search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் தகவல்

    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்
    திருவண்ணாமலை:

    இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளது. தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை குழுவினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும், வீடியோ கண்காணிப்பு குழுவினரும் தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அவர்கள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச் சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச் சாவடி அலுவலர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 24 ஆயிரம் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டுப்போட வரும் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன் தடுப்பு பணிகளும் நடந்து வருகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் சிவிஜில் (CVIGIL) என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தச் செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை மனுவாக புகைப்படம், வீடியோ எடுத்து ஸ்பாட் புகார் அளிக்கலாம். புகார்கள் தொடர்பாக அருகில் உள்ள பறக்கும் படை குழு அல்லது நிலை கண்காணிப்புக் குழுவினர் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் ‘1950’ என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.
    Next Story
    ×