என் மலர்
திருவள்ளூர்
- பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
- காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
பூந்தமல்லி:
தமிழக சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது முக்கிய கேவில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இதனை அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி பழனி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மண்டல இணை ஆணையர் .குமரதுரை, துணை ஆணையர், செயல் அலுவலர் சித்ராதேவி, உதவி ஆணையர் கார்த்திகேயன், கோவில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி சீனிவாசன், குன்றத்தூர் முருகன் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வழக்கறிஞர் ஒருவரை மருத்துவர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி வழக்கறிஞருடன் மோதலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவரை மருத்துவர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி வழக்கறிஞருடன் மோதலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. மருத்துவரை கைது செய்ய கோரி மருத்துவமனையை முற்றுக்கையிட்டு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென முகேஷ் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசினர்.
- சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே நாட்டுவெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (வயது25). வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று இரவு 11 மணியளவில் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் அதே பகுதியில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென முகேஷ் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசினர். இதில் ஒரு குண்டு மட்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் முகேஷ், தீபன், ஜாவித் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிர் தப்பிக்க ஓட முயன்றனர்.
ஆனால் மர்ம கும்பல் அவர்கள் 3 பேரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தீபன், ஜாவித்துக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தீபனின் கை, தோள் பட்டையிலும் காயம் ஏற்பட்டு இருந்தது.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது முகேஷ் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான முகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயம் அடைந்த தீபனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும், ஜாவித்துக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. முகேசின் தம்பி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாசுடன் பழகி வந்து உள்ளார். ஆகாசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து முகேஷ் தனது தம்பியை ஆகாசுடன் பழகுவதை தவிர்க்க கூறினார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாசுக்கு வெட்டு விழுந்தது. இதில் அவரது காது அறுந்தது.
இதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போது கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தை திருவள்ளூர் துணைப் போலீஸ் சூப்பிரண்டு, தமிழரசி, மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் பார்வையிட்டனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த முகேசின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். மோப்பநாய் நிக்கி வரவழைக்கப்பட்டது. கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு கிடைத்தது எப்படி? இதில் ரவுடி கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார்.
- ஐகோர்ட்டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்துள்ள களாம்பாக்கத்தில் காதல் விவகாரம் கார ணமாக 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6-ந்தேதி இரவு சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்த ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு சென்றபோது ஆதரவாளர்கள் திரண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது காதல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப் பஞ்சாயத்து செய்தது தொடர்பாகவும், போலீசார் விசாரணைக்கு சென்றபோது ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியது குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீஸ் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விசாரணைக்கு செல்லும்போது கூட்டமாக ஆட்களை திரட்டிக்கொண்டு செல்லக்கூடாது என்றும் தனியாகவே செல்ல வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
இதனை ஏற்று பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. இன்று காலை 10 மணி அளவில் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆதரவாளர்கள் யாருமின்றி தனி ஆளாகவே பூவை ஜெகன்மூர்த்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
இதையடுத்து போலீசார் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். காதல் விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் உங்களை தொடர்பு கொண்டு எந்தெந்த மாதிர யான உதவிகளை கேட்டார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார். பூந்தமல்லி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது தான் களாம்பாக்கம் கிராமத்துக்கு சென்று காதல் ஜோடியை வீடு புகுந்து தூக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படியே கடந்த 6-ந்தேதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செயல்பட்டுள்ளனர். ஆனால் காதல் ஜோடி அங்கு இல்லாததால் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்தி உள்ளனர்.
அதுவே இப்போது பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்படி காதல் விவகாரத்தில் அரங்கேற்றப்பட்ட கடத்தல் பின்னணி பற்றிய முழுமையான தகவல்களையும் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் இருவரும் போனில் பேசிய உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் விவரங்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறார்கள். ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடத்தப்படும் விசாரணை என்பதால் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையிலான போலீசார் கேள்விகளை கேட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் முடிவிலேயே அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், ஜெகன்மூர்த்தியிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் சிறுவன் கடத்தல் வழக்கில் அவரது பங்கு என்ன? எப்படி திட்டம் தீட்டப்பட்டுள்ளது? என்பது போன்ற தகவல்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதனை மையமாக வைத்தே முன்ஜாமின் மனு மீது ஐகோர்ட்டு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட்டுவருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
- லோகநாதன் கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவரது மனைவி வாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார். லோகநாதன் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.
மேலும் அவர், ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ. 15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லோகநாதன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். ஆனால் அதனை அவரால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் லோகநாதன், மகள் ஜஷ்வந்திகாவுடன் வெளியே செல்வதாக மனைவி வாணியிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. கணவர் லோகநாதனின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதட்டம் அடைந்த வாணி தனது கணவர், மகள் மாயமானது குறித்து புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர்களை போலீசார் தேடிவந்தனர்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் திருவள்ளூர்- புட்லூர் ரெயில் நிலையத்துக்கு இடையே லோகநாதன் தனது மகள் ஜஷ்வந்திகாவுடன் சேர்ந்து அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரின் உடல்களும் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லோகநாதனின் மனைவி வாணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கணவர் மற்றும் மகளின் உடல்களை பார்த்து கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. லோகநாதன், தனது மகள் ஜஷ்வந்திகா மீது மிகுந்த பாசம் வைத்து இருந்தார். இதனால் தற்கொலை முடிவை எடுத்த போது அவர் தனது மகளை விட்டு செல்லமனமின்றி அவளையும் உடன் அழைத்து சென்று இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லை காரணமாக லோகநாதன், மகளுடன் சேர்ந்து ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்நது.
அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? லோகநாதன் யார்-யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருந்தார். யாரேனும் பணத்தை கேட்டு மிரட்டினரா? என்று அவரது செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லோகநாதனின் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிறகே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- கவரப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களை சீரமைக்கும் பணிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும், நாளை மறுநாளும், பொன்னேரி- கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று 18 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரை இன்று காலை 10 மணி வரை புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிறகே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதையடுத்து இடைப்பட்ட நேரங்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையம் வரை மட்டுமே புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் மற்றும் வியாபாரிகள் என பல்வேறு தரப்பு பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் பயணிகள் பொன்னேரி வரை பஸ்சில் வந்து, அதன் பின்னர் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு பயணம் செய்தனர். இதனால் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்களில் ஏறி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்றனர்.
- அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது.
- ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
பொன்னேரி:
பழவேற்காட்டை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பழவேற்காடு ஏரி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 20-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை தரைதளம் ஆங்காங்கே இடிந்தும் அடிக்கடி விஷ பூச்சிகள் உள்ளே செல்வதால் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
நாளுக்கு நாள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் முறையான சிகிச்சை பெற முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
எனவே பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
ஆஸ்பத்திரியில் காவலாளிகள் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டிய கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மரம், செடி, கொடிகள் வளர்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் இந்த கட்டிடத்தில் இருந்து பாம்புகள் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து விடுகின்றன என்றனர்.
- தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வல்லூர் கூட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றன.
- போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வல்லூர் கூட்டு சாலையில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், கடல்நீரை குடிநீராக்கும் திட்ட நிலையம், ஐ.ஓ.சி.எல். நிறுவனம், நிலக்கரி முனையகம் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு செல்வதற்காக தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வல்லூர் கூட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் இந்த சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தும், பல போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து விபத்தினை தடுக்க செங்குன்றம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலன் தலைமையில் போக்குவரத்து போலீசார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன், தற்காலிக தடுப்பு சுவர்களை மீஞ்சூர் வல்லூர் சாலையில் பயன்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் சாலையின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். மேலும் கூட்டு சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகவும் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தவறி விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்தியாவந்தனம் செய்யும் போது மாணவர்கள் 3 பேரும் படிக்கட்டில் இருந்து தவறி குளத்தில் விழுந்துள்ளனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சேலையூர் மடத்தில் பயின்றுவந்த ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் ஆகியோர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
- இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும்
இந்த நிலையில், இன்று காலை திருத்தணி கோவிலில் நடைபெற்ற திருமணம் சினிமா பட பாணியை மிஞ்சும் அளவுக்கு இருந்ததால் அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து பார்ப்போம்:-
பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி (21). பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா (19). இருவரும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். முதலில் நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலர்களாக மாறினர்.
இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இன்று காலை, திருத்தணி கோவிலுக்கு வந்த காதல் ஜோடி திருமணத்திற்கு தயாரான போது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மணக்கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, "எங்களது மகளை கடத்தி வந்து கட்டாயத் திருமணம் செய்யப் பார்க்கிறாய்" என வாலிபரை நோக்கி கூச்சலிட்டனர்.
இதையடுத்து, காதலியை அழைத்து சென்று விடுவார்கள் என்று உணர்ந்து உஷாரான காதலன், பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். ஒருபுறம் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், திருத்தணி கோயில் சன்னதியில் திருமணம் செய்துக் கொண்டதாக காதல் ஜோடி தெரிவித்தது. இதையடுத்து, இருவரும் மேஜர் என்பதால், போலீசார் மணமக்களை அனுப்பிவைத்தனர்.
- லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
ஆந்திரா மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மலர்செல்வி தலைமையிலான போலீசார் செங்குன்றம், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். அப்போது பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆழ்குடி முதலியார் தெருவைச் சேர்ந்த காளீஸ்வரன் (25) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர்.
திருவள்ளூர்:
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி செல்லும் ரெயில்கள் திருவாலங்காடு ரெயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். மின்சார ரெயில்கள், சரக்கு ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் போக்குவரத்திற்கு இந்த ரெயில்பாதை முக்கியமானதாக உள்ளது.
இதில் திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் "லூப் லைன்" பாதை உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர். இதனால் அங்கிருந்த சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

ரெயில் பாதையில் சிக்னல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த திருவாலங்காடு நிலைய அலுவலர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் அருகே இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்-நட் மற்றும் இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி எடுத்துச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பிரதான தண்டவாளத்தில் இருந்து லூப்லைனுக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அவ்வழியே மற்ற பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

இதுகுறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரவு நேரம் என்பதால் லூப்லைனை உடனடியாக சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. பிரதான தண்டவாளத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால் அவ்வழியே மற்ற ரெயில்கள் பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டன.
தகவல் அறிந்ததும் தெற்கு ரெயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.ஈஸ்வர ராவ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத், தமிழக ரெயில்வே ஐ.ஜி ஏ.ஜி.பாபு திருத்தணி டி.எஸ்.பி.கந்தன், கைரேகை நிபுணர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். சென்னையில் இருந்து மோப்ப நாய்கள் ஜான்சி, தாராவும் வரவழைக்கப்பட்டன.
போலீசார் மற்றும் அதிகாரிகள் தண்டவாளத்தில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய்கள் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது.
அதிகாலை முதல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணி அளவில் தண்டவாள இணைப்புகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டது. பின்னர் அரக்கோணத்தில் இருந்து வந்த சரக்கு ரெயிலை சரி செய்யப்பட்ட தண்டவாளத்தில் இயக்கி சரிபார்த்தனர். திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்து உள்ள நிலையில் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவாலங்காடு அருகே தண்டவாளத்தில் இருந்து போல்ட்-நட்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெயிலை கவிழ்க்கும் முயற்சியாக இது நடந்து இருக்கலாம் என்று ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அரிச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப்லைனில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டதால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது.
சரக்கு ரெயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
இந்தநிலையில் தற்போது மீண்டும் திருவாலங்காடு அருகே அதேபோல் தண்டவாள லூப்லைன் பகுதியில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.






