என் மலர்
வேலூர்
வேலூர்:
காட்பாடியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32) சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா(26). கர்ப்பிணியாக உள்ள இவர் சாயிநாதபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு நேற்று வந்தார்.
தொடர்ந்து அருகில் கோவிலுக்கு நேற்றிரவு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அதே பகுதியில் உள்ள பஸ் நிலையம் அருகே தனது தாய் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது முகத்தில் துணி கட்டியபடியே அவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தீடீரென மோனிஷாவின் அருகில் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துள்ளனர்.
இதை சற்றும் எதிர்பாராத மோனிஷா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடிவருவதற்குள் பைக் கொள்ளையர் தப்பினர். அதே நேரம் அவர்கள் தங்க செயினை பறித்து இழுத்ததில் 2 பவுன் அறுந்து அங்கேயே விழுந்தது. இதனால் எஞ்சிய 3 பவுன் செயினுடன் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இது பற்றி தகவலறிந்ததும் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த வீராரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(32)வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு எற்பட்டு வந்தது. இதேபோல் கடந்த 7- ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த பிரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் இது பற்றி பிரியாவிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவியை பாத்துவிட்டு வீட்டுக்கு சென்ற ராஜேஷ் தீடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து ராஜேஷ் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, வேலூர் வழியாக பிறபகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து வேலூர் மற்றும் வேலூர் மார்க்கத்தில் அமைந்துள்ள பிற பகுதிகளான திருப்பத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
நாளை முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படும் என்று வேலூர் மண்டல பொது மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பரோலில் செல்ல விண்ணப்பங்கள் அளிப்பார்கள்.
அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு, எந்த வில்லங்கமும் இல்லாத பட்சத்தில் கைதி செல்ல விரும்பும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழங்கப்படும் அறிக்கை அடிப்படையில் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேலூர் சிறையில் உள்ள 47 கைதிகள் தங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு பரோல் வழங்குவது குறித்து ஜெயில் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 15-ந் தேதி முதல் பரோலில் விடுவிக்கப்பட உள்ளனர்.
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் இருந்து சைதாப்பேட்டை பகுதிகளுக்கு டிராக்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
நேற்றிரவு ஆற்காடு சாலையில் இருந்து சுப்பராம அய்யர் தெரு வழியாக சைதாப்பேட்டைக்கு தண்ணீர் டிராக்டர் ஒன்று சென்றது சுப்பராம அய்யர் தெருவில் உள்ள குறுகலான பகுதியில் திரும்பியபோது அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.
இதில் மின் ஒயர்கள் ஒன்றுக்கொன்று உரசி தீப்பொறிகள் பறந்தன. 100-க்கும்மேற்பட்ட வீடுகளில் பீஸ் போனது. மின்கம்பிகள் ஒரே நேரத்தில் தரையில் விழுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிகப்பட்டது. ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை தடை செய்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் விடிய விடிய தவித்தனர்.
இன்று காலையில் மீட்புப் பணிகள் நடந்தது. மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுப்பராம அய்யர் தெருவில் குறுகலான வளைவுகள் இருப்பதால் இதன் வழியாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
நாட்டறம்பள்ளி:
தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 24). டிப்ளமோ படித்த இவர் சென்னை குரோம்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் கல்லூரி மாணவி ஒருவர் தவறவிட்ட செல்போனை வைத்துக் கொண்டு அந்த செல்போனில் ட்ரூகாலரில் பெண்கள் பெயர் வந்தால் அந்த பெண்களின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசி ஆசைவார்த்தை கூறி பல்வேறு ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி வந்துள்ளார்.
மேலும் வினோத் மற்றொரு செல்போன் எண்ணிலிருந்து தான் ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் அடிக்கடி செக்ஸ் தொல்லை செய்து மிரட்டி வந்துள்ளார்.
இதேபோன்று நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் வினோத் ஆபாச வார்த்தைகள் பேசி, ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தில் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சென்னை குரோம்பேட்டை பகுதியில் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு செல்போன் கடை எதிரே நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த வினோத்தை போலீசார் கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
அவரை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர் நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 70-க்கும் அதிகமான பெண்களுக்கு ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பியதும் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி அவர்களை மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வினோத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சோலூர் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சாரதி (வயது 22). இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் ஷாலினி (20). இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள கோவிலில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலை பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இருதரப்பு உறவினர்களும் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதனை கண்ட போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் காட்பாடி பகுதியில் ஆந்திராவை சேர்ந்த பெண்கள் கை குழந்தைகளுடன் பிச்சை எடுத்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலில் வாடிய முகத்துடன் குழந்தைகளை வைத்து கொண்டு பிச்சை கேட்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு அவர்கள் வைத்திருப்பது சொந்த குழந்தைதானா? அல்லது கடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த நிலையில் காட்பாடியில் இன்று குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டம் நடந்தது.
இதனை ஓடைபிள்ளையார் கோவில் அருகே கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
அந்த இடத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவரிடம் கலெக்டர் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் கூறினார்.
குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த மல்லேஸ்வரி என்பது தெரியவந்தது.
அந்த பெண் மற்றும் குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பெண் மற்றும் குழந்தையை காட்பாடி கசத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து இது போன்று குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் பெண்களை பிடித்து ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
வேலூர்:
வேலூர் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை களைகட்டுகிறது. வேலூர் சுண்ணாம்பு கார தெருவில் நடந்த அதிரடி சோதனையில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சத்துவாச்சாரி பகுதியில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. தினமும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்கின்றனர். விருதம்பட்டு காட்பாடி பகுதியில் காட்டன் சூதாட்டம் களை கட்டுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து வேலூர், சத்துவாச்சாரி விருதம்பட்டு, அணைக்கட்டு பகுதிகளை சேர்ந்த தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் தெற்கு போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு முரளிகிருஷ்ணன், சத்துவாச்சாரி தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தீனதயாளன், வேலூர் வடக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார், அணைக்கட்டு தனிப்பிரிவு ஏட்டு சரவணன், விருதம்பட்டு தனிப்பிரிவு ஏட்டு பாலமுரளி ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டனர். அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனிப்பிரிவு போலீசார் மாற்றம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் வேலூர் திருவண்ணாமலை, ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரக திற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் 110 பேரை பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார். அவர்களுக்கு பணியிடம் மாற்றத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
போலீசாரின் இந்த அதிரடி இடமாற்றம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
பொதுப்பணித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம் ஏரிகுத்தி ஊராட்சியில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் அரசு உயர்நிலைப் பள்ளி, குடியாத்தம் வட்டம் தேவரிஷிக்குப்பத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரம் செலவில் அரசு உயர்நிலைப்பள்ளி, காட்பாடி வட்டம் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் அருகே 36 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 கோடியே 45 லட்சம் மதிப்பில் மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், முழுமையாக விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஏஐடியூசி மற்றும் சி.ஐ.டி.யு. ஆகிய தொழிற்சங்க அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் குறைந்தபட்ச ஊதிய தொகையாக ரூ.18 ஆயிரம் வழங்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழையபென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் கலைந்து சென்றனர்.






