search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரியில் 47 ஆயிரம், கொள்ளிடத்தில் 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
    X

    காவிரியில் 47 ஆயிரம், கொள்ளிடத்தில் 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

    • காவிரியில் 47 ஆயிரம், கொள்ளிடத்தில் 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது
    • பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அம்மா மண்டபம் மூடல்

    திருச்சி:

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி அம்மாநில அரசு உபரிநீரை திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கான ஜூன் 12-க்கு பதிலாக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் அங்கு நீர்மட்டம் குறைந்து வந்தது.

    ஆனால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்தது. கடந்த வாரம் ஒரே நாளில் 10 அடி வரை உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே முழுவதுமாக காவிரியில் திறந்து விடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நாமக்கல், ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. நேற்று முன்தினம் மாலை 60 ஆயிரம் கனஅடி தண்ணீர வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து உள்ளது. மாயனூரில் இருந்து காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து இருகரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் முக்கொம்பு மேலணையை அடைந்தது. நேற்று முன்தினம் முக்கொம்பு வந்த 60 ஆயிரம் கனஅடி தண்ணீரில் காவிரியில் 20 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடத்தில் 40 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டது. முன்னதாக காவிரி கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. கடந்த சில மாதங்களாக டெல்டா மாவட்டங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் போதிய அளவு மழை இல்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும் அது பற்றாக்குறையாகவே இருந்தது. இந்த நிலையில் தற்போது காவிரியில் கூடுதல் தண்ணீர் வருவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இன்று காலை முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் 47 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கொள்ளிடத்தில் 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முன்னதாக கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் திறப்பால் அங்கு குடிசை அமைத்து முகாமிட்டிருந்த சலவை தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அத்துடன் காவிரி ஆற்றில் முதலை நடமாட்டமும் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் அதிக அளவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் புனித நீராடுவார்கள். மேலும் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க வருபவர்களும் காவிரி ஆற்றில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் 47 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆற்றில் வளர்ந்திருந்த நாணல் செடிகளே தெரியாத அளவுக்கு தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.

    எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அம்மா மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டு போர்டு வைத்துள்ள போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு உரிய அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு தினங்கள் நெருங்கி வரும் நிலையில் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், புனித நீராட வரும் பக்தர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

    Next Story
    ×