என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி பேச்சியம்மாள் மற்றும் 2 மகன்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு வந்த அவர் திடீரென தான் பையில் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீதும், அவரது மனைவி மற்றும் மகன்கள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் ஓடிச் சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் நம்பேடு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 4 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். நிலத்தின் அளவு குறைவாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் நிலத்தை அளந்துள்ளார். அதில் 3 சென்ட் நிலம் தான் இருப்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக சுரேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இந்த நிலையில் நிலத்தை விற்ற நபர் சுரேசுக்கு விற்ற இடத்தில் வீடு கட்ட முயன்று வருவதால், தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறினார்.

    அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு மேல் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தினால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்
    திருவண்ணாமலை:

    இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளது. தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை குழுவினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும், வீடியோ கண்காணிப்பு குழுவினரும் தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அவர்கள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச் சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச் சாவடி அலுவலர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 24 ஆயிரம் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டுப்போட வரும் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன் தடுப்பு பணிகளும் நடந்து வருகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் சிவிஜில் (CVIGIL) என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தச் செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை மனுவாக புகைப்படம், வீடியோ எடுத்து ஸ்பாட் புகார் அளிக்கலாம். புகார்கள் தொடர்பாக அருகில் உள்ள பறக்கும் படை குழு அல்லது நிலை கண்காணிப்புக் குழுவினர் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் ‘1950’ என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.
    மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள படக் கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 34), லாரி டிரைவர் இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் சந்திரசேகர் நேற்று காலை 7 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் மாமண்டூர் கிராமத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    சுருட்டல் சாலையில் சென்றபோது எதிேர கல்குவாரியில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிவந்த டிப்பர் லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இதனிடையே மாமண்டூர் சுருட்டல் சாலையில் கல்குவாரியில் இருந்து வரும் டிப்பர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது.

    எனவே லாரிகள் செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சந்திரசேகரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுப்பாளையம் கூட்டுரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே பர்வதமலையில் சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள தென்மாதி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற பர்வத மலை உள்ளது.

    இந்த மலை 4,665 அடி உயரம் கொண்டதாகும். இந்த மலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பர்வத மலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சென்னையை சேர்ந்த பக்தர்கள் 3 பேர் ஒரு காரில் பருவதமலைக்கு வந்தனர்.

    காரை சென்னை ஆவடியை சேர்ந்த முபாரக் அலி (வயது37) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    அவர் பர்வதமலையில் ஏறிய 3 பக்தர்களுடன் மலையேறிச் சென்றார். பாதி தூரம் சென்றதும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை என்று கூறி அங்கேயே மலை மீது படுத்துள்ளார்.

    மற்ற 3 பேரும் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தனர். அப்போதும் கார் டிரைவர் அதே இடத்தில் படுத்திருப்பதை கண்டு அவரை எழுப்பினர்.

    இதில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பருவதமலை பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முபாரக் அலி உடலை மீட்டு மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.

    இது தொடர்பாக கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலையேறி சென்ற கார் டிரைவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பர்வதமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போளூர் அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருடன் பணிபுரியும் சிவா என்பவரும் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். போளூர் பைபாஸ் சாலையில் குண்ணத்தூர் கிராமம் வந்தபோது எதிரில் அதிவேகமாக வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிவா தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விமல்ராஜ் காயங்களுடன் தப்பினார். இது குறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதிய வகை கொரோனா பரவுவதால் திருவண்ணாமலையில் மார்ச் மாத பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலை

    நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 3.50 மணியளவில் தொடங்கிய இன்று (சனிக்கிழமை) மதியம் 2.45 மணிக்கு நிறைவடைகிறது. புதிய வகை கொரோனா பரவுவதால் இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இருப்பினும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் நேற்று பகலில் இருந்தே கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
    சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் பூங்குணம் கிராமத்தில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கண்ணமங்கலத்தில் தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் திருமணம் நின்றது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பகுதியை சேர்ந்த நர்சிங் பயிற்சி முடித்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இவர்கள் திருமணம் நேற்று காலை கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்புடன், விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்த நிலையில் நேற்று மணமக்கள் இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கான பணிகளில் தீவிரமாக இருந்தனர். மணமகளுக்கு அலங்காரம் செய்ய சென்றபோது நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று கூறி திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.

    இதைக்கேட்டு இருவீட்டாரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணப்பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் மணமகள் விடாப்பிடியாக திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.

    இதனால் மணமகனின் பெற்றோர், உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி அறியாத உறவினர்கள் சிலர் திருமணத்திற்காக மண்டபத்துக்கு வந்தனர். அப்போது திருமணம் நின்றது குறித்து தெரிந்த உடன் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மணப்பெண்ணின் இந்த திடீர் முடிவுக்கு படிப்புதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் கண்ணமங்கலத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை :

    கொரோனா காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 3.50 மணியளவில் தொடங்கி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 2.45 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    பெரணமல்லூர் அருகே வீட்டின் பூட்ைட உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அருகே உள்ள முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 53). இவரது மகள் உமாராணி (24). இவர்கள் ஒரு வீட்டின் மாடியில் குடியிருந்து வந்தனர்.

    கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு இவர்கள் சுற்றுலா சென்றனர். பின்னர் ஊருக்கு திரும்பியபோது வீட்டின் முன் பகுதி கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன். நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம், லேப்டாப், கியாஸ் சிலிண்டர் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

    பூட்டப்பட்டிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் பச்சையம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை ேதடி வருகிறார்.
    ஆரணி அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அலுவலர்கள் ஆரணி - செய்யாறு நெடுஞ்சாலையில் நேற்று அலுவல் நிமித்தமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த படவேட்டான் என்பவருக்கு சொந்தமான லாரியில் மணல் கடத்தி வரப்பட்டது. அந்த லாரியை அவர்கள் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக லாரியை ஓட்டிவந்த நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், என்று ஆரணியில் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    ஆரணி:

    ஆரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தி.மு.க. தலைவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகிறாரே?

    அமைச்சர்: அவர்கள் கையில் சரக்கு ஏதும் இல்லை. இதனால் ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டே தான் இருக்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு நமக்கு நாமே என்று கூறி கொண்டு கலர் கலராக சட்டை, பேண்டு போட்டுக்கொண்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டு, ஆட்டோவில் சென்று, டீக்கடையில் டீ சாப்பிட்டார், என்ன நடந்தது? மக்களுக்கு நன்றாகத் தெரியும். கரும்புத்தோட்டத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், அங்கு சிமெண்டு சாலை அமைக்கிறார்கள். அதை, மக்கள் நன்றாகப் புரிந்து செயல்படுவார்கள். கொரோனா தொற்று பரவல் காலத்திலும் தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, தன் உயிரையும் துச்சமாக மதித்து பணியாற்றினர். மக்கள் தான் எஜமானர்கள். எப்போதும் ஆளுங்கட்சி மீது ஒரு எதிர்ப்பு இருக்கும். ஆனால், இப்போது அந்த எதிர்ப்பு இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234-க்கு 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது.

    மேற்கண்டவாறு நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
    ×