என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட இளம்பெண்ணுக்கு கணவர், குழந்தைகள் இருப்பதை நேரில் பார்த்த வாலிபர் அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கீழ்பாலூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் கணவர், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்தப் பெண்ணுக்கும் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த பூபதி (24) என்ற வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

    அந்த நட்பால் பெண்ணுடன் பூபதிக்கு காதல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து பூபதியுடன் பழகி வந்துள்ளார்.

    இதை தொடர்ந்து நேற்று பூபதி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் குழந்தைகள் இருப்பதை பார்த்ததால் பூபதி அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பூபதி அந்த பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து பூபதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புதுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் திடீரென வீசிய காற்றால் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    வாணாபுரம்:

    வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான நவம்பட்டு, தச்சம்பட்டு, அல்லிகொண்டப்பட்டு, வெறையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்தசில நாட்களாகத் திடீரென காற்று வீசியது. இதனால் நவம்பட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் பெரும்பாலும் கரும்பு பயிரிடப்படுகிறது. ஒருசில இடங்களில் கரும்பு பயிரிட்டு 5 மாதங்கள் ஆகிறது. தற்போது கரும்பு நன்றாக செழித்து வளர்ந்திருந்தது. கடந்தசில நாட்களாக திடீர் திடீரென வீசிய காற்றாலும், மழையாலும் கரும்பு வேருடன் சாய்ந்து சேதமாகி விட்டது. பலர் கடன் வாங்கி விவசாயம் செய்தும் எந்தப் பயனும் இல்லை, என வேதனை தெரிவித்தனர்.
    தூசி அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 20 ஆடுகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 20 வெள்ளாடுகளை சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்துவிட்டு தூங்கி விட்டார்.

    மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பட்டியில் அடைத்து வைத்திருந்த 20 வெள்ளாடுகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் பாலகிருஷ்ணனின் மகன் தனுஷ்கோடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முகநூல் மூலம் அறிமுகமான பெண் வீட்டில் சென்னை வாலிபர் தற்கொலை

    திருவண்ணாமலை:

    முகநூல் மூலம் அறிமுகமான பெண் வீட்டில் சென்னை வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கணவர், குழந்தைகள் இருப்பதை மறைத்து காதல் செய்ததை அறிந்ததால் அந்த வாலிபர் சோக முடிவை எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கீழ்பாலூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் கணவர், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கும் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி (24) என்ற வாலிபருக்கும் முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நட்பால் பெண்ணுடன் பூபதிக்கு காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து காதல் வார்த்தைகள் பதிவிட்டு பூபதியுடன் பழகி வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று பூபதி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததும் மனமுடைந்த பூபதி அந்த பெண்ணின் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பூபதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    திருவண்ணாமலை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்தது. இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் காலை 11 மணிக்குமேல் சாரல் மழை பெய்யதொடங்கியது. தொடர்ந்து பெய்த சாரல் மழை நேரம் செல்ல செல்ல வலுத்து பெய்ய தொடங்கியது. மாலை 2 மணிமுதல் 3 மணிவரை கனமழை பெய்தது .

    இதனால் திருவண்ணாமலை சன்னதி தெரு, பெரியார் சிலை சந்திப்பு, அவலூர்பேட்டை சாலை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்தமழையால் ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    அவலூர்பேட்டை சாலையில் ரெயில்வே கிராசிங் பகுதியில் காட்டாறு போல மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களை ஓட்ட முடியாமல் தள்ளி சென்றனர். தண்டராம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் தண்டராம்பட்டு அருகே உள்ள சே.ஆண்டாப்பட்டு முருகர் கோவில் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவர் குடிசை வீடு இடிந்து விழுந்தது.

    அப்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

    இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் குப்பன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், துணிகள் ஆகியவற்றை வழங்கினர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த திடீர் மழையால் வெயிலில் வாடிய பயிர்கள் புத்துணர்வு பெற்று பச்சை பசேலென காட்சி தருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளத்தில் குதித்து, டவரில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அச்சமடைந்துளள விவசாயிகள் இந்த திட்டத்தை கைவிட கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த மங்கலம் மேல் பாலானந்தல் கிராமத்தில் நேற்று பவர்கிரிட் நிறுவனத்தினர் விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க லாரிகளில் பொருட்களை கொண்டு சென்றனர். அங்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மின் கோபுரம் அமைக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விளைநிலங்களில் திரண்டு நின்று மின்கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் திட்டமிட்டபடி மின் கோபுரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் ஆவேசமடைந்த விவசாயிகள் அசோக்குமார், அவரது தாய் சரசு, உறவினர்கள் வேலாயுதம், மணிவண்ணன் ஆகியோர் அந்தப் பகுதியில் ஏற்கனவே அமைத்திருந்த உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைத்தால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மங்கலம் போலீசார் மற்றும் பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் மின்கம்பங்களை ஏற்றி வந்த லாரியில் திருப்பி அனுப்பினர் . இந்த போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு மின் கோபுரங்களில் இருந்து விவசாயிகள் கீழே இறங்கினர்.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தம்(வயது53) என்ற பெண்ணுக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது.

    இந்த நிலத்தில் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் உயர் மின் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்காமல் வேட்டவலம் போலீசார் பாதுகாப்புடன் லட்சுமி காந்தம் நிலத்திற்கு சென்றனர்.

    அங்கு அனுமதி பெறாமல் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் லட்சுமிகாந்தம் சம்பவ இடத்திற்கு சென்று இழப்பீடு வழங்காமல் ஏன் பணியை தொடங்குகிறீர்கள்? என கேட்டார் .ஆனால் அதிகாரிகள் உரிய பதில் கூறாமல் பணியை தொடர்ந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த லட்சுமிகாந்தம் விவசாயநிலத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

    இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அதன்பின்னரே லட்சுமிகாந்தம் பள்ளத்தில் இருந்து வெளியில் வந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்டது.

    ஆரணி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த பெரியண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50), விவசாயி. இவர், வரப்பில் டிராக்டரை ஓட்டிச்செல்லும் போது திடீரென டிராக்டர் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த குமாருக்கு ஆனந்தி என்ற மனைவியும், அருண், சங்கர், ரமேஷ்குமார் என 3 மகன்களும் உள்ளனர்.
    கலசப்பாக்கம் அருகே டெய்லர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடியை சேர்ந்த கோபால் மகன் துரைக்கண்ணு (வயது 44). டெய்லர்.

    இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் துரை என்பவருக்கும் 2 சென்ட் நிலம் வாங்குவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துரைக்கண்ணுக்கும், துரைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் அதிகரித்து ஆத்திரமடைந்த துரை அவரது மனைவி தீபா மற்றும் அப்பா முனுசாமி ஆகியோர் துரைக்கண்ணுவை உருட்டு கட்டையால் தாக்கி கத்தியால் தலையில் வெட்டினர்.

    இதில் படுகாயமடைந்த துரைக்கண்ணன் மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள்அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று மாலை துரைக்கண்னு பரிதாபமாக இறந்தார்.

    இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. கிளை செயலாளர் துரை மற்றும் அவரது மனைவி தீபா, அப்பா முனுசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    திருவண்ணாமலையை அடுத்த வடஆண்டாபட்டு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கு சொந்தமான ஹாலோ பிரிக்ஸ் கல் தயாரிக்கும் பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் திரிலோகி (வயது 30) என்பவர் வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார்.

    இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனபாலை கைது செய்தனர்.
    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 69), விவசாயி. இவரது மனைவி அமுதா (59). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மனோகரன் தனது மனைவி மற்றும் மகன்கள் அருண்குமார், சரவணன், மகள் ரெஜினா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் அருகில் அமர்ந்து இருந்தனர்.

    அவர்களை கண்டு சந்தேகமடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 7 பாட்டில்களில் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், தங்களுக்கு சொந்தமான விளைநிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றோம்.

    அந்த நபர் நிலத்தை அடமான பத்திரம் எழுதுவதாக கூறிவிட்டு தங்களுக்கு தெரியாமல் கிரைய பத்திரமாக எழுதி கொண்டு தற்போது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இதனால் குடும்பத்துடன் தீக்குளிக்க வந்ததாகவும், மேலும் தங்களது நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் முறையிட வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை மேலும் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    தேர்தல் விழிப்புணர்வு பட்டுச்சேலை வடிவமைப்பில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்திற்கு, நெசவாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
    ஆரணி:

    தமிழகத்தில் பாரம்பரியமிக்க கைத்தறி பட்டு சேலைகள் உற்பத்தியில், ஆரணி சிறப்பிடம் பெற்று வருகிறது.

    வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேர்தல் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் பொறித்த பட்டுச்சேலையை வடிவமைக்க திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் சீனிவாசன் மேற்பார்வையில் அத்திமலைப்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ‌ஷங்கரி பாலச்சந்திரன் மற்றும் நெசவாளர்கள் பெருமாள், குமார், வெங்கடேசன், வடிவமைப்பாளர் பிரபு ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பட்டு சேலையை தயாரித்துள்ளனர்.

    தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு நோக்கில் தயாரித்த பட்டுச்சேலையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கூட்டுறவு சங்கத் தலைவர் ‌ஷங்கரி பாலச்சந்தர், மேலாளர் கணேசன் மற்றும் நெசவாளர்கள் காண்பித்தனர்.

    அப்போது தேர்தல் விழிப்புணர்வு பட்டுச்சேலை வடிவமைப்பில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்திற்கு, நெசவாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அந்த பட்டுச்சேலையை கூட்டுறவு சங்கத்தின் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள 38 உண்டியல்கள் கோவில் இணை ஆணையர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அலங்கார மண்டபத்தில் தைமாத பவுர்ணமி முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு உண்டியல் வசூல் பணத்தை தனித்தனியாக பிரித்து எண்ணி கணக்கிட்டனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள 38 உண்டியல்கள் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதில் மொத்தம் ரூ.1 கோடியே 34 லட்சத்து 27ஆயிரத்து 677 ரொக்கம், 317 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி ஆகியவை இருப்பது தெரியவந்தது.

    முன்னதாக உண்டியல் பணம் எண்ணும் பணியில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் மணியம் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×