search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கலசப்பாக்கம் அருகே மூச்சுத்திணறால் சென்னை கார் டிரைவர் மரணம்

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே பர்வதமலையில் சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள தென்மாதி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற பர்வத மலை உள்ளது.

    இந்த மலை 4,665 அடி உயரம் கொண்டதாகும். இந்த மலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பர்வத மலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சென்னையை சேர்ந்த பக்தர்கள் 3 பேர் ஒரு காரில் பருவதமலைக்கு வந்தனர்.

    காரை சென்னை ஆவடியை சேர்ந்த முபாரக் அலி (வயது37) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    அவர் பர்வதமலையில் ஏறிய 3 பக்தர்களுடன் மலையேறிச் சென்றார். பாதி தூரம் சென்றதும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை என்று கூறி அங்கேயே மலை மீது படுத்துள்ளார்.

    மற்ற 3 பேரும் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தனர். அப்போதும் கார் டிரைவர் அதே இடத்தில் படுத்திருப்பதை கண்டு அவரை எழுப்பினர்.

    இதில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பருவதமலை பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முபாரக் அலி உடலை மீட்டு மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.

    இது தொடர்பாக கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலையேறி சென்ற கார் டிரைவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பர்வதமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×