search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர் மழை- 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

    திருவண்ணாமலை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்தது. இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் காலை 11 மணிக்குமேல் சாரல் மழை பெய்யதொடங்கியது. தொடர்ந்து பெய்த சாரல் மழை நேரம் செல்ல செல்ல வலுத்து பெய்ய தொடங்கியது. மாலை 2 மணிமுதல் 3 மணிவரை கனமழை பெய்தது .

    இதனால் திருவண்ணாமலை சன்னதி தெரு, பெரியார் சிலை சந்திப்பு, அவலூர்பேட்டை சாலை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்தமழையால் ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    அவலூர்பேட்டை சாலையில் ரெயில்வே கிராசிங் பகுதியில் காட்டாறு போல மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களை ஓட்ட முடியாமல் தள்ளி சென்றனர். தண்டராம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் தண்டராம்பட்டு அருகே உள்ள சே.ஆண்டாப்பட்டு முருகர் கோவில் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவர் குடிசை வீடு இடிந்து விழுந்தது.

    அப்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

    இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் குப்பன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், துணிகள் ஆகியவற்றை வழங்கினர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த திடீர் மழையால் வெயிலில் வாடிய பயிர்கள் புத்துணர்வு பெற்று பச்சை பசேலென காட்சி தருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×