத்து தகனம் செய்து வந்தனர். தங்களுக்கு தனியே மயானத்துக்கு இடத்தை ஒதுக்கித் தருமாறு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் அப்பகுதியை சேர்ந்த குப்பன் (வயது 55). சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது பிணத்தை பாலாற்றின் கரையோரம் தகனம் செய்ய உறவினர்கள் எடுத்துசென்றனர். ஆனால் அவ்வழியாக உள்ள நில உரிமையாளர்கள் வழிவிட மறுத்தனர். இதையடுத்து வேறுவழியின்றி குப்பனின் பிணத்தை பாடை கட்டி 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கி, பாலாற்றின் கரையோரம் தகனம் செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாசில்தார் முருகன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நாராயணபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், நாராயணபுரம் பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் தமிழக-ஆந்திர எல்லை பகுதியான ஜவ்வாதுராமசமுத்திரம் பகுதியில் உள்ள பனந்தோப்பு இடத்தில் அரசுக்கு சொந்தமான 3½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் ஆதி திராவிடர் காலனி மக்களுக்காக மயானத்துக்கு 50 சென்ட் இடத்தை தாசில்தார் ஒதுக்கீடு செய்தார்.
மேலும், அங்கு தகனமேடை அமைக்க கலெக்டரிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலெக்டர், தாசில்தார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் நேற்று ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், “இறந்த குப்பனின் பிணம் சாதி பாகுபாட்டின் காரணமாக பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே இது தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இது தொடர்பாக கலெக்டரிடம் விளக்கம் கேட்கப்படும்.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (72) இவர் திருப்பத்தூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அம்சவேணி (52). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் அருகே உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியில் உள்ள தனது மகன் பிரகாஷ் என்பவரது வீட்டில் தங்கி தனது மனைவிக்கு சிகிச்சை செய்து வருகின்றனர்.
நேற்று இரவும் குடும்பத்துடன் அனைவரும் பிரகாஷ் வீட்டிலேயே தங்கினர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தங்கவேல் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தங்கவேலு திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் கிராமப்பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி பச்சூர் அருகே உள்ள கோமட்டியூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தார் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
கடந்த 5 நாட்களாக இப்பகுதிக்கு தார்சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக போடப்பட்டு வரும் தார் சாலை தரமற்ற நிலையில் இல்லை என்று கூறி கோமட்டியூர் பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறிதது தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
எங்கள் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தார் சாலை போடப்பட்டு வருகிறது. புதியதாக போடப்படும் தார்சாலை தரமான நிலையில் இல்லை. 2 நாட்கள் பெய்த மழையிலேயே சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகிறது. இவ்வாறு இருந்தால் தார் சாலை நீண்ட காலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராது எனவே தரமான முறையில் தார்சாலையை போட வேண்டும் என்று கூறினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் கரிமாபாத் பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.
இதில் அவரது மனைவி தில்ஷாத், மகள்கள் ஜபின், அம்ரின், பாமிலா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வளையாம்பட்டு பகுதியில் சாரதாம்பாள் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு இடிந்து விழுந்தது.
வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் பாலாறுமண்ணாறு இணைக்கும் பகுதியில் மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழையால் வாணியம்பாடி மற்றும் கிராம பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது. அதனை பொதுமக்கள் பக்கெட்டுகளில் நிரப்பி வெளியேற்றினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (37). இவரது மனைவி ஸ்ரீபா. இவர்களுக்கு ஹரிணி (6), பிரித்திகா (3) என்று 2 மகள்களும், 3 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.
வேல்முருகனுக்கு சொந்தமான விவசாய நிலம் அவரது வீட்டின் அருகே உள்ளது. அந்த நிலத்தில் தற்போது வேர்க்கடலை பயிரிட்டுள்ளார்.
அந்த நிலத்தின் அருகே மாட்டு சாணம் கொட்டி வைத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு கொட்டப்பட்டிருந்த மாட்டு சாணத்தை அங்கிருந்து அப்பறப்படுத்தினர். இதனால் அங்கு 4 அடி பள்ளம் ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலத்தில் தேங்கிய மழைநீர் அங்கிருந்த 4 அடி பள்ளத்தில் நிரம்பியது. இந்நிலையில் நேற்று காலை நிலத்தின் அருகே மழையில் ஹரிணியும், தங்கை பிரித்திகாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டிற்கு வராததால் ஸ்ரீபா அவரது தாயார் குழந்தைகளை தேடினர். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் ஹரிணியும், பிரித்திகாவும் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
தகவலறிந்த அணைக்கட்டு தாசில்தார் (பொறுப்பு) குமார், வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






