search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் போலீசார் வாகன சோதனை
    X
    தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் போலீசார் வாகன சோதனை

    பயங்கரவாதிகள் ஊடுருவல்: தமிழக-ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதையடுத்து தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    பாகிஸ்தானை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் பயங்கர நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்ககோவில், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட மாவட்டத்தின் முக்கிய ரெயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழக - ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

    சாமிங் ஆபரே‌ஷன் என்ற பெயரில் வேலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 435 தங்கும் விடுதிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உஷார் நிலையில் இருக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 4 கோபுர வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    வழக்கமாக கோவிலில் சுமார் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மாவட்டத்தில் மக்கள் கூடும் பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×